
ஒரு மிகப் பெரிய பாலைவனம். காற்று சுழற்றி அடிக்கும் மணற்பரப்பு. மிகப்பெரிய வெண்திரையெங்கும் ஆள் நடமாட்டமே இருக்காது. மிகவும் க்ளோசப்பில் அழுக்கான தொப்பியணிந்த ஓர் உருவம். இது தான் குட் பேட் அக்லீ படத்தின் முதல் காட்சி. அங்கிருந்து பின்னோக்கி நகரும் காமிராவின் கோணத்தில் இன்னும் இருவர் சேர்வார்கள். அழுக்கடைந்த ஆடைகள். பொருந்தாத கோட். பெரிய தொப்பி. இடுப்பில் கட்டப்பட்ட பெல்டின் இரண்டு புறமும் இரண்டு கைத்துப்பாக்கிகள். மிகவும் தயாராகத் தாங்கள் வந்த குதிரைகளைக் கட்டிவிட்டு அந்த அத்துவானப் பரப்பில் உள்ள பாரில் நுழைவார்கள். மூன்று தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம். கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஓர் உருவம் வெளியே வந்து விழும். THE UGLY என்று டைட்டில் வரும்.
இது 1966 இல் செர்ஜியோ லியோன் இயக்கத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட், லீ வான் கிளிப், எலி வாலக் நடித்து வந்த தி குட் தி பேட் தி அக்லீ, எ பிஸ்ட்புல் ஆப் டாலர்ஸ், பார் எ பியூ டாலர்ஸ் மோர், படங்களின் மூன்றாவது படமாக வந்தது தான் இது. ட்ரைலாஜி என்று அந்தக்காலத்திலேயே வந்த படங்கள் இவை. ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் (Spaghetti Westerns) என்று சொல்வார்கள். நம்மூர் மக்களுக்குக் கௌபாய் படங்கள். குதிரைகள், துப்பாக்கிச் சண்டைகள், பாலைவனங்கள், துரத்தல்கள். சுருட்டுகள். கவர்ச்சி கன்னிகள் அவ்வப்பொழுது. இவை தான் இந்தப் படங்களின் அடையாளங்கள்.
மூன்று மணிநேரம் ஓடக்கூடிய இந்தக் குட் பேட் அக்லீ ஓர் ஐகானிக் படம் என்று சந்தேகத்திற்கிடமின்றி சொல்லலாம். இந்தப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமே அற்புதமாக இருக்கும். எலி வாலக் அக்லியாகவும், லீ வான் கிளிப் பேடாகவும் கிளின்ட் ஈஸ்ட்வுடடை குட் என்றும் அறிமுகப்படுத்துவார்கள். அதில் வரும் தீம் ம்யூசிக் இன்று வரை மிகப்பிரபலம். யூ ட்யூபில் என்னியோ மாரிகோனின் இந்த இசையைக் கேட்காதவர்கள் மிகவும் குறைவு. இன்றும் பல போன்களில் இது ரிங் டோனாகவும் இருக்கிறது. அந்த அளவு இந்தப்படங்களின் இசை குறிப்பாகப் பின்னணி இசை அட்டகாசமாக இருக்கும்.
ஒரு உள்நாட்டு கலவரத்தின் பொழுது பதுக்கப்பட்ட தங்கப் புதையல். அதை ஒரு கல்லறைத் தோட்டத்தில் குறிப்பிட்ட சமாதிக்குக் கீழே புதைத்து வைத்து விடுகின்றனர். இந்த மூவரில் ஒருவருக்குக் கல்லறை தெரியும். பெயர் தெரியாது. ஒருவருக்குப் பெயர் தெரியும் கல்லறை எங்கு இருக்கிறது என்று தெரியாது. இன்னொருவருக்கு இரண்டும் தெரியாது ஆனால் புதையல் பற்றித் தெரியும். இவர்கள் சந்திக்கும் தருணத்தில் என்ன நிகழ்கிறது என்பது தான் படம். படம் பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாத படங்களில் இதுவும் ஒன்று.
