

தீபாவளி என்றதும் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என நம் நினைவுகள் ஓடுகின்றன. ஆனால், இந்தப் பண்டிகைக்குப் பின்னால் பல்வேறு புராணக்கதைகள், பிராந்திய மரபுகள், வாழ்வியல் தத்துவங்கள் மறைந்திருக்கின்றன. ஒரே பண்டிகை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தங்களுடன் கொண்டாடப்படுவது வியப்பானதல்லவா?
தமிழகத்தில் தீபாவளி என்றால் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவது முக்கியமான மரபு. கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், வட இந்தியாவின் பல பகுதிகளில் ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்குத் திரும்பிய மகிழ்ச்சியுடன் தீபாவளி இணைக்கப்படுகிறது.
ஒரே பண்டிகை, வெவ்வேறு கதைகள்!
மேற்கு வங்கத்தில் தீபாவளி இரவு காளி பூஜைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கு சக்தியின் வடிவமான காளியம்மனை வழிபட்டு, தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்ட வேண்டுகின்றனர். குஜராத்தில் தீபாவளியுடன் புத்தாண்டும் தொடர்புடையது.
வணிகர்கள் புதிய கணக்குப் புத்தகங்களைத் தொடங்கி, வருங்காலம் வளமாக அமைய வழிபடுகின்றனர். சீக்கியர்களுக்கு இதே காலம் குரு ஹர்கோபிந்த் அவர்களின் விடுதலையை நினைவுகூரும் பந்தி சோர் திவஸ் என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.
இன்னொரு சுவாரசியமான தகவல் உண்டு. சமண மரபில், 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் தீபாவளி நாளில் நிர்வாணம் அடைந்ததாக நம்பப்படுகிறது. எனவே, சமணர்களுக்கு இது ஆன்மிக விழிப்புணர்வையும் ஞானத்தையும் நினைவுகூரும் நாளாகும். இதனால் தீபாவளி என்பது ஒரே மதத்திற்குள் மட்டும் அடங்கிய பண்டிகை அல்ல தீபாவளி மரபுகள்; இந்தியாவின் பல்வேறு ஆன்மிக மரபுகளிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
தீபாவளியின் மற்றொரு அடையாளம் மண் அகல்விளக்கு. மண்ணால் செய்யப்பட்ட சிறிய அகலில் எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் திரி, இருளை விலக்குகிறது. இதை ஒரு வாழ்வியல் குறியீடாகவும் பார்க்கலாம். நம்மிடம் இருக்கும் சிறிய நன்மைகூட பிறரின் வாழ்க்கையில் ஒளியை ஏற்படுத்த முடியும். விலையுயர்ந்த அலங்காரங்களை விட, பாரம்பரியக் கைவினைக் கலைஞர் களிடமிருந்து அகல் விளக்குகளை வாங்குவது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக இருக்கும்.
இன்றைய காலத்தில் தீபாவளியைக் கொண்டாடும்போது சுற்றுச்சூழலையும் கவனிக்கவேண்டும். அதிக ஒலியுள்ள பட்டாசுகள் குழந்தைகள், முதியவர்கள், செல்லப் பிராணிகள் ஆகியோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். காற்று மாசுபாட்டையும் அதிகரிக்கலாம். எனவே, பாதுகாப்பான கொண்டாட்டம், அளவான பட்டாசுப் பயன்பாடு, இயற்கைக்கு உகந்த அலங்காரங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
தீபாவளியின் பின்னணியில் மறைந்திருக்கும் வியப்பூட்டும் மரபுகள்!
ஒடிசாவில் தீபாவளி அன்று முன்னோர்களை நினைவுகூறும் தனித்துவமான வழக்கம் உள்ளது. சில குடும்பங்களில் சணல் குச்சிகளை எரித்து, அதன் ஒளியில் முன்னோர்களுக்கு வழி காட்டுவதாக நம்புகின்றனர். இது தீபாவளி என்பது நிகழ்கால மகிழ்ச்சியை மட்டும் அல்லாமல் முன்னோர்களுடனான நினைவுப் பிணைப்பையும் வெளிப்படுத்துகிறது.
மகாராஷ்டிரத்தில் தீபாவளியின்போது தயாரிக்கப்படும் பலவகையான கார, இனிப்புப் பலகாரங்கள் "ஃபரால்" என்று அழைக்கப்படுகின்றன. குடும்பத்தினர் ஒன்று கூடி இவற்றைத் தயாரித்து உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும் வழங்குவது அங்குள்ள அழகான மரபு.
வட இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவு கூர்ந்து பல வகையான உணவுகளை இறைவனுக்குப் படைக்கின்றனர் .இது இயற்கைக்கும் உணவுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
தீபாவளி காலத்தில் சில குடும்பங்கள் விரதம் அல்லது கட்டுப்பாடான உணவு முறைகளைப் பின்பற்றி வழிபடுகின்றனர். ஆனால் நோன்பு கடைப்பிடிக்கும் முறை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. குடும்ப மரபுக்கும் வழிபாட்டு முறைக்கும் ஏற்ப வேறுபடுகிறது இத்தகைய வேறுபாடுகள்தான் இந்திய பண்டிகைகளின் பண்பாட்டுச் செழுமையை வெளிப்படுத்துகின்றன.
தீபாவளியின் உண்மையான சிறப்பு வானத்தில் வெடிக்கும் பட்டாசுகளில் மட்டுமில்லை; நம் மனத்தில் மலரும் அன்பிலும், பிறருடன் பகிரும் மகிழ்ச்சியிலும் இருக்கிறது. அறியாமை என்னும் இருளை அறிவால் அகற்றி, வெறுப்பை அன்பால் வென்று, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்வோம். அப்போதுதான் ஒவ்வொரு தீபாவளியும் நம் வாழ்வில் உண்மையான ஒளியை ஏற்றும் திருநாளாக அமையும்.