

பேமிலி மேன் மூன்றாவது சீசன் வரப்போகிறது என்றதும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆறு ஆண்டுகளில் இது மூன்றாவது சீசன். ஒவ்வொரு சீஸனும் உச்சக்கட்டப் பரபரப்பில் முடியும். காத்திருக்க வைக்கும். 2021 இல் இரண்டாவது சீசன் முடிந்தது. இப்போது மூன்று ஆண்டுகள் கழிந்து அடுத்தது.
ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) ஜே கே தல்படே (ஷரீப் ஆஸ்மி) சுசித்ரா (பிரியா மணி) ருக்மா (ஜெய்தீப் அஹ்லாவத்) இன்னும் பலர் நடித்துள்ளார்கள். ஒவ்வொரு சீசனிலும் ஒரு மாநிலம் என்ற ரீதியில் இந்த முறை வடகிழக்கு மாகாணங்கள். நாகாலாந்து, மணிப்பூர், பர்மா என்று போகிறது கதை. ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்று விசாரிக்க மனோஜும் தலிப் தாஹிலும் செல்கின்றனர், சென்ற இடத்தில் தலிப் தாஹில் கொல்லப்படுகிறார், யார் அதைச் செய்தது என்று கண்டுபிடிக்கக் களத்தில் இறங்குகிறார் மனோஜ். அவரையே குற்றவாளியாகச் சந்தேகப்பட்டு அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்படுகிறது. தனது குடும்பத்தையும் காப்பாற்ற அவர்களுடன் தப்பிச் செல்கிறார் மனோஜ், முடிவு என்ன என்பது தான் கதை.
இந்தச் சீரீஸின் பலமே மேக்கிங்கும், நகைச்சுவையும். இதில் மேக்கிங் நன்றாக இருந்தாலும் நகைச்சுவை அவ்வளவு எடுபடவில்லை. ஏழு அத்தியாயங்கள் இருக்கின்றன. முதல் மற்றும் கடைசி அத்தியாயங்களில் இருக்கும் விறுவிறுப்பு மற்றதில் இல்லை என்பது ஏமாற்றம். ஆக்க்ஷன் குறைவாகவும் பேச்சு அதிகமாகவும் இருக்கிறது.
ஜெய்தீப் வில்லனாக வருகிறார். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு ஒரு குழந்தை என்று அவரையும் இரண்டாவது கதாநாயகனாகவே மாற்றி விட்டார்கள். யாருமே அசைக்க முடியாத ஒரு வில்லனாக வந்தாலும் இந்த மகன் செண்டிமெண்ட் காட்சிகளால் அவர் வில்லன் என்பதே மறந்துவிடுகிறது. இவரது பின்கதையும் பலமாகச் சொல்லப்படாததால் அழுத்தம் குறைவாகத் தெரிகிறது.
இதற்கிடையில் நாடுகளுக்கிடையேயான உறவுகள், ஆயுதப் பேரங்கள், அதற்கு மத்தியஸ்தம் செய்யும் ஒரு வெளிநாட்டு இந்தியர் என்று கிளைக்கதைகள் ஓடுகின்றன. பழைய சீசனில் இவர்களெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்று காட்டச் சிலர் (விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன்) கௌரவ வேடத்தில் வந்து போகிறார்கள். செல்லம் என்ற பாத்திரத்தில் போன சீசனில் கலக்கிய மனிதருக்கு இந்தச் சீசனில் இரண்டே இரண்டு காட்சிகள்.
இந்தச் சீசனைப் பார்க்கும் முன் மற்ற சீசன்களை பார்த்து விடுவது கொஞ்சம் இலகுவாக்க உதவும். தனியாகப் பார்க்கும்பொழுது சில பாத்திரங்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறது என்பது புரியாமல் போகலாம்.
சில டிரோன் ஷாட்கள் அந்தப் பிரதேசங்களின் அழகை அப்படியே கொண்டு வந்து நிறுத்துகின்றன. சண்டைக்காட்சிகளில் பெரிதாகப் புதுமையில்லை. இது போன்ற ஸ்பை திரில்லர்களுக்கே உரிய லாஜிக் மீறல்களும் பரவலாக இருக்கின்றன. நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்துக்குத் தனி விமானங்களில் வந்து போகின்றனர் வில்லன் கும்பல்.
எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு முழுமையான திருப்தி அளித்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். முடிக்கும்போது என்ன ஆகப்போகிறதோ என்று ரசிகர்களை நினைக்க வைக்க வேண்டும் என்று நினைத்தது தெளிவாகத் தெரிகிறது. வில்லன் பாத்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இந்த முறை மனோஜ்க்குக் கொடுக்கவில்லையோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு காரணமாக இருக்கலாம்.
பார்க்கலாம் அடுத்த சீசனில் என்ன ஆகிறது என்பது. ஏனெனில் இது ஒரு விதமான போதை. வந்தால் கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லும் அளவில் பல தொடர்கள் வருவதே இல்லை. பேமிலி மேன் அப்படியொரு சுவாரசியமான தொடர் தான்.
இந்தத் தொடரை ஹிந்தியிலேயே பார்ப்பது உத்தமம். தமிழில் இருந்தாலும் மிகச் சரளமாக உபயோகிக்கப்படும் கெட்ட வார்த்தைகள் தலைப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாக இல்லை.