2 in 1 விமர்சனம்: Pretty Lethal & They will kill you - வெட்டு பாதி ரத்தம் மீதி!

Pretty Lethal & They will kill you
Pretty Lethal & They will kill you
Published on

ஆங்கிலப்படங்களில் ஒரு ஜானர் உண்டு. ஒரு வீட்டுக்குள் சிலர் மாட்டிக் கொள்வார்கள். அந்த வீட்டில் கொலைகாரர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். இது தான் கதை. அப்படி மூன்று படங்கள் தொடர்ச்சியாகப் பார்க்க நேர்ந்தது.

பிரெட்டி லெதல் (Pretty Lethal)

அமெரிக்காவிலிருந்து ஹங்கேரிக்கு ஒரு போட்டிக்காகச் செல்லும் பாலே நடனக் குழு. அதில் ஐந்து நடனப்பெண்கள். ஹங்கேரியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மாட்டிக் கொள்கிறார்கள். அங்கு உள்ளூர் தாதாக் கும்பலுடன் தகராறு. அதில் அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் கொல்லப்படுகிறார். அந்தக் கும்பலிடம் வருந்து தப்பித்தார்களா என்பது தான் கதை.

அந்த இரவு விடுதி உரிமையாளராக உமா தர்மன். உள்ளூர் தாதாவுடன் ஒரு தனிப்பட்ட விரோதம். அதைத் தீர்த்துக் கொள்ள இந்தப் பெண்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறார்.

நடனப் பெண்கள் தான் என்று தான் கொலைகார கும்பல் நினைக்கிறது. அந்த நடனத் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு எப்படித் தப்பிக்கிறார்கள். அதைத் தான் வெட்டு, குத்து, ரத்தம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்கி ஜூசன். நடனத்தில் இருக்கும் வலி மிகுந்த பயிற்சிகளே அவர்களுக்கு உதவியாக வருவது நன்று. ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும் உயிர் வாழச் சேர்ந்து இருத்தல் தான் முக்கியம் என உணர்ந்து இணைகிறார்கள் பெண்கள்.

ஒவ்வொருவரின் தனித் திறமையும் வெளிப்படுகிறது. நம்ப முடியாவிட்டாலும் அவர்கள் மொத்தக் கூட்டத்தையும் கொன்று குவிக்கிறார்கள். தலை, கால்கள், கைகள் துண்டு துண்டாகின்றன.

உமா தர்மனின் தனிப்பட்ட பகை என்ன. அந்தப் போட்டியில் கலந்து கொண்டார்களா. இவற்றையெல்லாம் பிரைம் வீடியோவில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பெரிதாகக் கதையெல்லாம் கிடையாது. படம் ஆரம்பித்தால் அது பாட்டுக்குப் போகும். போர் அடிக்காது. அதுவும் வெட்டு ரத்தம் என்று பார்த்து ரசிப்பவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும். அப்படியொரு படம் தான் பிரெட்டி லெதல்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: நீ Forever - படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன?
Pretty Lethal & They will kill you

They will kill you

நகரின் மத்தியில் உள்ளது பழமையான அந்த வீடு. அதில் பணிப்பெண் வேலை. ஒரே நிபந்தனை அவர்கள் சொன்னால் மட்டுமே வெளியே வர முடியும். அங்குப் பணியாற்றப் போகிறார் நாயகி. உள்ளே போனவுடன் தான் தெரிகிறது அது வீடல்ல சாத்தானின் மாளிகை என்று.

நாயகிக்கு ஒரு பிளாஷ் பேக்கும் உண்டு. அடித்துத் துன்புறுத்தும் தந்தையிடம் இருந்து தன் தங்கையைக் காப்பாற்ற நினைக்கிறார். ஒரு சந்தையில் தகப்பனையே சுட்டு விட்டு சிறைக்குச் செல்கிறார். இந்த வீட்டில் தன்னுடைய தங்கையைச் சந்திக்கிறார். இருவரும் சேர்ந்து அந்த வீட்டிலிருந்து தப்பித்தார்களா. இது They will kill you படத்தின் கதை.

உள்ளே சென்ற முதல் நாள் நாயகியை பலியாடு என்று முடிவு செய்கிறார்கள் உள்ளே இருப்பவர்கள். அவர்கள் சாத்தானை வழிபடுபவர்கள். சாவை வென்றவர்கள். வெட்ட வெட்ட முளைப்பவர்கள்.

பார்த்த கதை. பழகிய காட்சிகள். ஆனாலும் ரசிக்க வைக்கும் விஷயங்கள் இரண்டு. ஒன்று நாயகி ஜயாஸீ பீட்ஸ். அலட்சியமாக இந்த வில்லன் கும்பலை சமாளிக்கிறார். கருணயின்றி வெட்டி வீசுகிறார். இது போன்ற ஹாரர் காமடியில் ஒரு வசதி. ஒரு கட்டத்துக்கு மேல் யாரும் எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதர்களுக்குள் உள்ள ஒரு குரூரமான சந்தோஷத்தைத் தொட்டுப் பார்க்கும் படங்கள் தான் இது போன்ற ஹாரர் ஸ்லாஷார் காமடிப் படங்கள்.

ஒரே இடத்தில் நடந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் தான் அதகளம். கிடைப்பவை எல்லாம் ஆயுதங்கள். அதிலும் நாயகியை ஒரே ஒரு விழிப் பந்து மட்டும் தொடரும் காட்சியும், தலையற்ற முண்டம் துரத்தும் காட்சியும் கலகலவென்று இருக்கும்.

இதையும் படியுங்கள்:
திரைவிமர்சனம்: மர்தானி 3 (Mardaani 3 - 2026) @ நெட்பிளிக்ஸ்..!
Pretty Lethal & They will kill you

ஒரு கட்டத்தில் தங்கையும் உடன் சேர்ந்து கொள்ள இருவரும் சேர்ந்து அந்தக் கூட்டத்தை எதிர் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேட்கவே கூடாது. இது ஆங்கிலப் படங்களில் ஒரு ஜானர்.

கியூப், எஸ்கேப் ரூம் பாணியில் இன்னொரு படம். பொழுது போகவில்லை என்றால் கண்டிப்பாகப் பார்த்து ரசிக்கலாம். தியேட்டர் வேண்டாம். காத்திருங்கள் இரண்டு மாதங்களில் ஏதாவது ஓடிடியில் வந்து விடும்.

இந்தப் படத்தின் இயக்குநர் கிரில் சோகோலோவின் இன்னொரு படம் Why dont you just die. பார்க்கவில்லையென்றால் தேடிப் பார்த்து விடுங்கள். சிரிக்க சிரிக்க ரத்தம் தெறிக்க விடும் ஆக்ஷன் திரில்லர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com