
நடிகர் ரவி ராகவேந்திரர் - நடன கலைஞர் லட்சுமியின் மகன் அனிருத் ரவிச்சந்திரன். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் மருமகன் ஆவார். இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான அனிருத் அவரது 21-ம் வயதில் 3 என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். 3 திரைப்படத்தின் ‘வொய் திஸ் கொலவெறி டி‘ என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி முதல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார். இப்போதும் இந்த பாடலை கேட்டால் பொடிசு முதல் பெரிசு வரை ஆட்டம் போடும்.
இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் பிரபலமானது மட்டுமில்லாமல் இவரை தமிழ் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக மாற்றியுள்ளது.
இன்றைய தேதியில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத், விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி அடிக்கடி ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகிறார்.
இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் யூடியூபில் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெறுகிறது. தற்போது இவர் இசையமைப்பில் வெளிவந்த விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடல் உலகளவில் சக்கப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இதன் மூலம் நடிகர் அஜித்தின் 3 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளவில் வெளியானது. 2 ஆண்டுகளாக அஜித் பட ரிலீசுக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் விடாமுயற்சி படத்தை நடிகை திரிஷா, ஆரவ் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்துடன் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் படம் பார்த்து வெளியே வந்த இசையமைப்பாளர் அனிருத் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் படம் பார்க்க வந்தபோது அவரது காரை ‘நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தியிருந்ததால் போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனிருத் பின்னர் சுதாரித்துக்கொண்டு போக்குவரத்து போலீசாரிடம் ரூ.1,000 அபராதம் செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அனிருத்துக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவிய நிலையில் ரசிகர்கள் கலாய்ந்து வருகின்றனர்.