ஆட்டிப்படைக்கும் OTT... தப்பிக்குமா திரையுலகம்?

OTT
OTT
Published on

ஒரு விஷயம் எப்படிச் சாபமாகவும் வரமாகவும் இருக்கும்? நேற்றைய வரம் இன்றைய சாபமாக எப்படி மாறும்? என்பது தெரிய வேண்டும் என்றால் ஓடிடியைச் சொல்லலாம். அன்றும் இன்றும் என்றும் நிலையான ஒரு வருமானமாகக் கருதவேண்டிய திரையரங்கு வருமானத்தை மறந்தது திரையுலகம். அவர்களை மறக்கச் செய்தது கோவிட். அனைத்துத் திரையரங்கங்களும் மூடப்பட்டிருக்க, வீட்டில் இருந்த மக்களுக்கு ஒரே துணை தொலைக்காட்சியும் ஓடிடியும் தான்.

வகைத் தொகை இல்லாமல் மொழி வித்தியாசம் இல்லாமல் திரையில் ஓடிய அத்தனையும் பார்க்கத் தொடங்கினார்கள் மக்கள். ஒரு கட்டத்தில் என்ன பார்ப்பது என்ற தட்டுப்பாடு வந்துவிட்டது. பார்த்தார்கள் ஓடிடி-யினர். திரையுலகத்திடம் ஓர் ஒப்பந்தம்போலச் செய்துகொண்டனர். நேரடியாக வெளியிட்டால் கோடிக் கணக்கில் பணம் தரத் தயார் என்று உசுப்பேற்றினர். சும்மா இருக்க முடியாதே.

எடுத்த படத்தை என்ன செய்வது. வந்தவரை லாபம் என்று காசு பார்க்கத் தொடங்கினர் தயாரிப்பாளர்கள். திரையரங்கு உரிமையாளர்கள் கடும் விமர்சனம் வைத்தனர். எதிர்த்துக் குரல் எழுப்பினர், அது அவர்கள் காதில் விழவே இல்லை. ஒரு படத்தை ஓடிடிக்கு விற்று விட்டால் போதும். திரையரங்கு லாபம் இரண்டாம் பட்சமானது. அந்த அளவு வருமானமும் வந்தது.

ஒரு கட்டத்தில் உலகம் பழைய நிலைக்குத் திரும்பியபின்னர் இதில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் கொஞ்சம் தான். ருசி கண்ட பூனைகள் இரண்டு தரப்பிலும். பால் என்னவென்றால் திரைப்படங்கள். திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பைச் சமாளிக்க அவர்களிடம் ஆதரவு தேடினர் தயாரிப்பாளர்கள். படம் வெளியான பின்னர் நான்கு வாரங்கள் கழிந்து ஓடிடிக்கு தருவதாக ஏற்பாடு. இதிலும் சில பிரச்னைகள் வந்தன. பிவிஆர் போன்ற மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் இந்த நான்கு வார ஒப்பந்தத்திற்கு உள்படவில்லை. திரையரங்கில் வெளியாகி எட்டு வாரங்கள் அல்லது 56 நாள்கள் கழிந்தே ஓடிடியில் வெளியாக வேண்டும். அப்படி இல்லாத படத்தை வெளியிடமாட்டோம் என்று முடிவு செய்தனர். ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருந்தாலும் அதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழில் இந்த ஓடிடி வியாபாரத்தை மட்டுமே நம்பி படம் எடுத்தவர்கள் தலையில் கை வைத்துக்கொள்ளும் நாளும் வந்தது. வாங்கிய படமெல்லாம் வெற்றிப்படங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கட்டத்தில் வாங்கப் படம் இல்லாமல் சொந்தமாகப் படம் எடுக்க ஆரம்பித்தன அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்றவை. அதில் பாதிக்கு மேல் நட்டம். படமும் தண்டம். சந்தாவும் ஏறவில்லை. பெரிய நடிகர்கள் நடிக்கும் பணத்தை நல்ல வலுவான தொகை கொடுத்து வாங்கி வைக்க ஆரம்பித்தனர். ஆனால் திரையரங்கில் அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்றால் அது ஓடிடியிலும் எதிரொலித்தது. அதைத் தேடி வந்து பார்ப்பவர்கள், திரும்பவும் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இது அவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது.

