

எதிர்பாராமல் இடறும் சில படங்கள் அட என்று சொல்ல வைத்து விடும். அப்படியொரு படம் தான் facing el chapo.
படத்தின் ஹீரோ ஒரு போலீஸ் ஆபீசர். இரண்டு மகள்கள். மனைவி. வீட்டுக் கடன் என்று வாழும் சராசரி மனிதர். அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறார். இதனால் உண்டாகும் பணத்தேவை அவருக்குக் கலக்கத்தைக் கொடுக்கிறது. தேவையை ஈடுகட்ட நைட் ஷிப்ட் செய்ய முடிவு செய்கிறார். கடத்தல் காரர்கள், போதை மருந்து, மாபியா எனக் குற்றங்கள் அதிகம் நிகழும் நகரம். போதாக்குறைக்கு அவருடைய பார்ட்னர் புதியவர். நாயகனுக்கு இன்னொரு பிரச்சனை உண்டு. பணியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மனிதர்கள் சிலர் கொல்லப் படுகின்றனர். அதுவும் அவருக்குக் கெட்ட கனவாக வந்து கொண்டே இருக்கிறது.
இவர்கள் இருவரும் இரவுப் பணியில் இருக்கும் நேரம் நகரில் ஒரு துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அதில் மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் தலைவனான எல் சாபோ என்பவன் தன்னுடைய செக்யூரிட்டி எல் சோலோ என்பவனுடன் தப்பித்து விடுகிறான். அரசாங்கமே அவன் கையில். அப்படிப்பட்டவனை இவர்கள் மடக்கிப் பிடித்து விடுகிறார்கள். இதன் பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.
படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் இது நடந்து விடுகிறது. இதற்குப் பிறகு இந்த வில்லன் கும்பலுக்கும் காவல்துறைக்கும் கப்பல் படை வீரர்களுக்கும் நடக்கும் போராட்டம் தான் கதை. இந்தக் கதையை வைத்து இரண்டு மணி நேரம் சண்டை என்று அதகளம் ஆக்கியிருக்கலாம். ஆனால் இயக்குநர் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏதாவது நடக்குமோ என்ற பரபரப்பு டென்ஷன் ஒவ்வொரு நொடியும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள்.
கொஞ்சம் கூடக் கலங்காமல் வில்லன் இவர்களை எதிர்கொள்ளும் விதம். கூட்டாளிகளுக்குள் ஏற்படும் புரிதல் எனக் கதை நகர்கிறது. அதுவும் போலீஸ்காரர்களாக இருந்தாலும் யாரை நம்புவது. யார் இவனுடைய கைக்கூலி என்பதெல்லாம் தெரியாமல் அவர்கள் படும் அவஸ்தையை அற்புதமாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார் இயக்குநர் சாவா கார்டாஸ், பெரிய சண்டை வரப்போகிறது என்று தொடங்கும் போதெல்லாம் ஒரே நிமிடத்தில் முடிந்து விடுகிறது. என்னடா என்று யோசித்தாலும் அந்த டென்ஷன் நமக்குக் குறைவதில்லை.
இது ஓர் உண்மைச் சம்பவம் என்று சொல்லப்படுகிறது. 'ஆபரேஷன் பிளாக் ஸ்வான்' என்ற பெயரில் அமெரிக்காவும் மெக்சிகோவும் இணைந்து செயல்பட்ட ஒரு போராட்டம். அதைத் திரைக்கு மாற்றும் போது சேர்க்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் கொண்டு சென்று விட்டார்கள்.
படத்தின் மிகப் பெரிய மைனஸ் என்றால் அது கிளைமாக்ஸ் தான். அதுவரை அவர்கள் கொடுத்த அழுத்தத்துக்கு அது கொஞ்சம் கூட வலுச் சேர்க்கவில்லை. சப்பென்று முடிந்தது போலத் தான் இருந்தது. இந்த மாதிரிப் படங்களுக்கு ஒரு அட்டகாசமான ஆக்ஷன் கிளைமாக்ஸ் இன்னும் வலு சேர்த்து இருக்கும்.
பார்க்கத் தொடங்கிவிட்டால் பத்தே நிமிடத்தில் ஒரு படம் நம்மை இழுத்து விடும். முழுதும் முடிந்த பிறகு தான் எழுவோம். Facing el chapo அப்படியொரு படம் தான்.
இந்த விமர்சனத்தைப் படிப்பதன் மூலம், எந்தவித வீண் நேர விரையமும் இன்றி ஒரு சிறந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படத்தின் பிளஸ், மைனஸ்களைத் தெரிந்துகொண்டு, இன்றிரவு நீங்கள் பார்க்க வேண்டிய படத்தைத் துல்லியமாகத் தேர்வு செய்யலாம்.