
கிறிஸ்துமஸ் கிராமம் (Christmas Village) என்பது ஒரு மிகச்சிறிய அளவிலான அலங்கார கிராமமாகும். இந்த அலங்காரக் கிராமத்தினை பெட்சு (Putz) என்றும் குறிப்பிடுகின்றனர். பெட்சு எனும் இந்தச் சொல் ஜெர்மன் வினைச்சொல் பெட்சினில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள், 'சுத்தம் செய்வது' அல்லது 'அலங்கரிப்பது' என்பதாகும். கிறிஸ்துமஸ் காலத்தில் புராட்டஸ்டன்ட் பிரிவான மொராவியன் தேவாலயத்தின் பாரம்பரியமான மரபுகளில் இந்தக் கிராமங்கள் அமைக்கப்படுகின்றன.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சலேம், வட கரோலினா மற்றும் பென்சில்வேனியாவின் பெத்லகேமில் தொடக்கக்காலக் குடியேற்றங்களைக் கொண்ட ஒரு புராட்டஸ்டன்ட் பிரிவான மொராவியன் தேவாலயத்தின் விடுமுறை மரபுகளில் இருந்து, கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி, அலங்காரமாகக் கிறிஸ்துமஸ் கிராமங்கள் அமைக்கப்படும் வழக்கம் தோற்றம் பெற்றுள்ளது.
"இது வழக்கமாக விலங்குகளுடன் கூடிய ஒரு விரிவான நிலப்பரப்பின் வடிவத்தைக் கொண்டிருக்கும். பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பிடப்படாத உயிரினமாகவோ அல்லது நோவாவின் பேழையில் பயணித்த அல்லது பயணிக்காத உயிரினமாகவோ இருக்கலாம். வழக்கமான பெட்சு என்பது விவிலியத்தின் வரம்புகளை மீறியதாக இருந்தாலும், தூய்மையான, உற்சாகமான வகையாக இருக்கும்" என்கிறார் கரல் ஆன் மார்லிங்.
அதன் பின்னர் இவை, முந்தையக் காட்சியை விட, அதிகமாகத் தொழில்நுட்பங்கள் கொண்டு இயங்கக்கூடியக் காட்சிகளை உள்ளடக்கியதாக வளர்ந்தன. அதாவது, வேலை செய்யும் மாவு ஆலைகள், குதிக்கும் நாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மின்சார ரயில்களுடன் ஓடும் நீர் போன்ற இயங்கக்கூடியக் காட்சிகள் ஒரு முழு அறையையும் நிரப்பக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. இப்பகுதியில் குடும்பங்கள் ஒவ்வொன்றும், கிறிஸ்துமஸ் கிராமம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. சிறந்த கிறிஸ்துமஸ் கிராமம் அமைத்த குடும்பத்திற்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஜப்பானிய நிறுவனங்கள் அட்டை அல்லது காகித வீடுகள், தேவாலயங்கள் மற்றும் பிற கட்டிடங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்தச் சிறிய கட்டிடங்கள் வழக்கமாக பின்புறம் அல்லது கீழேத் துளைகளைக் கொண்டிருந்தன. இதன் மூலம், கிறிஸ்துமஸ் விளக்குகள் வெளிச்சம் அளிக்கும். கட்டிடங்கள் காகிதம் போன்ற பொதியும் பொருளான, சிறிய வண்ண செலோபேன் சன்னல்களைக் கொண்டிருக்கும். மேலும், இக்கிராமத்தில் பனியின் தோற்றத்தைக் கொடுப்பதற்காக மைக்கா - தூசி நிறைந்த கூரைகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் மலிவான பொருட்களால் ஆனவை மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவலாகக் கிடைத்ததால், அவை மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் அலங்காரமாக மாறியது.
1970 ஆம் ஆண்டுகளில், மட்பாண்டம் அல்லது பீங்கான் கிறிஸ்துமஸ் கிராமங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடையத் தொடங்கின. இந்தக் கட்டிடங்களை உருவாக்கிய முதல் நிறுவனங்களுள் டிபார்ட்மெண்ட் 56 (Department 56) ஒன்றாகும். லெமக்சு (Lamex) போன்ற பிற நிறுவனங்களும் இதேப் போன்றக் கிராமங்களை உற்பத்தி செய்துள்ளன. மேலும் ஏராளமான பிற நிறுவனங்களின் தயாரிப்புகளும் விற்கப்படுகின்றன. ஐரோப்பாவில், லூவில் (Louville) மற்றும் டிக்கன்சுவில்லி (Dickensville) ஆகிய நிறுவனங்கள் இக்கிராமங்களை உற்பத்தி செய்து தருகின்றன.
கிறிஸ்துமஸ் கிராமக் கட்டிடங்கள் வழக்கமாக நிலையான அளவில் செய்யப்படுவதில்லை. ஒரு தேவாலயக் கட்டிடம் உண்மையில், ஒரு சாதாரண வீட்டின் உயரத்தை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், இது மிகவும் சிக்கலான மாதிரிகளை உடைய விந்தையான கிறிஸ்துமஸ் கிராமக் காட்சியாக இருக்கும். எனவே, இந்தக் கிறிஸ்துமஸ் கிராமம், ஒரு தேவாலய கட்டிடம் வீட்டை விட கட்டாயம் உயரமாக இருக்க வேண்டும் என்கிற நிலையினை உருவாக்குகிறது.