நான்கு வாரங்களில் எங்களுக்குக் கொடுக்கவில்லையென்றால் நாங்கள் கொடுக்க இருந்த தொகையில் பாதியைக் கழித்து விடுவோம். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைத் தரமாட்டோம் என்று செக் வைத்தனர். மேலும் திரையரங்கில் அதன் வரவேற்பைப் பொருத்துத் தொகை சொல்கிறோம் என்றும் பாராமுகம் காட்ட ஆரம்பித்தனர். தயாரிப்பாளர்கள் நிலை பரிதாபமாக மாறியது.

இந்த இடத்தில் தான் படத்தின் தயாரிப்புச் செலவு மிக முக்கியக் காரணியாக மாறியது. செலவழித்த தொகையைத் திரையரங்கில் மட்டும் எடுப்பது நடக்கவே நடக்காது. ஓடிடியினர் சற்றுப் பெரிய தொகை கொடுப்பதால், கொடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் வட்டிக்கே கட்டுப்படியாகாது என்ற நிலை. ஆனால் வேறு வழியில்லை அவர்களுக்கு. படம் வெளியாக அவர்களுக்கு இந்தத் தொகை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

கார்பரேட்களான ஓடிடியினரும் ஒன்றும் பண மழையில் நனையவில்லை. படம் ஓடும் நிமிடங்களைப் பொறுத்தே அவர்களது மதிப்பு கூடும். பெரிய நடிகர்கள் படங்களைப் பற்றிக் கவலையில்லை. எப்படியிருந்தாலும் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் சிறிய படங்கள். அவர்கள் குறைவாக முதலீடு செய்த படங்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு வசதி. அப்படி சில படங்களும் அமையத் தொடங்கின. பார்க்கிங், லவ்வர், கூழாங்கல் போன்ற படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன.

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதோ அல்லது திரையரங்குக்கு வருவதற்கு முன்போ இந்த வியாபாரம் முடிந்தால் நல்லது. அப்படி முடியாத படங்கள் கடவுள்மேல் பாரத்தைப் போட்டு வெளியீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அது வெளியானால்.

ஆனால் இந்த வியாபாரம் முடியாததால் ரிலீஸ் ஆகாத படங்களின் எண்ணிக்கையும் கணிசமானது. பட வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப்போன படங்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருக்கிறது. ஓடிடியினருக்கு என்று படங்கள் வெளியிடும் இடைவெளி (window) ஒன்று இருக்கிறது. அவர்கள் அடுத்த ஆண்டு என்ன படம் வாங்க வேண்டும் என்பதை இந்த ஆண்டே முடிவு செய்துவிடுவார்கள். ஏனெனில் எவ்வளவு பணம் இந்தப் படங்களை வாங்குவதற்குத் தேவைப்படும் என்ற விவரம் அவர்களுக்குத் தேவைப்படும். நெட்ப்ளிக்ஸ் எல்லாம் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்தப் பட்டியலை முடிவு செய்து விடுவது வழக்கம்.

இப்படி இவர்கள் முடிவு செய்து லாக் செய்து வைத்துவிடுவதால் தயாரிப்பாளர்கள் அந்தக் குறிப்பிட்ட இடைவெளியில் படத்தை வெளியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இவை எல்லாம் வாய் வார்த்தையாக முடிவு செய்யப்படுவை அல்ல. முறையாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுச் செயல்படுத்தப்படுபவை. அதனால் அவர்கள் இயக்குநர்களை அவசரப்படுத்துகிறார்கள். சில படங்கள் பூஜை போடப்படும் அன்றே வெளியீட்டுத் தேதி சொல்ல வேண்டிய அல்லது முடிவெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை.

