

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் என்ற பெயரை கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது பொற்கோவில் தான். இந்தக் கோவில் பழமையும் புதுமையும் இணைந்து காணப்படுகிறது. பார்ப்பவர்கள் கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். சீக்கியர்களின் புனித கோவிலாக உள்ளது. 1502ல் குருநானக் பாதம் பதித்த இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. மன்னர் அக்பரால் இந்த பகுதி மானியமாக வழங்கப்பட்டது.
1577-ல் குரு ராமதாஸ் என்பவர் இங்கு ஒரு குளம் வெட்டினார். அந்தக் குளத்தை சுற்றி ராம்தாஸ் பூர் என்ற நகரம் அமைக்கப்பட்டது. குளத்தின் நடுவில் ஹர்மந்திர் ஷாகிப் என்ற பொற்கோவில் கட்டினார். இதற்கு அடிக்கல் நாட்டியவர் மியான்மீர் என்ற முஸ்லிம் பெரியவர். இங்குள்ள குளம் 'அம்ரித் சர்' என்று அழைக்கப்படுகிறது. அதற்கு 'அமிர்தம் தாங்கிய குளம்' என்று பெயர். ஹர் கோபிந்த் என்பவர் இதன் முதல் மடாதிபதி ஆனார். இவர் கோவிலுக்கு எதிரே அகல் தகத் என்ற கட்டடத்தை கட்டினார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தர்கள் இந்த இடத்தை தாக்கினார்கள். 1764 மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1802-ல் ராஜா ரஞ்சித் சிங் என்பவர் இக்கோவிலை தங்கத்தால் கட்டி அலங்கரித்து அதற்கு பொற்கோவில் என பெயரிட்டார்.
இந்தக் கட்டடங்கள் இந்து இஸ்லாமிய முறையை பின்பற்றி பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.
இங்குள்ள படிகளில் இறங்கி கீழே சென்றால் கோவிலை அடையலாம். இந்த கோவிலில் நான்கு வாசல்கள் உள்ளன. தண்ணீரின் நடுவே கோவிலில் சுற்றி வரும் பாதை முழுவதும் பளிங்கு கற்களால் ஆனது.
இரவில் மின் ஒளியில் ஜொலிக்கும்படி அமைந்துள்ளது சிறப்பு. கரையில் இருந்து தரைப்பாலம் கோவிலுக்கு செல்கிறது. தங்கத்தால் ஆன குவி மாடங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளன.
சின்னக்குவி மாடங்கள் நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. தாஜ்மஹாலை நினைவுபடுத்தும் வகையில் அனைத்து இடங்களும் பல வகையான பளிங்கு கற்களால் இழைக்கப்பட்டுள்ளன. கோவில் முதல் தளத்தில் சீஸ் மஹால் என்ற கண்ணாடி மாளிகை உள்ளது.
சுவர்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலில் சமையலறை முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இங்கு யார் வேண்டுமானாலும் சமையலுக்கு உதவலாம். இரவு பகல் பாராமல் எந்த நேரமும் ரொட்டி, தால், இனிப்பு வகைகள் செய்து பரிமாறப்படுகின்றன.
குரு அமிர்தாஸ் என்பவர் லங்காரில் அனைவரும் உணவு உண்ண வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்.
இதன்படி சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. கோவில் எதிரே கடவுளின் அரியணை உள்ளது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் புத்தகம் இரவில் கொண்டுவரப்பட்டு காலையில் மீண்டும் எடுத்துச் செல்லப்படுகிறது.
கோவில் குருமார்கள் இதனை பாடிக் கொண்டே இருப்பார்கள். இந்த கோவிலுக்கு வருபவர்கள் தங்கள் கால்களை சுத்தம் செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தலையில் துணியை சுற்றிக் கொண்டுதான் கோவிலுக்குள் வரவேண்டும்.
துணி இல்லை என்றால் கோவில் சார்பாக தலையில் அணிந்து கொள்ள துணி வழங்கப்படுகிறது. காலணி, சாக்ஸ், குடை போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றி போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கோவிலுக்குள் போட்டோ எடுக்க அனுமதி இல்லை.
குருநானக் ஜெயந்தியின் போது கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு மின் ஒளியில் ஜொலிக்கும். ஏப்ரல் மாதம் பைசாகி விழா விமர்சையாக நடைபெறும்.
கோவிலை சுத்தம் செய்யும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரமும் திறந்திருக்கும். தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். எந்த நேரம் சென்றாலும் இங்கு பக்தர்களுக்கு ரொட்டி, தால், இனிப்பு வழங்கப்படுகின்றன. காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைத்திருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து 2680 கிலோ மீட்டர், டெல்லியில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் அமிர்தசரஸ் உள்ளது. இங்கு உள்நாட்டவர்கள் தவிர வெளிநாட்டவர்கள் அதிகம் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளும் மற்றும் பக்தர்களும் இந்த கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருவது சிறப்பான அம்சமாகும்.
இரவு பகல் பாராமல் சமையல் கூட செயல்பட்டு வருகிறது. இந்த பொற்கோவில் பக்தர்களின் பசியை போக்கும் கோவிலாக உள்ளது.