

அமெரிக்க வரலாறு:
அமெரிக்காவும் பிரிட்டன் கீழ் அடிமையாக இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், 1776ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி தான் அமெரிக்கா இங்கிலாந்து நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதைத்தான் அமெரிக்க மக்கள் அமெரிக்காவின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்.
அந்த சுதந்திரம் பெற அமெரிக்க மக்களுக்கு உதவியது இரண்டு புத்தகங்கள் ஒன்று தாமஸ் பெயின் (Thomas Paine) எழுதிய "பகுத்தறிவு" புத்தகம், மற்றொன்று ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின். (Uncle Tom's Cabin)
அமெரிக்காவிற்கு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என்று பெயரிட்டு, அமெரிக்கா விடுதலைப் பிரகடனம் செய்வதற்கு மூலகாரணமாக இருந்தது ஒரு புத்தகம்தான் என்றால் அதை நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால், உண்மை!
இங்கிலாந்து நாட்டில் 1737 ம் ஆண்டு பிறந்த தாமஸ் பெயின் ஒரு எழுத்தாளர் பிழைப்பு தேடி அமெரிக்கா வந்த அவர் 'பென்சில்வேனியா மேகஸின்' என்ற பத்திரிகையில் சேர்ந்தார். அப்போது 'நீக்ரோக்கள் 'அமெரிக்காவில் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை கண்டித்து கட்டுரை ஒன்றை முதல் முறையாக எழுதி வெளியிட்டார்.
பின்னர் இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா பிரிந்து விடவேண்டும் என்று வற்புறுத்தி 1775 -ல் புத்தகம் ஒன்றை எழுதி தனது நண்பரான டாக்டர் பெஞ்சமின் ரஷ் கூறிய ஆலோசனைபடி அதற்கு 'பகுத்தறிவு' (Common Sense) என்று பெயரிட்டு வெளியிட்டார்.
தாமஸ் பெயின் (Thomas Paine) எழுதிய "பகுத்தறிவு" (Common Sense) என்னும் புகழ்பெற்ற புத்தகம் 1776 ஜனவரி மாதம் 10 ம் தேதி 47 பக்க புத்தகமாக வெளியிடப்பட்டது. இது அமெரிக்கக் குடியேற்றங்கள் பிரிட்டிஷ்யிடமிருந்து முழுச் சுதந்திரம் பெறவேண்டும் என்பதை எளிய மக்களின் மொழியில் வலுவாக வாதிட்டது. சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல், வெளியான 3 மாதங்களுக்குள்ளேயே 1.2 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. வெகு விரைவில் ஐந்து லட்சம் பிரதிகள் எவ்வித முயற்சியும் எடுக்காமலேயே விற்பனையானது.
ஆயினும் தனக்கு ஒரு சல்லிக்காசு கூட புத்தகம் வழியாக வேண்டாம் என்று பெயின் இறுதி வரை மறுத்துவிட்டார். லட்சக்கணக்கில் விற்பனையாகியதோடு மிகப்பெரிய அறிவுப் புரட்சிக்கும் அமெரிக்க சுதந்திரப் போருக்கும் அடித்தளமிட்டது அந்நூல்.
தாமஸ்பெயினின் "பகுத்தறிவு' நூல் வெளியான ஆறு மாதங்களுக்குள் அமெரிக்கக் கண்டத்து காங்கிரஸ், ஃபிலடெல்பியாவில் உள்ள அரசாங்க மாளிகையில் கூடி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. ஆனால் அமெரிக்க மதவாதிகளும், பழமை வாதிகளும் அவரை ஆபத்தான தீவிரவாதி என்று கடுமையாக தாக்கி அவரை ஒதுக்கினர். அதனாலேயே அவர் மனம் வருந்தி தனது 72 வது வயதில் 1809 ம் ஆண்டு இறந்தார்.
அங்கிள் டாம்ஸ் கேபின் (Uncle Tom's Cabin டாம் மாமாவின் குடிசை)
அமெரிக்க உள்நாட்டுப் போரை தூண்டிவிட்ட ஒரே நூல் என்பதில் 'அங்கிள் டாம்ஸ் கேபின் (Uncle Tom's Cabin): (டாம் மாமாவின் குடிசை) என்ற புத்தகம் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.அமெரிக்காவின் அடிமைத்தனத்தை எதிர்த்து மக்கள் 20 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க அரசுக்கு அடிமை முறை வேண்டுமா..? வேண்டாமா? என்பது குறித்து அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் ஒரு பெரும் போர் ஏற்படுவதற்கு ஒரு 'தீப்பொறியே' வேண்டியிருந்தது. அந்த தீப்பொறியாக ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe, ஜூன் ன் 14, 1811 – ஜூலை 1, 1896.) எனும் பெண்மணி எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின் ("டாம் மாமாவின் குடிசை') பயன்பட்டது.
"ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்' என்ற பெண்மணி அமெரிக்கா நாட்டில் சின்சினாட்டி நகரில் 1811 ம் ஆண்டு ஒரு மத போதகரின் மகளாகப் பிறந்தார். மத போதகர் ஆக வாழ்க்கையை தொடங்கிய ஹேரியட் பின்னர் எழுத்தாளராக மாறினார்.
அன்று அமெரிக்காவில் இருந்த நிறவெறி கொண்ட எஜமானர்களாக விளங்கிய வெள்ளையர்கள் பலரால் சித்திரவதை செய்யப்பட்ட கறுப்பு நிற நீக்ரோ இன அடிமை மக்கள் மதபோதகர் நடத்திய பாடசாலைக்குத் தப்பித்து வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டுக் கேட்டு மதபோதகரின் மகள் ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் மனம் நெகிழ்ந்து எழுதிய காவியம்தான் "அங்கிள் டாம்ஸ் கேபின்' எனும் டாம் மாமாவின் குடிசை புத்தகம்.
ஹேரியட்டுக்கு அவரது உறவினரான திருமதி எட்வர்ட் பீச்சரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது." இந்த நாடே உணரும் வண்ணம் அடிமை முறையின் கொடுமைகளைச் பற்றி எழுது " என்ற அவரது வேண்டுகோளை ஏற்று எழுதத் தொடங்கினார் . ஹேரியட் "நேஷனல் ஈரா" என்ற பத்திரிகையில் ஜூன் 1851 ல் "அங்கிள் டாம்ஸ் கேபின்" யை ஆரம்பித்தார்.தொடர்கதையாக மூன்று வாரங்கள் எழுத எண்ணியவருக்கு ஒரு ஆண்டு வரை எழுதிய பிறகே திருப்தி ஏற்பட்டது.
இரண்டு பாகங்களைக் கொண்ட மிகப்பெரிய நூலாக "அங்கிள் டாம்ஸ் கேபின்' 1852-ம் ஆண்டு வெளியிடப் பட்டது. இதுதான் ஹேரியட் எழுதிய முதல் நூல். கறுப்பின அடிமைகள் அனுபவித்த கொடூரமானத் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்நூல் அச்சடித்து வெளியான ஐயாயிரம் பிரதிகளில் முதல் நாளே மூவாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மீதமுள்ள இரண்டாயிரம் பிரதிகளும் அடுத்த நாளே விற்கப்பட்டுவிட்டன.
இந்நூல் வெளியான ஓராண்டுக்குள் மூன்று லட்சம் பிரதிகள் அமெரிக்காவில் மட்டும் விற்றன. அக்காலத்திலேயே நவீன விசையால் இயங்கிய எட்டு அச்சு இயந்திரங்கள் இரவு பகலாக ஓடி இந்த நூலைத் தொடர்ந்து அச்சடித்த வண்ணமிருந்தன.
இரண்டே ஆண்டுகளுக்குள் உலகெங்கும் சுமார் அறுபது மொழிகளில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது. பின்னர் நாடகமாகவும் அரங்கேறியது. இந்த புத்தகத்திற்காக தனக்கு எந்த விதமான 'ராயல்டி'யும் தேவையில்லை என்று ஹேரியட் கூறிவிட்டார்.
ஹேரியட்டின் நூல் ஆதிக்க நிறவெறிக்கு எதிராக ஒரு பெரும் போரை உருவாக்க மக்களை ஆயத்தப்படுத்த முனைந்தது. என்பதற்கு உதாரணம் 1862 ம் ஆண்டு ஹேரியட் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைச் சந்தித்தபோது அவர் கூறினார்" இந்த பெண் எழுதிய புத்தகமே உள்நாட்டுப் போர் ஏற்படக் காரணமாக இருந்தது " என்று.
இந்தத் தொகுப்பின் மூலம் உலகின் வல்லரசான அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரின் பின்னணியில் அமைந்த இரு சக்திவாய்ந்த புத்தகங்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும், எழுத்து எவ்வாறு ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.