அந்தக் காலங்களில் கான்வர்சேஷன் படங்கள் என்று சொல்வார்கள். இதிலும் பல இடங்களில் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். சரளமான ஆங்கிலக் கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். யார் சுடுகிறார்கள் என்று தெரியாமல் சுட்டுக் கொண்டே இருப்பார்கள். இருந்தும் சுவாரசியம் சற்றும் குறையாது. பணம் வாங்கிக் கொண்டு கொலை செய்யும் லீ வான் கிளிப் அவர் கொலை செய்யும் நபர் சாகும் முன் பணம் கொடுத்துத் தன்னைக் கொல்லச் சொன்னவரைக் கொல்ல வேண்டும் என்று கேட்டதால் அவரையும் கொல்வார். பணம் வாங்கி விட்டால் நான் கொடுத்தவருக்கு நேர்மையாக இருப்பேன் என்று சொல்லியே இருவரையும் கொல்வார். அப்படியொரு பாத்திரப்படைப்பு.
குதிரைமேல் தூக்குக் கயிற்றோடு அமர்ந்திருப்பவர்கள் தூக்கில் தொங்குவதில்லை. ஒரு தேவதை அவர்களைக் காப்பாற்றி விடும் என்று ஒரு காட்சியில் சொல்வார். அது அப்படியே நடக்கும். பெயர் இல்லாத மனிதன் (A man with no Name) என்ற பாத்திரத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட். இவர் ஒரு கௌபாய் என்றால் கேள்வி கேட்காமல் நம்பலாம். வாயோரத்தில் சுருட்டு. ரஜினி போல் கட்டைவிரல் நகத்தில் சுண்டி தீக்குச்சியைப் பற்றவைத்து அவர் சுருட்டு பிடிக்கும் பாணி மிகப் பிரபலம். இவருக்கும் எலி வாலக்குக்கும் நடக்கும் உரையாடல்கள் சிரிப்பை வரவழைப்பதோடு சுவாரசியமாகவும் இருக்கும். அந்தத் தீம் ம்யூசிக் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஒரு மிகப்பெரிய சம்பவம் அரங்கேறப்போவது தெரிந்து விடும். அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்த படம் என்றாலும் காமிரா கோணங்களும், எடிட்டிங் சூட்சுமங்களை வியக்க வைக்கும்.
பெரிதாக முயற்சிகள் தேவைப்படாத நடிப்பு. மிக மெதுவாக நகரும் காட்சிகள். இவை படத்தின் நீளத்தை நீட்டிக்க உதவினாலும் பெரிதாகப் போர் அடிக்காது. அதுவும் இப்பொழுது பார்க்கும்பொழுது வசனங்களும் புரிந்து ஒரு கிளாசிக் படம் பார்க்கிறோம் என்று தோன்றும். கிளைமாக்ஸ் தான் இன்னும் சுவாரசியம். மூன்று பேர். மூன்று துப்பாக்கிகள். மூன்று தோட்டாக்கள். புதையல். எது வெடிக்கும் யார் இறப்பார் புதையல் யாருக்கு. ஆனால் இந்தக் கேள்விக்கு விடை தெரிய நாம் 179 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான கல்லறைக்கு நடுவே எலி வாலக் ஓடும் காட்சி ஒன்று போதும். காமிரா ஓட்டமாக ஓடுவதும், படத்தொகுப்பும், அற்புதமான பின்னணி இசையும் அவர் நடிப்பும் இணைந்து 'வாவ்' சொல்ல வைக்கும். இந்தப் படம் ஏன் ஒரு மாஸ்டர் பீஸ் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும்.
ஆங்கிலப்படம் பார்த்துப் பழகியோர் தவற விடக் கூடாத ஒரு படம் தி குட் தி பேட் தி அக்லி.
தமிழ்நாடே வேறொரு குட் பேட் அக்லியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, இதைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதப்பட்ட விமரிசனம் இது. நாளைய ரிலீஸ் நம்ம தல அஜித்தின் 'குட் பேட் அக்லி' விமர்சனத்திற்காக இன்னும் ஒரு நாள் காத்திருங்கள்.