ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அந்த வகையில் இன்று (மே 23-ம்தேதி) சிவா நடித்த ‘சுமோ’, பிரேம்ஜி நடித்த ‘வல்லமை’, மருத்துவ நிகழ்வுகளை மையமாக கொண்ட ‘ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப் சீரிஸ், பாவனா நடித்த ‘தி ஹண்ட்’ போன்ற திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் - நடிகர் மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவான படம் ‘சுமோ’. மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில், சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க, இவர்களுடன் லிசி ஆண்டனி, சதீஷ், விடிவி கணேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் , எடிட்டர் பிரவீன் கே.எல் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் ஏப்ரல் 25-ம்தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இன்று (மே 23-ம்தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்த திரைப்படம் ‘வல்லமை’. இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் திவ்யதர்ஷினி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரேம்ஜி காது கேளாதவராக நடித்திருக்கிறார். இந்த படமானது தந்தைக்கும் – மகளுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய ஜிகேவி இசையமைத்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலில் மந்தமானாலும், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று (மே 23-ம்தேதி)ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகை பாவனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘தி ஹண்ட்’ என்ற மலையாள திரைப்படம் ஒரு திகில் த்ரில்லர் ஆகும். ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை பாவனாவுடன், ரெஞ்சி பணிக்கர், சந்துநாத், அனு மோகன், டெயின் டேவிஸ், அதிதி ரவி, ஜி சுரேஷ் குமார், அஜ்மல் அமீர், ராகுல் மாதவ், நந்து மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பாளர் கைலாஸ் மேனன், ஒளிப்பதிவாளர் ஜாக்சன் ஜான்சன் மற்றும் எடிட்டர் அகில் ஏஆர். ஜெயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கே. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள திகில் த்ரில்லர் படமான ‘தி ஹண்ட்’ இன்று மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கடந்தாண்டு மருத்துவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ என்ற வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகள் ஒளிபரப்பாகி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட இந்த வெப் சீரிஸ் 100 எபிசோடுகளை தாண்டிய ஒளிபரப்பான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இத்தொடரில் ஒரு மருத்துவமனையில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள், அங்கு பணிபுரிபவர்கள் இடையே காதல், நட்பு, போட்டி, பொறாமை போன்றவற்றை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் விதமாக, கதையில் தோய்வு இல்லாமல் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. ‘ஹார்ட்பீட் சீசன் 2’ எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், அமித் பார்கவ், டூரிஸ்ட் ஃபேமிலி யோகலட்சுமி, குரு லட்சுமண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரின் சீசன் 2 நேற்று முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ‘ஹார்ட்பீட் சீசன் 2’ புது கதாபாத்திரங்கள், தீர்க்கப்படாத புதிர்கள் மற்றும் புதிய கதைக்களத்துடன் ஹாட்ஸ்டாரில் வரவுள்ள இந்த வெப்சிரீஸ் இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவருக்கும் இனிமேல் வாரா வாரம் நல்ல டைம்பாஸாக இருக்கும் என்றே சொல்லலாம்.