
ஒரு பேருந்து நிறையப் பள்ளிக் குழந்தைகள். அவர்களின் ஆசிரியை. அந்தப் பேருந்தின் ஓட்டுநர். இவர்கள் செல்லும் பேருந்து சந்திக்கும் மிகப் பெரிய ஆபத்து. எங்கெங்கு திரும்பினாலும் தீப்பிழம்புகள். பசியுள்ள மிருகங்களின் பாய்ச்சல் போலப் பாய்ந்து வருகின்றன. இவர்கள் தப்பித்தார்களா என்பது தான் தி லாஸ்ட் பஸ் (The Lost Bus) படத்தின் கதை.
கலிபோர்னியாவின் மிகப்பெரிய தீவிபத்து. எண்பத்து ஐந்து மரணங்கள். பத்தொன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டம். ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற்றம். இது அத்தனைக்கும் காரணம் பாரடைஸ் (சொர்க்கம்) என்ற அந்த இடத்தில் இருந்த மின்னிணைப்பு நிறுவனம் ஒன்று. அதன் டிரான்ஸ்பார்மர் ஒன்றில் கிளம்பிய சிறிய தீப்பொறி. காற்றின் வேகத்தில் பரவி அந்த ஊரின் ஒட்டுமொத்த வாழ்வையே மாற்றிய தருணம்.
இது ஓர் உண்மைக்கதை. இதைத் திரைப்படமாக மாற்ற முயன்றதில் வெற்றி பெற்றதோடு இல்லாமல் நம்மைப் பதைபதைக்கச் செய்துவிடுகிறார் இயக்குநர் பால் க்ரீன் க்ராஸ். எந்தவிதமான முன்னேற்பாடுகளும் கிடையாது. முதல் காட்சியிலேயே படம் தொடங்கி விடுகிறது. அந்தத் தீப்பிழம்புகளின் பயணத்தோடு நாமும் உடன் செல்கிறோம். ஒரு கட்டத்தில் எது உண்மையான தீ எது கிராபிக்ஸ் என்ற தோற்றம் நமக்குள் எழுவதே இல்லை.
காட்சிகளின் உண்மைத்தன்மைக்காக இரண்டையும் கலந்து தான் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பேருந்தின் ஓட்டுநராக மேத்யூ மெக்காணகி . மனைவியுடன் சண்டை. மகனுடன் சுமுகமான உறவில்லை. தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் சாகும் வரை அவர் முகத்தைப் பார்க்காத தன்மை. தனது தாய்க்காக அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாவற்றிலும் தோல்வியுற்ற ஒரு பாத்திரம். ஆச்சரியம் என்னவென்றால் இதில் அவரது சொந்தத் தாயும், மகனும் படத்தில் தாய் மகனாக நடித்திருக்கின்றனர்.
உடல்நிலை சரியில்லாத மகனைப் பார்க்கப் போகும் நேரம் இந்தப் பள்ளிப்பிள்ளைகளை அவர்கள் பள்ளியிலிருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று விட வேண்டிய நிலை. மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகு அதை ஏற்றுக்கொள்கிறார். தனது ஓவர்டைமோ, கூடுதல் ட்ரிப்களோ கொடுக்காத கண்டிப்பான ஒரு பாஸிடம் அவர் கிட்டத்தட்ட கெஞ்சுகிறார்.
இந்தப் பேருந்து மேற்கொள்ளும் வாழ்வா சாவா பயணத்தில் படத்தைப் பார்க்கும் அனைவரும் பாத்திரங்களாவது போலக் காட்சியமைப்புகள். ஒளிப்பதிவும், இசையும், எடிட்டிங்கும் பதற வைக்கின்றன. உடன் பயணம் செய்யும் அந்த ஆசிரியையும் இவரும் தங்கள் தற்போதைய நிலையைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் உருக்கம்.
இதற்கிடையில் இந்தத் தீயை அடக்கப் போராடும் தீயணைப்பு வீரர்களின் முயற்சிகள், காரணமான நிறுவனத்தின் சங்கடங்கள், ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற இயற்கைப் பேரழிவுப் படங்கள் சுவாரஸ்யத்திற்கு குறைந்த பட்ச உத்தரவாதம். இதில் உச்சபட்சத் திருப்தியுடன் படத்தை முடித்து வைக்கிறார் இயக்குநர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த விபத்துப் பகுதிகளில் இருந்தது போலவே ஓர் உணர்வைக் கடத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தக்குழு.
மெக்காணகியின் நடிப்புக்காகவும், தொழில்நுட்ப நேர்த்திக்காகவும் கண்டிப்பாகப் பார்த்து ரசிக்க வேண்டிய படம் தான் ஆப்பிள் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள தி லாஸ்ட் பஸ்.