
வாரம் / மாதக்கணக்கில் படம் ஓடுவதை வெற்றியாகக் கருதிய காலம் மலையேறிப் போய்விட்டது. இப்பொழுது, படத்தின் வெற்றியானது, அது எத்தனை கோடி சம்பாதித்தது என்பதில் அடங்கி விட்டது. ஒரு காலத்தில் நூறு கோடி ரூபாய் வசூல் என்பது மிகப் பெரிய சாதனை. இப்பொழுது அது பெரிய நடிகர்களின் அடிப்படைத் தேவை! நூறு, இருநூறு, நாநூறு, ஐந்நூறு கோடிகள் வசூல் எல்லாம் தாண்டி, ஆயிரம் கோடி இப்பொழுது நோக்கமாகி நிற்கிறது.
இதற்குப் பான் இந்தியா படங்களாக வெளியான கேஜிஎப், பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்றவை காரணம். சமீபத்தில் வெளியான ஜவான் இதை உறுதி செய்தது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை. 'நான் வருகிறேன் பார்' என்று வந்த படம் தான் புஷ்பா 2. இந்தியா முழுதும் அதிரிபுதிரி வெற்றி!
இண்டஸ்ட்ரி ஹிட் என்றால் இப்பொழுது இதுதான். அல்லு அர்ஜுனின் மார்கெட்டை எங்கோ உச்சத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது புஷ்பா. ஷாருக்கானைத் தவிர மற்ற நடிகர்கள் பெரிய நடிகர்கள் ஆனதற்கு இந்தப் படங்கள் மட்டுமே காரணம்.
பிறகு கோலிவுட்டில் சும்மா இருப்பார்களா? ஐம்பது ஆண்டுக்காலச் சினிமா அனுபவத்தில் பார்க்காத ஒரு வெற்றியை விக்ரம் படத்தின் மூலம் தொட்டார் கமல் ஹாசன். ஐந்நூறு கோடி! லோகேஷ் கனகராஜை டாப் இயக்குநர்கள் வரிசையில் நிறுத்தி விட்டுத்தான் ஓய்ந்தது இந்தப்படம். இந்த வெற்றியைச் சில மாதங்கள் மட்டுமே அனுபவித்திருப்பார் கமல்ஹாசன். வந்தது பொன்னியின் செல்வன். மணிரத்னம் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் இந்த இரண்டு பாகங்களும். விக்ரமின் சாதனை தகர்க்கப்பட்டது. இவர்கள் இப்படி இருக்கையில் சும்மா இருப்பாரா சூப்பர் ஸ்டார். சில படங்கள் சரியாகப் போகவில்லை என்ற பெயர் இருந்து கொண்டே இருந்தது. வந்தது ஜெயிலர். மேலே சொன்ன மூன்று படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார். வயது எழுபது ஆனாலும் நான் தான் வசூல் சக்ரவர்த்தி என்று நிரூபித்து விட்டார்.
இந்த நூறு கோடி வசூல் நிலவரங்களில் பெரும்பான்மையான மக்கள் புரிந்து கொள்ளத் தவறுவது கிராஸ் பாக்ஸ் ஆபீஸ் என்ற விஷயத்தைத் தான். நூறு கோடி வசூல் என்றால் அதில் நாற்பது முதல் ஐம்பது சதமானம் தான் தேறும். நிகர வசூல் என்பது ஐம்பது கோடி தான். படத்தின் தயாரிப்புச் செலவைப் பொறுத்து இந்த வசூல், வெற்றி அல்லது தோல்வியென மாறிவிடும். அந்த எண்களை மட்டும் வைத்துத் தான் விளையாட்டு தொடர்கிறதே தவிர அவற்றில் உண்மை மிகவும் குறைவு. உலக அளவிலான பாக்ஸ் ஆபீஸ் நிலவரமும் இதில் வரும். தமிழ்ப் படவுலக நாயகர்கள் தங்கள் படங்களின் தமிழ்நாட்டு வசூலைப் பொறுத்து சம்பளம் நிர்ணயித்துக் கொள்கிறார்கள். கால்ஷீட் வாங்குவதற்காகத் தயாரிப்பாளர்களும் தங்கள் சக்தியை மீறிச் சம்பளம் கொடுக்கிறார்கள். அல்லது வீம்புக்கு வேட்டையாடுகிறார்கள். அதனால் என்ன நிகழ்ந்தது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
படம் எப்படி இருக்கிறது என்பதைத் தவிர்த்து இந்த வசூல் நிலவரங்களைக் குறித்து பெரிதாக விவாதிக்கப்படுகிறது.
ரசிகர்கள் மோதலும் இதில் அதிகமாக ஏற்படுகிறது. படங்களின் வசூல் நம்மை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. அந்த வசூலினால் நாயகர்களுக்குத் தான் லாபமே தவிரப் பெரும்பான்மையான நேரங்களில் தயாரிப்பாளர்களுக்குக் கூட இல்லை. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் நிலைமை இன்னும் மோசம்.
அவர்களைப் பொறுத்த வரை அதிகபட்சக் கட்டணம் 190 ரூபாய் தான். ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் காலமெல்லாம் இனிமேல் கிடையவே கிடையாது. பார்க்கிங் பாப்கார்ன் இதில் காசு பார்த்தால் போதும் என்று தான் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதற்குக் கூட்டம் வரவேண்டுமே.
