மாஸ் ஆக்‌ஷன், செம காமெடி: ஆப்பிள் டிவியின் 'மேட்ச் பாக்ஸ்' படம் எப்படி?

ஜான் சீனா நடிப்பில் வெளியாகியுள்ள புதிய ஆக்‌ஷன் படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.
மேட்ச் பாக்ஸ்
மேட்ச் பாக்ஸ்
நா.மதுசூதனன்

படிப்பு: பி காம் மற்றும் இதழியல் முதுநிலை டிப்ளமோ. ஆர்வம்: கட்டுரை/சிறுகதைகள் எழுதுதல் பிடித்தது : சினிமா, ஓ டி டி, நாடகங்கள்குறித்த விமர்சனங்கள் எழுதுதல். கிரிக்கெட், டென்னிஸ் தொடர்பான கட்டுரைகள். மெட்ராஸ் பேப்பர் என்ற இணைய வார இதழில் கடந்த இரண்டாண்டுகளாகவும் ஜூலை 2024 முதல் கல்கி ஆன்லைனிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். மிஸ்டர் சம்சாரி என்ற பெயரில் முகநூலில் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதி வருகிறேன். பொழுதுபோக்கு: தமிழ், ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது, கிரிக்கெட் பார்ப்பது.

Updated on: 

படம் போட்டு விட்டால் மட்டும் போதும், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்; நாமும் பார்த்து முடித்துவிடலாம். அப்படியொரு படம் தான் ‘மேட்ச் பாக்ஸ்’.

ஒரு சி.ஐ.ஏ. உளவாளி. ஒரு முக்கியமான அணு ஆயுதம் தவறான கைகளுக்குச் சென்று விடுகிறது; அதை மீட்டு வர வேண்டும். அந்த முயற்சியில் அவனுடைய சிறுவயது நண்பர்களும் இவனுடன் சேர்ந்து மாட்டிக்கொள்கின்றனர். அனைவரும் சேர்ந்து அதை மீட்டார்களா? அமெரிக்காவைக் காப்பாற்றினார்களா? இதுதான் கதை. "இது ஒரு கதையா, இதையெல்லாம் எவ்வளவு பார்த்துவிட்டோம்!" என்று கேட்கிறீர்களா? வேறு வழியில்லை, இது போன்ற கதைகள் வந்துகொண்டுதான் இருக்கும். புதிது புதிதாய்க் கதைகளுக்கு அவர்கள் மட்டும் எங்கே போவார்கள்?

உளவாளியாக ஜான் சீனா; நண்பர்களாக ஜெஸிக்கா பீல் உள்பட பலர். ஜெஸிக்கா மேல் சிறுவயதிலேயே ஜானுக்கு ஒரு கண். காதலைச் சொல்லத் தயங்கும் ‘இதயம்’ முரளியாகவே இருந்து விடுகிறார். இந்த நண்பர்கள் ஒரு முக்கியப் பாத்திரத்தின் மறைவின் போது ஒன்று கூடுகிறார்கள். அவர்களுக்கு ஜானின் தற்கால அவதாரம் தெரியாது; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்கதை. கடைசியில் சிலபல சண்டைகள், துரத்தல்களுக்குப் பின் சுபம்.

நகைச்சுவையுடன் கூடிய ஆக்‌ஷன் படங்களுக்கு எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு; ‘ஃபேமிலி பிளான்’ உள்ளிட்ட பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆப்பிள் டிவியில் வந்துள்ள இந்தத் திரைப்படமும் அப்படி ஒன்றுதான். நண்பர்களின் உரையாடல்களில் உள்ள நகைச்சுவை, ஆக்‌ஷன் காட்சிகளில் இவர்கள் இறங்குவது, கணவன்-மனைவியாக வரும் இருவருக்கிடையே நடக்கும் வாக்குவாதங்கள் என, சண்டைக் காட்சிகள் இல்லாத போது இந்த வசனங்கள்தான் படத்தின் பலம். ஒரு சின்னப் புன்னகையுடன் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: அமேசானின் 'தி டைட்டன் ஸ்டோரி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
மேட்ச் பாக்ஸ்

‘லாஜிக் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்கும் இன்னொரு படம். யார் முதன்மை வில்லன் என்று முதலிலேயே தெரிந்துவிடுவதால் பெரிய காத்திருப்பு இல்லை; அவர் எப்படிக் காலியாவார் என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். பாலைவனத்தில் நடக்கும் ஜீப் சேஸிங், புகாரெஸ்ட் தெருக்களில் நடக்கும் துரத்தல், நான்கு பெரிய கன்டெய்னர் லாரிகளைத் துரத்தும் நண்பர்கள், சூதாட்டக் கிளப்பில் நடக்கும் சண்டை என, நாம் கொஞ்சம் கொட்டாவி விட நினைக்கும் நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சரியாக வந்து அமர்ந்துவிடுகின்றன. அதில்தான் இயக்குநர் சாம் ஹார்கிரேவ் ஜெயிக்கிறார்.

ரொம்பவே பலவீனமான வில்லன், நண்பர்களின் இளமைக்காலக் காதல். இதெல்லாம் சற்று ஒட்டாமல் நிற்கின்றன. ‘ஜான் சீனாவை எல்லாம் முரளி ரேஞ்சுக்கு ஏங்க வைப்பது நியாயமா டைரக்டரே?’ இந்தி நடிகர் ரந்தீப் ஹூடா பாவம், இங்கிருந்து அங்கு போய் ஓர் அடியாள் மாதிரி ஐந்து நிமிடங்கள் மட்டும் வந்து போகிறார்.

மேட்ச் பாக்ஸ்
மேட்ச் பாக்ஸ்

சஹாரா பாலைவனம், புகாரெஸ்ட், புடாபெஸ்ட் என்று பல இடங்களில் பயணிப்பது கண்ணுக்குக் குளிர்ச்சி. இறுதிக்கட்டச் சண்டைக்காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது; அனைத்து நண்பர்களும் இணைந்து போராடுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
ஆக்ஷன் படத்தில் தன்பாலின ஈர்ப்பு உரையாடலா? கவனத்தைக் கவரும் ‘மே டே’ திரை விமர்சனம்!
மேட்ச் பாக்ஸ்

"கதை, கத்தரிக்காய் எல்லாம் யோசிக்கக் கூடாது; போரடிக்காத திரைக்கதை, ரசிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், ஜாலியாகப் பொழுது போனால் போதும்" என்பது மட்டுமே உங்கள் எண்ணமா? அப்படியென்றால் ‘மேட்ச் பாக்ஸ்’ உங்களுக்கு ஏற்ற படம்தான்!

வாசகர்கள் ஆப்பிள் டிவியின் இந்த புதிய ஆக்‌ஷன் படம் தங்களின் வார இறுதி நேரத்தைச் செலவிட ஏற்றதா என்பதை, படத்தின் மிரட்டலான சண்டைக்காட்சிகள் மற்றும் யூகிக்கக்கூடிய கதைக்களம் ஆகியவற்றை எடைபோட்டுப் பார்த்து ஒரு தெளிவான புரிதலைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com