ஹாலிவுட் என்பது அமெரிக்காவில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியிலுள்ள பகுதியாகும். ஹாலிவுட் (Hollywood) என்ற பெயர் 1887 ஆம் ஆண்டு ஹார்வி எச். வில்காக்ஸ் என்பவரது நிலப் பத்திரத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. மற்றொரு பதிப்பு, அவரது மனைவி டேடியா வில்காக்ஸ், தனது நண்பர் ஐவர்களிடமிருந்து அந்தப் பெயரைக் கேட்டு, அதையே தனது கணவரிடம் பரிந்துரைத்ததாகவும் கூறுகிறது. இருப்பினும், இல்லினா யில் உள்ள 'ஹாலிவுட்' என்ற மாநிலத்தில் வசித்து வந்த ஒரு அந்நியரை டேடியா ரயிலில் சந்தித்ததாக மற்றொரு கதை கூறுகிறது.
ஹாலிவுட் என்ற பெயரின் தோற்றத்துடன் பல பதிப்புக் கதைகள் இணைக்கப்பட்டிருந்தாலும், அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை அல்லது மிகக் குறைவு. ஹாலிவுட் எனும் நகரம் 1903 ஆம் ஆண்டில் ஒரு நகராட்சியாக இணைக்கப்பட்டு, அதன் பிறகு, 1910 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
ஹாலிவுட் என்பது உலகின் மூலை முடுக்கிலும் அறியப்படும் ஒரு பெயராக, அமெரிக்கத் திரைப்படத் துறையை அடையாளப்படுத்தும் முக்கியமான பெயராகி விட்டது. 1900 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு இப்பகுதி தாயகமாக இருந்து வருகிறது. ஹாலிவுட்டில்தான் தொடக்கக்காலத் திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் தோன்றின. இப்பகுதியில்தான் டிஸ்னி, பாரமவுண்ட் பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் யுனிவர்சல் பிக்சர்ஸ் போன்ற உலகப் புகழ் பெற்றத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. நகைச்சுவை, நாடகம், அதிரடி, இசை, காதல், திகில், அறிவியல் புனைகதை மற்றும் போர்க் காவியம் உள்ளிட்ட பல்வேறு வகை சினிமாக்களின் பிறப்பிடமாக இது உள்ளது. மேலும், இது பிற தேசிய திரைப்படத் தொழில்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் சிறியதாக இருந்த டின்சல் நகரம் பிரபலமடைந்து முழு அமெரிக்கத் திரைப்படத் துறையும் ஹாலிவுட்டாக மாறியது. ஹாலிவுட் பிரபலமடைந்து ஒரு ஆகுபெயராக மாறியுள்ளது. முக்கிய விருது விழாக்கள் மற்றும் திரையரங்க வெளியீடுகள் ஹாலிவுட்டில் முக்கியமான திரையரங்குகள் மற்றும் இசை நிகழ்ச்சி மேடைகளில் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்துத் திரைப்படங்களும் ஹாலிவுட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹாலிவுட் நகரம் 'வாக் ஆஃப் ஃபேம்' எனும் நடைபயணத்துக்குப் பிரபலமானது. ஹாலிவுட் 'வாக் ஆஃப் ஃபேம்' என்பது 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அது சரி, ஹாலிவுட் உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறையாக எப்படிப் பிரபலமானது?
ஹாலிவுட் திரைப்படங்கள், பலரும் அறிந்த ஆங்கில மொழியில் தயாரிக்கப்பெற்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகின்றன. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பரந்த நிலையில் பல்வேறு நிலைகளிலான ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஹாலிவுட் திரைப்படத்துறை ஒவ்வொரு அம்சத்திலும் அதன் தொழில் முறைக்குப் பெயர் பெற்றதாக இருக்கிறது. படத்தின் காட்சிகள் அல்லது பகுதிகளில் குறைபாடுகள் இருக்காது, மேலும், அவை முழுமையுடன் சித்தரிக்கப்படுகின்றன. ஹாலிவுட்டில் தொழில்நுட்பமும் கிராபிக்ஸ்களும் முன்னணியில் உள்ளன. அவற்றின் வேலையை அறிந்த நிபுணர்கள் இதில் அடங்குவர். சிறந்த கிராபிக்ஸ் மற்றும் விளைவுகளைக் கொண்ட சில திரைப்படங்களில் அவெஞ்சர்ஸ், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், கிராவிட்டி, ஜுராசிக் பார்க் மற்றும் அவதார் ஆகியவை அடங்கும்.
