
மும்பையில் சண்முகானந்தா சபாவில் மோகன்லால் நடித்த கர்ண பாரதம் என்ற சமஸ்க்ரித நாடகத்தைக் காண வந்திருந்தார் எம்.டி. வாசுதேவன் நாயர். பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இரண்டாம் நாள் அது திரும்பப் போட வேண்டிய சூழல் ஏற்பட்டதும் அன்றும் வந்து பார்த்து விட்டுச் சென்றார். 'இவ்வளவு கஷ்டப்பட்டு தெரியாத ஒரு மொழியில் நாடகம் நடிக்கிறோம். இவர் ஒரு கருத்தும் சொல்லவில்லையே' என்று மோகன்லாலுக்கு ஒரு வருத்தம். 'திரும்ப வந்து பார்த்தபோதே தெரியவில்லையா எனக்கு அது பிடித்திருக்கிறது என்பது. அதைச் சொல்ல வேறு வேண்டுமா?' என்று பின்னர் ஒரு நாள் கேட்டாராம் வாசுதேவன் நாயர் .
இதே அனுபவம் மம்மூட்டிக்கும். அவர் நடித்த ஒரு மேடை நாடகத்தைப் பார்த்த MTVநாயர், 'தொடர்ந்து நடி. நன்றாக வருவாய்' என்று சொன்னாராம். 'அது வளர்ந்து வரும் நாட்களில் எனக்கு மிகவும் ஊக்கமாகவும் உற்சாகத்தை ஊட்டக் கூடியதாகவும் இருந்தது' என்கிறார் மம்மூட்டி.
மலையாள எழுத்துலகில் மறக்கமுடியாத ஒரு நபர் எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர். மலையாளத் திரையுலகை 'முறப்பெண்'ணுக்கு முன் - பின் என்று பிரிக்கலாம் என்று சொல்வார்கள். 1965 இல் வெளியான அந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியவர் இவர் தான்.
ஷோபனா பரமேஸ்வரன் நாயர் என்பவரின் சிறுகதையை அவர் வற்புறுத்தலின் பேரில் திரைவடிவத்திற்கு மாற்றி எழுதிக் கொடுத்தார் வாசுதேவன் நாயர். அப்படி அவர் வற்புறுத்தவில்லை என்றால் திரையுலகம் பக்கமே எம் டி வாசுதேவன் நாயரின் பார்வை திரும்பியிருக்காது. 'எனக்கு என்னுடைய சிறுகதைகளும் நாவல்களும் போதும் என்றே நினைத்திருந்தேன்,' என்றார் எம் டி.
1973இல் இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் நிர்மால்யம். கோவிலைப் பார்த்துக்கொள்ளும் ஒரு தொழிலைப் பரம்பரையாகச் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பார்வையில் வெளியான இந்தப் படம், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி தேசிய விருதையும் அந்த ஆண்டு வென்றது. கோவிலில் அருள்வாக்கு சொல்பவராக ஏ ஜெ அந்தோணி நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் தனது மனைவி மகள் பற்றிய அதிர்ச்சியான உண்மைகள் தெரியவர, இறுதியில் அவர் எடுக்கும் முடிவு தான் கதை. இப்படியொரு படம் எடுக்க முடியுமா என்று மொத்தத் திரையுலகமும் ஸ்தம்பித்தது. முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய இயக்குனரானார் வாசுதேவன் நாயர்.
இவருடைய இயக்கத்தில், கதையில், நடிக்க நடிகர்கள் போட்டி போட்டனர். மோகன்லால், மம்மூட்டி போன்ற இருவருடைய மிகப் பிரமாதமான படைப்புகள் இவருடைய கதைகள்மூலம் அமைந்தன. மம்மூட்டி நடித்த ஒரு வடக்கன் வீர கதா அவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இதைத் தவிர அடியொழுக்குகள், அனுபந்தம், பழசிராஜா போன்றவை இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள். பழசிராஜா அந்தக் காலக்கட்டத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட மலையாளப்படம் என்ற பெயரைப் பெற்றது.
மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றியவைகளில் அம்ருதம் கமயா, உயரங்களில், சதயம், தாழ்வாரம் போன்றவை மிக முக்கிய படைப்புகள்.
ஒரு மரணதண்டனைக் கைதியாகச் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மோகன்லால் மீது நான்கு பேரைக் கொலை செய்த குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. அவர் ஏன் அந்தக் கொலைகளைச் செய்தார்? திருந்தி வாழ நினைக்கும் அவருக்கு அது சாத்தியமானதா? என்பது தான் சதயம் படத்தின் கதை. சில திடுக்கிடும் திருப்பங்களையும் மலையாளப் படங்களுக்கே உரிய சோகமான முடிவையும் கொண்ட இந்தப் படம் மோகன்லாலின் பெயர் சொல்லும் படமாய் இன்றுவரை இருந்து வருகிறது.
மலையாளத்தில் உருவான ஒரு மேற்கத்திய பாணி படம் என்று தாழ்வாரம் படத்தைக் குறிப்பிடுவார்கள். தனது மனைவியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஒருவனை பழி வாங்க ஒரு மலைக் கிராமத்திற்கு வருகிறார் மோகன்லால். யார் அவரைக் கொன்றது? எதற்காக இவர் பழி வாங்க துடிக்கிறார்? என்பதை பரபரப்பாகச் சொல்லும் படம் தான் தாழ்வாரம். அந்தக் காலக்கட்டத்தில் கேரளாவில் இது போன்ற கதையமைப்பும், இயக்கமும் மிகவும் புதிதானது.
பத்ம பூஷன் உள்ளிட்ட நாட்டின் மிக உயரிய விருதுகளான ஞானபீட விருது, கேரளா மாநில விருதுகள் பல என வாங்கி குவித்துள்ள வாசுதேவன் நாயர் ஒரு பத்திரிகையாளரும் கூட. ஒரு பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய அவர் இதழியல் குறித்து வகுப்பெடுப்பார். அந்த வகுப்பில் மூத்த பத்திரிகையாளர்கள் கூடக் கலந்து கொண்டு கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருப்பார்கள்.
எம்டி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவரது மறைவைக் குறித்துப் பேசும் மலையாள இலக்கியவாதிகள் மலையாளம் இரண்டு எழுத்துக்களை இழந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆறு படங்கள் மட்டுமே இயக்கியுள்ள இவர் ஐம்பத்தி நான்கு படங்களுக்குத் திரைக்கதை அமைத்துள்ளார்.
இருட்டிண்டே ஆத்மாவு என்ற படம் நடிகர் பிரேம் நசிர் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படம் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். ஒரு கூட்டுக குடும்பத்தில் மனநிலை பிறழ்ந்த ஒரு கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் அவர்.
ஹரிஹரன், சசி, பரதன், போன்ற இயக்குநர்களுடன் இணைந்து இவர் அதிகம் பணியாற்றியுள்ளார்.
டீனேஜ் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்கள், சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வைகள் குறித்து இவர் எடுத்த ஆரண்யகம், நகாஷதங்கள். என்னு சுவந்தாந்தம், ஜானகி குட்டி போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.
மம்மூட்டிக்காகக் கதை எழுதும்பொழுது தான் எழுதிய வசனங்கள் அவர் குரலிலேயே தனக்கு கேட்கும்; அந்தளவு பாத்திரங்களை உள்வாங்கி உயிர் கொடுத்து நடிக்கக் கூடியவர் மம்மூட்டி என்று குறிப்பிட்டுள்ளார் வாசுதேவன் நாயர்.
இவரது சிறுகதை, குறுநாவல்களைத் தழுவி மனோரதங்கள் என்ற பெயரில் ஆந்தாலஜி சீரிஸ் ஒன்றை எடுத்துள்ளனர். இதில் மூத்த நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஆசிப் அலி, பாஹத் பாசில், பிஜு மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க, ப்ரியதர்ஷன், ஜெயராஜ், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இது ஜீ 5 ஒடிடியில் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைக்கு அத்திரையுலகம் ஒன்று கூடி செய்த மரியாதை இந்த ஆந்தாலஜி சீரிஸ் என்று சொன்னால் அது மிகையாகாது.