ஊரையே காலி செய்யும் விசித்திர ஏலியன்! கொரியாவை மிரள வைத்த 'ஹோப்' படம் எப்படி இருக்கு?

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் பரபரப்புடன் உருவாகியுள்ள இந்த கொரிய அதிரடித் திரைப்படத்தின் முழுமையான விமர்சனம்.
ஹோப் விமர்சனம்
ஹோப் விமர்சனம்
நா.மதுசூதனன்

படிப்பு: பி காம் மற்றும் இதழியல் முதுநிலை டிப்ளமோ. ஆர்வம்: கட்டுரை/சிறுகதைகள் எழுதுதல் பிடித்தது : சினிமா, ஓ டி டி, நாடகங்கள்குறித்த விமர்சனங்கள் எழுதுதல். கிரிக்கெட், டென்னிஸ் தொடர்பான கட்டுரைகள். மெட்ராஸ் பேப்பர் என்ற இணைய வார இதழில் கடந்த இரண்டாண்டுகளாகவும் ஜூலை 2024 முதல் கல்கி ஆன்லைனிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். மிஸ்டர் சம்சாரி என்ற பெயரில் முகநூலில் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதி வருகிறேன். பொழுதுபோக்கு: தமிழ், ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது, கிரிக்கெட் பார்ப்பது.

Updated on: 

உலகை அழிக்க வந்த ஏலியன்கள் குறித்து ஏகப்பட்ட படங்கள் பார்த்திருப்போம். எப்போதும் அவை அமெரிக்காவை மட்டுமே தாக்கும். இந்த முறை சற்று வித்தியாசமாகக் கொரியாவை நோக்கி நகர்ந்திருக்கின்றன. 'ஹோப்' என்று ஒரு சிறிய ஊர்; அந்த ஊரில் மாடுகளும் பிற உயிரினங்களும் இறந்து கிடக்கின்றன. ஏதோ ஒரு மிருகம் தாக்கியது போலத் தோன்றுகிறது. புலி, கரடி தாக்கி இறந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதைப் பார்த்த அந்த ஊர்க் காவல் அதிகாரிக்கு அப்படித் தோன்றவில்லை. ஏதோ ஒரு வேற்றுக்கிரக மிருகம் அடித்தது போல நினைக்கிறார்; அதைத் தேடிச் செல்கிறார். உண்மையில் அந்த ஊரைத் தாக்கியது எது, இவர்கள் கடைசியில் என்ன செய்தார்கள் என்பதுதான் 'ஹோப்' படத்தின் கதை.

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன். எது ஊரைத் தாக்குகிறது என்ற தேடுதலிலேயே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடுகிறது. அந்த மிருகத்தின் தாக்குதல்கள் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. ஒவ்வோர் இடத்துக்கும் இவர் செல்லும்போது விதவிதமான அதிர்ச்சியைச் சந்திக்கிறார். பிய்த்தெறியப்பட்ட மிருகங்கள், மனிதர்களின் உடல் பாகங்கள், ஆட்கள் அற்றுக் காலியாகக் கிடக்கும் ஊரில் ஆங்காங்கே பறக்கும் கார்கள், வாகனங்கள் என அந்த மிருகத்துக்கு இவைதாம் ஆயுதங்கள்.

முதல்முறை அதைப் பார்த்ததும் அப்படியொரு அதிர்ச்சியைச் சந்திக்கிறார். யாருமே எதிர்பாராத வேகத்தில் துரத்தும் மிருகங்கள்; பலத்தில் அசாத்தியமானவை; குண்டுகள் அவ்வளவு சீக்கிரம் தாக்காதவாறு தற்காத்துக் கொள்பவை. இந்தத் துரத்தலில் உடன் பணிபுரியும் ஒரு பெண் காவல் அதிகாரியும் சேர்ந்துகொள்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

முதல் பாராட்டு இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு. யாருமே இல்லாத ஒரு நகரம்; அதில் நாயகனின் பார்வையில் நகரும் கேமரா கோணங்கள், சிதிலமடைந்த தெருக்கள், சிதறிக் கிடக்கும் உடல்கள், ரத்தக்கறை படிந்த சுவர்கள் என அந்தக் களமே அருமையாக அமைந்துள்ளது. இதில் படமாக்குவது அப்படியொரு சவால். அதுவும் கார் துரத்தல், மனிதர்களின் ஓட்டம், அந்த மிருகத்தின் நகர்வு என ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை கேமரா. சந்துகளுக்குள், வீடுகளுக்குள், கட்டடங்களுக்குள் என்று புகுந்து புறப்படுகிறது.

ஹோப் விமர்சனம்
ஹோப் விமர்சனம்

ஒரு கட்டத்தில் நடக்கும் அந்த முதல் துரத்தல் படமாக்கப்பட்டுள்ள விதம் அட்டகாசம். அடுத்துப் பாராட்டப்பட வேண்டியவர் கலை இயக்குநர் (Art Director). அந்த ஊர், அதில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் என்று ஒவ்வொன்றும் 'செட்' போலவே தெரியவில்லை. இயக்குநர் என்ன கேட்டாரோ, அதற்கு இரண்டு மடங்கு உழைப்பு இவரிடம் தெரிகிறது.