ஒரு திரைப்படத்தில் ஒலி விளைவுகள் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை ஹாலிவுட் உலகிற்குக் காட்டியுள்ளது. மேலும், ஹாலிவுட் படங்கள் முழுவதும் ஒரே கருத்தைக் கடைப்பிடிக்கின்றன, அதிலிருந்து விலகுவதில்லை. கதைக்களம் ஒரு ஆக்ஷன் - த்ரில்லர் படமாக இருந்தால், படம் கதைக்களத்தில் மட்டுமேக் கவனம் செலுத்துகிறது.
மற்ற திரைப்படத் துறைகளைப் போலல்லாமல், ஒரே மாதிரியான கதைக்களங்கள் சிறிய மாறுபாடுகளுடன் வருகின்றன. பார்வையாளர்கள் பலவிதமான கதைக்களங்கள், வகைகள் மற்றும் கதைகளைப் பார்க்க முடிகிறது. ஒருபோதும் சலிப்படைய மாட்டார்கள்.
திரைப்படத்துறையில் ‘ஹாலிவுட்’ என்ற பெயர் அமெரிக்கத் திரைப்படத் துறையை மட்டுமில்லாமல், உலகத் திரைப்படத் துறையின் முதன்மை அடையாளமாக மாற்றிவிட்டது. இந்த அடையாளத்தைத் தொடர்ந்து, உலகில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் திரைப்படத் துறையினர், ஹாலிவுட் என்ற பெயரைப் போன்று வேறு பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் மும்பையைத் தளமாகக் கொண்ட இந்தி மொழித் திரைப்படத் துறை, ‘பாலிவுட்’ என்றும், இந்தியாவின் சத்தீஸ்கரில் அமைந்துள்ள சத்தீஸ்கரி மொழி திரைப்படத் துறை, 'சோலிவுட்’ என்றும், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வங்காளத் திரைப்படத் துறை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு திரைப்படத் துறை, ‘டோலிவுட்' என்றும், இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள தமிழ் மொழித் திரைப்படத் துறை ‘கோலிவுட்' என்றும், இந்தியாவின் கேரளாவில் மலையாளத் திரைப்படத் துறை, ‘மாலிவுட்' என்றும், அசாமின் குவஹாத்தியில் உள்ள அசாமிய மொழித் திரைப்படத் துறை, ‘ஜோலிவுட்' என்றும், ஒரியா மொழியில் இந்தியாவின் ஒரிசாவின் திரைப்படத் துறை, ‘ஆலிவுட்' என்றும் ‘ஹாலிவுட்’ என்பதன் மறு பெயர்களாக வைத்துக் கொண்டிருக்கின்றன.
இதேப் போன்று, பாகிஸ்தானில் லாகூரைத் தளமாகக் கொண்ட திரைப்படத் துறையின் உருது மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படத் துறை, ‘லாலிவுட்' என்றும், சிந்தி திரைப்படத் துறை, ‘சோலிவுட்' என்றும், பாகிஸ்தானின் கராச்சியைத் தளமாகக் கொண்ட திரைப்படத் துறை, ‘கரிவுட்’ என்றும், வங்காளதேசத் திரைப்படத் துறை, ‘தாலிவுட்' என்றும், காத்மாண்டுவை தளமாகக் கொண்ட நேபாளத் திரைப்படத்துறை, ‘காளிவுட்’ என்றும், கானாவில் திரைப்படத் துறை, ‘கோலிவுட்’ என்றும், நைஜீரியாவின் கானோவை தளமாகக் கொண்ட திரைப்படத் துறை, ‘கன்னிவுட்’ என்றும், நைஜீரியாவின் லாகோஸை தளமாகக் கொண்ட திரைப்படத் துறை, ‘நாலிவுட்' என்றும், கென்யாவில் திரைப்படத் துறை, ‘ரிவர்வுட்' என்றும், லியோனில் திரைப்படத் துறை, ‘சோலிவுட்' என்றும், தான்சானியாவில் திரைப்படத்துறை, ‘ஸ்வாஹிலிவுட்' என்றும், ஜிம்பாப்வே திரைப்படத்துறை, ‘சோலியுவுட்' என்றும், பெருவியன் திரைப்படத் துறை, ‘சாலிவுட்' என்றும், அமெரிக்காவில் மோர்மன் திரைப்படத் துறை, ‘மாலிவுட்' என்றும், தென் கொரியத் திரைப்படத்துறை, ’ஹாலியுவுட்' என்றும் ‘ஹாலிவுட்’ என்பதன் மறு பெயர்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.