
ஒரு ரசிகர் தனது ஆதர்ச நடிகரை வைத்துப் படம் எடுத்தால் எப்படி எடுக்கலாம். கார்த்திக் சுப்பாராஜுக்கு பேட்ட. லோகேஷ் கனகராஜுக்கு விக்ரம். பிரிதிவிராஜ் சுகுமாரனுக்கு லூசிபர். அதுபோல அஜித் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு குட் பேட் அக்லீ.
ஆனால் பிரச்னை என்னவென்றால் அவர் அப்படி நினைத்ததோடு அல்லாமல் பழைய படங்களையே நகாசு வேலை பார்த்துப் படம் முழுதும் காட்சிகளாக வைத்தது தான். இது வாலி. இது பில்லா. இது ரெட். இது தீனா. இது அமர்க்களம். இது மங்காத்தா என்று படம் முழுதுமே சொல்லிக் கொண்டேவா இருப்பது. அதெல்லாம் தான் பார்த்து ரசித்த வெற்றிப் படங்களாக்கியாயிற்றே. அத்தனை படங்களையும் ஒரே படமாகப் பார்க்க முடியுமா.
காட்சிகள் போதாதென்று வசனங்கள், பாடல்களிலும் அஜித் நடித்த படங்களின் பட்டியல். இது அஜித்தோடு நிற்கவில்லை. பாடல்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் (இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன்), வித்யாசாகர் பாடல்கள் (தொட்டுத் தொட்டுப் பேசும்) எனத் தொடர்ந்து இறக்கி இசையமைப்பாளர் நான் தான் என்பதை ஜி வி பிரகாஷே மறக்குமளவு அதிலும் கலந்து அடித்து விட்டார்கள் பாவம். பேருக்கு அவரும் இரண்டு பாடல்கள் இசையமைத்து இருக்கிறார். அதுவும் படத்தின் அமர்க்களத்தில் காணாமல் போய்விட்டது. ஆனால் பின்னணி இசையில் படத்தின் மூடுக்கு ஏற்றவாறு கலந்தடித்திருக்கிறார்.
தல என்று சொல்ல வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டதால் ஒன்று ஏ கே அல்லது ஹெட் என்று படம் முழுதும் யாராவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
சுனில், மற்றும் பிரசன்னாவை அடியாள்களாகவே மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்திலிருந்து வைத்தது பற்றாதென்று சிம்ரனையே நடிக்க வைத்து வாலியின் எக்ஸ்டென்க்ஷன் இதுவோ என்று நினைக்க வைத்து விடுகிறார்கள். இவையெல்லாம் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் முயற்சிகள் என்பதெல்லாம் சரி. படம் சீரியசாக இருக்க வேண்டாம். முயற்சிகள் கொஞ்சமாவது அப்படி இருக்கலாமல்லவா. அங்கே தான் இந்தப் படம் பொறுமையைச் சோதிக்கிறது.
படம் முழுதும் அஜித் ரசிகர்கள் விசிலடிக்க, கைதட்ட, கத்திக் கொண்டாடக் காட்சிகள் வைத்தால் போதும் என்று நினைத்திருக்கிறார் ஆதிக். மற்ற ரசிகர்களும் படம் பார்க்க வேண்டாமா. லாஜிக் எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். கமர்ஷியல் படங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். கடுகளவேனும் நம்பகத் தன்மை வேண்டாமா? கதையைப் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே என்று நினைக்கிறீர்களா?
உலகமே நடுங்கும் கேங்ஸ்டர் AK. அவர் மனைவி ரம்யா (திரிஷா). மகன் விஹான் (கார்த்திகேயா தேவ்). நல்லவிதமாகத் திருந்தி மகனின் பதினெட்டாவது வயதில் தான் அவனைப் பார்ப்பேன் என்று சபதம் செய்து விட்டுச் சிறைக்குச் செல்கிறார் அஜித். அவனுக்கு ஒரு பிரச்னை என்றதும் வெளியில் வருகிறார். மீண்டும் பழைய கேங்ஸ்டராக மாறுகிறார். மகனின் இந்த நிலைக்குக் காரணமான கேங்ஸ்டர் கும்பல்களை அழித்து மகனைக் காப்பாற்றுகிறார். அர்ஜுன் தாஸ், பிரபு, ஜாக்கி ஷராப், ராகுல் தேவ், ரெடின் கிங்ஸ்லி, ப்ரியா வாரியார், ஒரே ஒரு காட்சிக்காக யோகிபாபு போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். யாராலும் தொடமுடியாதவர் அஜித் என்று காட்ட இவர்கள் கொரியாவின் டாங் லி, ஜான்விக், மணி ஹீஸ்ட், ப்ரொபஸர் வரை சென்றது தான் இவர்கள் மொத்தக் கதையையும் ஸ்பூப் ஆகச் சொல்ல நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தைக் கொண்டு வருகிறது.
நடிப்பைப் பொறுத்த வரை அஜித் மொத்தப் படமும் தன் தோளில் தான் என்று சுமந்திருக்கிறார். தன்னுடைய ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை ஒரு மாற்றுக் குறைவு இல்லாமல் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு படத்தின் ரெபரென்ஸ் வரும் போதும் அதை அழகாக மறுவுருவாக்கம் செய்திருக்கிறார். தன்னுடைய தொழில் எதிரி என்று ரசிகர்கள் இன்றும் அடித்துக் கொள்ளும் விஜய்யின் வசனத்தைக் கொஞ்சம் கூடத் தயக்கமின்றிச் சொல்லி நான் போட்டிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று காட்டியிருக்கிறார்.
ஏற்கனவே சொன்னது போல் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தான் ஆராதிக்கும் நடிகரை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்பட்டாரோ அப்படி எல்லாம் காட்டிய வரையில் ஓகே. 'நான் அவர் ரசிகன். என் படத்தை அவர் ரசிகர்கள் மட்டும் கொண்டாடினால் போதும். வேறு எது குறித்தும் கவலைப்படமாட்டேன். கதை, திரைக்கதை போன்றவற்றில் பெரிதாகப் பெர்பெக்க்ஷன் எல்லாம் தேவையில்லை. பரபரவென்று படம் நகர வேண்டும். பிரம்மாண்டமான செட்கள், வெளிநாடு லொகேஷன். வேகமான கார் துரத்தல்கள், வண்ணமயமான காட்சிகள், ரசிகர்கள் எழுந்து குதிக்கும் அளவு பின்னணி இசை. இவை இருந்தால் போதும். இது என்னுடைய உலகம். இதில் நுழைந்து நம்பிப் பார்த்து ரசிப்பவர்கள் ரசியுங்கள்' என்று படம் எடுத்திருக்கிறார்.
இதே போன்ற உலகம் தான் மார்க் ஆன்டனியிலும். ஓவர் த டாப் என்று சொல்வார்கள். இது அதுக்கும் மேல என்று தைரியமாகச் சொல்லிக் கொள்ளலாம். இயக்குநரின் இந்த ரசிகர்களுக்கான ஆராதனையில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜமும் தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டியும். தனது கதாபாத்திங்களுக்கான தேடலில் கதை முக்கியம் என்று தனது மாஸ் பிம்பங்களை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு அவ்வப்போது சில படங்கள் நடிப்பார் அஜித். நேர்கொண்ட பார்வை, விடாமுயற்சி போன்றவை உதாரணம். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். பழைய தலயாகத் திரும்பி வாருங்கள் என்று அவரை மீண்டும் மடை மாற்றி விட்டிருக்கும் படம் தான் குட் பேட் அக்லீ.