
தான் காதலிக்கும் பெண் நல்லபடியாக இருக்க ஒரு காதலன் எந்த எல்லைவரை செல்வான். இதைச் சிரிக்கச் சிரிக்க சொல்லிச் சற்றே சிந்திக்கும் படி முடித்திருக்கும் படம் தான் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்படப் பலர் நடித்து அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது. ஓர் ஈவண்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம் நடத்தி வருபவர் பிரதீப். பிராங் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். பிரதீப்பின் மாமா மகள் மமிதா. ஒரு கட்டத்தில் மமிதா பிரதீப் மேலுள்ள காதலை வெளிப்படுத்துகிறார். சிறு வயதில் இருந்தே பழகி வருவதால் பிரெண்ட்ஷிப் தாண்டி எதுவும் இல்லை என்று மறுத்து விடுகிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.
பார்த்துப் பழக்கப்பட்ட கதை என்று சொல்லிவிடுவார்கள் என்று திரைக்கதை சுவாரஸ்யத்திற்கு உழைத்திருக்கிறது இந்த அணி. அது இடைவேளை வரை படத்தைப் பரபரவென்று நகர்த்திக் கொண்டு செல்கிறது. இப்படித் தான் நடக்கும் என நினைக்க அடுத்த காட்சியிலேயே வேறு மாதிரி. சரி இப்படியே என்று நினைக்கும்பொழுது இல்லை அது வேறு என யோசிக்க விடாமல் ரசிக்க வைக்கிறார் இயக்குனர். அளவெடுத்துத் தைக்கப்பட்ட சட்டைபோல இந்தப் பாத்திரத்துக்குத் தான் மட்டுமே சரி என்று நின்று விளையாடுகிறார் பிரதீப். மமிதாவை நினைத்து உருகுவது, தன்னை நினைத்து வருந்துவது அவமானத்தை இடது கையால் ஒதுக்குவது எனச் சைசுக்கு மேலே நடித்திருக்கிறார்.
நகைச்சுவை இயல்பாக வருவது ஒரு பலம். விரக்தியான காட்சிகளிலும் அதே போல். அழுகைக் காட்சிகளில் கொஞ்சம் சிரமப்படுகிறார். மமிதா பைஜூ. நன்றாக நடித்திருந்தாலும் இவர் நல்லவரா கெட்டவரா லூசா சுயநலமானவரா என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
படத்தின் அடுத்த பெரிய பலம் சரத்குமார். மனிதர் காமடியிலும் தன்னால் கலக்க முடியும் என அசத்துகிறார். அதே சமயம் கொஞ்சம் வில்லத்தனமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிறார். தனது மகளுடன் அவரது தங்கையைப் பற்றிப் பேசும் இடம், போட்டோ மட்டும் எடு மேலே கை வெக்கற வேலையெல்லாம் வெச்சுக்காத என்று மிரட்டும் இடம், பாபி தியோல் போலத் தலையில் விஸ்கி டம்ளரை வைத்துக் கொண்டு ஆடுவது எனக் கைதட்டல்களை அள்ளுகிறார்.
பாடல்களைப் பொறுத்த வரை மூன்று பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமை. ஆனால் எல்லாப் பாடல்களையும் நானே தான் பாடுவேன் எனச் சாய் அப்யங்கர் அடம் பிடிக்கக் கூடாது. ஒரு கட்டத்துக்கு மேல் இரைச்சல் அதிகமாகி விடுகிறது. ஒரே பாடல் திரும்பத் திரும்ப வருவது சற்றே அலுப்பு. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது. ஆனால் இவ்வளவு பேசப்படும் படத்தில் ப்ரொடக்ஷன் வேல்யூ அவ்வளவாகச் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பது நமது எண்ணம். செட்களாகட்டும், காஸ்டயூம், மேக்கப் ஆகட்டும். இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.
பார்த்துச் சலித்த ஒரு கதைக் கருவை வித்தியாசமான திரைக்கதையால் மாற்ற முயல்கிறார் சரி. ஆனால் அது ஓட்ட வேண்டுமே. ஏற்கனவே காதல் என்ற ஒரு விஷயம் இக்கால இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகிறது. இதில் இந்தப் படத்தில் வருவது போல எல்லாம் நடந்தால் கிழிந்தது. தியாகம், ஆணவக் கொலை, இஷ்டத்திற்கு விளையும் இடைவேளைக்குப் பின்னாலான திரைக்கதை போன்றவை மைனஸ்.
இப்படியெல்லாமா நடக்கும் என்று நீங்கள் வணிக படங்களில் யோசிக்காமல் இருக்கலாம். அதே போல ரொமான்டிக் டிராமாவான இந்தப் படத்திலும் இருந்தால் தப்பித்தது. அதை விட்டு இதெல்லாம் சாத்தியமா என யோசிக்க ஆரம்பித்தால் போச்சு. இந்தப்படம் உங்களுக்கு வேலைக்காகாது. அந்த விதத்தில் இந்த டூட் வாலிப வயதினருக்கும், காதலர்களுக்குப் பிடிக்கலாம். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா என்பதைப் போகப் போகத் தான் பார்க்க வேண்டும். பிராங்க் என்று தொடர்ந்து எதாவது செய்து கொண்டே இருப்பதால் ஒருகட்டத்தில் எது நிஜம் எது பிராங்க் என்ற சந்தேகம் வருகிறது. கிளைமாக்ஸ் இன்னும் சுத்தம். டாக்டர் ஒரு விஷயம் சொல்லுகிறார். பிரதீப் இன்னொன்று சொல்கிறார். இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று கேட்டால் நீங்கள் பூமர் என்றழைக்கப்படும் சாத்தியம் உண்டு.
ஜாலியான முதல்பாதி, விஷயம் தீர்ந்து விட்டதால் ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் போல நீளமாகத் தெரியும் இரண்டாம் பாதி. இரண்டும் சேர்ந்த ஒரு ஓகேவான படம் தான் டூட். வித்தியாசமான திரைக்கதை. மற்ற கதாநாயகர்கள் செய்யத் துணியாத ஒன்றைச் செய்பவன் எனது கதாநாயகன். வந்து பாருங்கள் ஜாலியாகச் சிரித்துச் செல்லுங்கள் என்ற படம் எடுத்த விதத்தில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கவனத்தை ஈர்க்கிறார்.