"இது எங்களுக்கு ஓர் அழுத்தத்தைத் தருகிறது. இயல்பாகச் செயல்பட முடியவில்லை. அதனால் கூலி படம் ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் தேதிக்கு எனக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று சொல்லித் தான் ஆரம்பித்தேன் என்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் நான் இயல்பாக, பதற்றம் இல்லாமல் பணி புரிந்த படம் கூலி. இதுவே பெரிய ஆசுவாசம்" என்கிறார் அவர்.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமா பரிதாபங்கள் - 'வெற்றிகரமான மூன்றாம் நாள் கொண்டாட்டம்!' - என்னங்கடா சொல்லவறீங்க?
OTT

ஓடிடி தரப்பில் அவர்களுக்குண்டான பிரச்னைகள். நஷ்டங்கள். ஏமாற்றங்கள். இவர்களுக்குப் பிரச்னை கோடிகளில். அப்படியிருக்கையில் சும்மாயிருப்பார்களா. புதிதாக ஒரு கட்டுப்பாடு போட ஆரம்பித்திருக்கிறார்கள். அது தான் பிசினஸ் கட் என்ற அஸ்திரம். படம் எப்படியிருக்கிறது, ஓடுமா ஓடாதா, எவ்வளவு வெற்றி பெரும் என்றெல்லாம் தெரியாத நிலையில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்த காலம் ஒன்று. இனி அது நடக்காது. கதையை ஒரு மாதிரியாகச் சொல்லி நம்ப வைத்து மேக்கிங்கில் சொதப்பிப் படத்தைப் பாடாவதியாக்கி விடுகிறார்கள் சில இயக்குநர்கள். அந்த முழுச் சுமையை ஏற்கவேண்டிய நிலையில் தான் ஓடிடியினர் இருக்கிறார்கள். அதெல்லாம் இனி செல்லாது. பிசினஸ் கட்டில் நாற்பது நிமிடங்கள் படம் எதைப் பற்றியது. எந்த மாதிரியான படம். நடிப்பவர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் யார் யார் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்த்துத் தான் தொகை முடிவு செய்வோம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்பொழுது இந்தப் பிரச்னையையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இவர்கள் வயிற்றெரிச்சல் போதாதென்று ஓடிடியினர் சமாளிக்க வேண்டிய இன்னொரு பிரச்னை அவர்களின் தொடர்கள், அவர்கள் எடுக்கும் படங்கள் இதில் இருக்கும் உள்ளடக்கம். சென்சார் என்பது இல்லாததால் மலிந்து கிடக்கும் ஆபாசக் காட்சிகள், கெட்ட வார்த்தைகள், சொல்ல முடியாத வன்முறையென வீட்டிலிருந்து பார்க்கும் ஓடிடியில் இன்று பெரும்பான்மையான தொடர்களும், திரைப்படங்களும் குடும்பத்துடன் என்ன தனியாகப் பார்க்கக் கூடக் கூச்சப்பட வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சலசலப்பு எழ ஆரம்பித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இன்றைய தமிழ் சினிமா... மூன்று நாட்கள் ஓடினால் வெற்றிப் படம்; இரண்டு வாரங்கள் தாண்டி விட்டால் ப்ளாக் பஸ்டர்!
OTT

இப்படி இருக்க ஓடிடியால் திரையரங்குகளுக்குத் தான் பிரச்னை என்பது தான் பொதுவாக எழுந்திருக்கும் ஓர் அபிப்ராயம். ஆனால் ஒரு காலத்தில் கோலோச்சிக் கிடந்த சாட்டிலைட் வியாபாரம், டப்பிங் வியாபாரம், ரீமேக் ரைட்ஸ் போன்றவை எல்லாமே இப்பொழுது கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது தான் வருத்தத்திற்கு உரியது. ரசிகர்களுக்கல்ல திரையுலகினருக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com