"நான் அந்த மிருகத்தைப் பார்க்கும் நேரம் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருந்தேன். பார்த்தவுடன் வருவதே நின்றுவிட்டது. ஒரு கையைப் பின்புறத்திலும் ஒரு கையால் வாயையும் மூடிக்கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்கு வயிற்றுப்போக்கு (loose motion) வேறு. அந்தச் சத்தம் கூட கவனத்தை என் பக்கம் திருப்பிவிட்டால் என்னாவது? என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது." - இந்த உரையாடல் நடக்கும் இடத்தை மட்டும் கவனித்துப் பாருங்கள். இப்படியொரு உரையாடல், காட்சியமைப்பு, வசனங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. சிரிப்பு வரும் அதே நேரத்தில் பயமும் லேசாக எட்டிப் பார்க்கும். இந்த உரையாடல் முடிந்த பிறகு இன்னொரு திருப்பம் (twist) பார்ப்பவர்களுக்குக் காட்டப்படும். அதன் பிறகு வேறொரு தளத்தில் பயணிக்கும் படம்.

ஏலியன் தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் ஊர்; அதிலிருந்து தப்பித்தார்களா என்று மட்டும் நகராது படம். அந்த மக்களின் வாழ்க்கை, அவர்களிடம் சரளமாகப் புழங்கும் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள், ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து போராடுவது எனச் செல்லும் இப்படத்தில் வசனங்கள் சுவாரசியமாக அமைந்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு பையன், கலக்கும் இரண்டு நாயகிகள். 'ஹைகூ' இந்த காதல் படம் ஹிட் ஆகுமா?
ஹோப் விமர்சனம்

மக்களோடு மக்களாகப் போராடும் காவல் அதிகாரிகள், இந்த ஏலியன்களை வேட்டையாடச் செல்லும் ஒரு கும்பல், அந்தக் காட்டில் நடக்கும் ஒரு போராட்டம், இறுதியாகச் சாலையில் நடக்கும் இறுதிக்கட்ட (climax) சண்டைக் காட்சி என இருக்கையை விட்டு நகர முடியாதவாறு கட்டிப்போடுகிறார் இயக்குநர் நா ஹாங்-ஜின் (Na Hong-jin).

கணினி வரைகலை (CGI) சற்றுப் பிசிறடித்தாலும், இவருடைய நோக்கம் அதில் இல்லை; அந்தத் துரத்தல்களில் எவ்வளவு பரபரப்பாகக் காட்சிகளை நகர்த்தலாம் என்பதில்தான் இருந்திருக்கிறது. அதுவும் அந்தக் காவல் அதிகாரியின் உறவினராக வரும் 'சுங் கி' என்ற கதாபாத்திரம் வந்ததும் படம் இன்னும் வேகம் எடுக்கிறது. குதிரையில் சென்றவாறு அந்த மிருகத்துக்கு ஆட்டம் காட்டும் சுங் கி-யைப் படத்தின் இடைவேளைக்குப் பிறகான கதாநாயகன் என்று கூடச் சொல்லலாம்.

கொரியப் படங்களில் ஒரு வழக்கம் உண்டு. நாம் சற்றும் எதிர்பாராத இடங்களில் ஒரு திருப்பத்தை வைத்து முடிவை அதிரச் செய்வார்கள்; அல்லது சப்பென்று ஆக்கிவிடுவார்கள். இதிலும் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இதில் இரண்டுமே உண்டு.

இதையும் படியுங்கள்:
பெண் கல்வித் தாகம்: ஏமாற்றமா அல்லது எதார்த்தமா? 'அருள்வான்' படத்தின் முழுமையான விமர்சனம்!
ஹோப் விமர்சனம்

அந்த ஏலியன்களின் தாக்குதல்களைக் காட்டுகிறார்கள், சரி. ஏன் அவை அந்த ஊரைத் தாக்குகின்றன என்பதை இவர்கள் காட்டியுள்ள விதமும் ஏற்புடையதுதான். ஆனால், அவை எதற்காக வந்தன, அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் அதிகமாகப் பேசவே இல்லை. அதனால் படம் முடிந்தும் ஒரு முழுமையான நிறைவு பார்ப்பவர்களுக்கு ஏற்படவில்லை. 'அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று இயக்குநர் விட்டுவிட்டார் போலிருக்கிறது.

ஒரு வித்தியாசமான அதிரடி (action) படம் பார்க்க வேண்டும், தொடங்கினால் படம் பரபரவென்று நகர வேண்டும், சலிப்புத் தட்டக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம்தான் இந்த 'ஹோப்'.

வாசகர்கள் இந்தப் ஹோப் விமர்சனம் மூலம் படத்தை தியேட்டரில் அல்லது ஓடிடியில் பார்க்க வேண்டுமா இல்லையா என்ற தெளிவான முடிவையும், படத்தின் சிறப்பம்சங்களையும் முழுமையாக அறிந்துகொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com