
இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது. இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் தனி இடத்தை பிடித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இவர் பாடிய ‘மஸ்தானா... மஸ்தானா... ’என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த பாடல் பிரபலமடைந்த நிலையில் பல்வேறு பாடல்களை பாடினார்.
ஆரம்பத்தில் தனது தந்தை இளையராஜா, அண்ணன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையில் மட்டும் பாடி வந்த அவர், பின்னாளில் அனைத்து இசையமைப்பாளரின் இசையிலும் பாடத்தொடங்கினார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் இவர் பாடிய பாடல்கள் ஹிட்டாகி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
1995-ம் ஆண்டு இவரது அண்ணன் கார்த்திக் ராஜா இசையில், உன்னிகிருஷ்ணனுடன் சேர்ந்து இவர் பாடிய ’நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா’ என்ற பாடல், வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகியும் இன்று கேட்டாலும் நம்மை தாலாட்ட வைக்கும்.
அதுமட்டுமின்றி இவர் பாடிய ‘என் வீட்டுச் சன்னல்’ ‘தாலியே தேவை இல்லை நீ தான்’, ‘ஒளியிலே தெரிவது’ ‘காற்றில் வரும் கீதமே’, ‘ஆத்தாடி ஆத்தாடி’, ‘தவிக்கிறேன்.. தவிக்கிறேன்’ என்ற பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
தனது காந்த குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட பவதாரணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம்தேதி அவரது 47வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு இளையராஜா குடும்பத்திற்கு மட்டுமின்றி இசை குடும்பத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பவதாரிணியின் இறுதிச் சடங்கின்போது, அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை அவரது குடும்பத்தினர் பாடிய வீடியோ கல் மனதையும் கலங்கச் செய்வதாக இருந்தது.
தனது பெரியப்பா மகளான பவதாரிணி மீது இயக்குநர் வெங்கட் பிரபுக்கு அதிகளவு பாசம் உண்டு. அவரது இயக்கத்திலும் பவதாரணி பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், இன்று பாடகி பவதாரிணியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது தங்கைக்கு உருக்கமான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி! " என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் ‘நீங்கள் சிறந்த மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் சென்ற வருடம் இதேநாளில் பவதாரிணி உடன் இருக்கும் புகைப்படத்தை ரீடுவீட் செய்துள்ளார்.