இப்பொழுதெல்லாம் தனக்குப் பிடித்த நடிகர்கள் படத்திற்கு டிக்கெட் கிடைக்காது என்று நினைக்கும் நபர்களே கிடையாது. ஏனெனில் ஒரு சமயம் ஒரே ஒரு படம். சில சமயம் இரண்டு படங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் திரைகள். அனைத்திலும் ஒரு படம் அல்லது இரண்டு படங்கள். இதில் டிக்கெட் இல்லாமல் போவது எங்கிருந்து நடக்கும். ஆன்லைனில் நினைத்த அரங்கம் வேண்டுமெனில் கிடைக்காமல் போகலாம். நினைத்த படங்கள் பார்த்து விடலாம் இது தான் இன்றைய நிலை.
ஒரு தீபாவளிக்குப் பத்திலிருந்து பதினைந்து படங்கள் வந்த காலம் உண்டு. இப்பொழுது சோலோ ரிலீஸ் இருந்தால் நல்லது. இரண்டு படங்கள் வரலாம். அதற்கு மேல் என்றால் கூட்டம் என்று சொல்கிறார்கள்.
ஒரு படம் தனியாக வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆயிரம் திரைகள். ஒரு நாளில் ஐந்து காட்சிகள். சராசரியாக ஐந்நூறு இருக்கைகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் மூன்று நாள்களில் பொதுவாக அரங்கம் நிறைந்து விடும். முதல் திங்கள்கிழமை தான் அந்தப்படத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். அதைத் தாண்டும் படங்கள் வெற்றிப் படங்கள். இது தான் இப்போதைய வெற்றிச் சூத்திரம். இரண்டு வாரங்கள் தாண்டி விட்டால் ப்ளாக் பஸ்டர்.
அனைத்துத் திருவிழா தினங்களிலும் இது தான் காட்சி. இதில் சிறிய படங்கள் வர வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் அதை யார் நடத்துவார்கள். திரையரங்க உரிமையாளர்கள் எந்தப்படத்திற்குக் கூட்டம் வருகிறதோ அந்தப் படத்தின் காட்சிகளைத் தான் அதிகரிப்பார்கள். சிறிய படங்கள் திரையிட்டாலும் யாரும் பார்க்க முடியாத நேரங்களில் காட்சிகள் இருக்கும். அதுவும் ஓரளவு வரவேற்பு இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் பல படங்கள் வெளி வந்ததே யாருக்கும் தெரியாது. அப்படி வரும் படங்களின் தரமும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
2025 தொடங்கி ஏப்ரல் மாதம்வரை எடுத்துக் கொண்டால் எண்பத்து ஐந்து படங்கள் வந்துள்ளன. அதில் வெற்றி பெற்ற படங்கள் என்றால் மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், பயர், மர்மர், கேங்கர்ஸ் போன்றவற்றைச் சொல்லலாம். குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் என்ற நிலையை எட்டிய படம். எண்பத்து ஐந்து படங்களில் ஏழு படங்கள் மட்டுமே வெற்றி என்றால் தோல்வியின் வீரியத்தை நாமே கணக்கிட்டுக் கொள்ள வேண்டியது தான்.
மே மாதம் என்றால் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி இரண்டு படங்கள் தான். கலவையான விமர்சனங்களைப் பெற்றால் கூட ரெட்ரோ வெற்றிப்படம் என்று அந்தக் குழு அறிவித்து விட்டது. அந்தப்படத்தில் கிடைத்த லாபத்திலிருந்து பத்துக் கோடி ரூபாயைக் கல்விக்காக நன்கொடையாகக் கொடுத்து விட்டார் சூர்யா.
யாருமே எதிர்பாராமல் சாதாரணமாக வந்து எழுபத்து ஐந்து கோடி ரூபாய் வரை வசூலித்து இன்று வரை வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது டூரிஸ்ட் பேமிலி.
எதிர்பார்ப்போடு வந்தாலும் அதை முழுதும் பூர்த்தி செய்ய இயலாமல் போன படம் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்து வெளிவந்த கேங்கர்ஸ்.
திரையரங்கு வசூலைத் தவிரத் திரையுலகம் இப்பொழுது பதறி நிற்கும் இன்னொரு விஷயம் அந்தத் திரைப்படத்திற்கான சாட்டிலைட் மற்றும் ஒ டி டி வியாபாரம். ஒரு படம் எந்த நாளில் எந்த மாதத்தில் வெளிவர வேண்டும். படம் வெளியான எவ்வளவு வாரங்களில் அது ஒ டி டி யில் திரையிடப்படும் என்பதன் அடிப்படையில் அந்தப்படத்திற்கான தொகை நிர்ணயிக்கப்படும். ஒரு காலத்தில் இந்த வியாபாரத்தை நம்பி மட்டுமே வியாபாரம் செய்து வந்தார்கள் தயாரிப்பாளர்கள். இன்று அதுவே அவர்களுக்கு வினையாக, வில்லனாக மாறி நிற்கிறது என்பது தான் கொடுமை!