

அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எல்லோரும் ஆடையை சிறப்பாக உடுத்தினார்கள். வேட்டி, சட்டை, துண்டு என்று ஆண்களும், சேலை, ரவிக்கை, என்று பெண்களும், பாவாடை, சட்டை என்று பெண் குழந்தைகளும், சட்டை, டவுசர் என்று ஆண் குழந்தைகளும், பாவாடை , தாவணி என்று குமரிப் பெண்களும், பேண்ட், சட்டை என இளைஞர்களும் ஆடைகளை உடுத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது பாரம்பரிய உடை:
நமது தாத்தா அந்தக் காலத்தில் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை அணிந்திருந்தார். இந்த வேட்டி, சட்டை, துண்டு இவை அனைத்தும் பருத்தியால் நெய்யப்பட்ட கதர் உடைகளாகும். இவை உடுத்துவதற்கு மிகவும் மெல்லியதாகவும், நல்ல காற்றோட்டமாகவும் இருந்தன. ஏன் நாம் வேட்டி உடுத்துகிறோம் என்று கேட்டால் நம்முடைய நாடு வெப்பம் மிகுந்த நாடாகும். ஆகையால், இந்த பருத்தியால் நெய்யப்பட்ட வேட்டி, சட்டை ஆகியவற்றினை அணிவதன் மூலம் நம் உடம்பு நல்ல குளிர்ச்சியைப் பெறுகிறது.
இதன் மூலம் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? வேட்டிக்கு ஏன் வேட்டி என்று பெயர் வந்தது? வெட்டி தைப்பதால் அதற்கு வேட்டி எனப்பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டை என்பது அரைக்கை சட்டையை மட்டுமே குறிக்கும். அரைக்கைச்சட்டை அணிவதன் மூலம் நம் கைகளுக்குள்ளே காற்று சென்று நம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படுகிறது. அதிக வெப்பம் அடையாமல் உடல் சூட்டை குறைக்கிறது.
துண்டு எதற்கு பயன்படுகிறது?
துண்டாக வெட்டிய துணிக்கு துண்டு என்று பொருள். இந்தத் துண்டை நாம் தோளில் அணிவதன் மூலம் நாம் உடுத்துகின்ற ஆடை நல்ல நேர்த்தியை அடைகிறது. இந்தத் துண்டானது மழை நேரங்களில் தலையில் போர்த்துவதற்குப் பயன்படுகிறது. அந்தக் காலங்களில் பெரியோர்கள் எதையாவது சந்தைக்குச் சென்று வாங்கி வரும்போது துண்டில் கட்டி அதை வாங்கி வருவார்கள். ஊரணியில் உள்ள கண்மாய்களில் குளிக்கும் போது துண்டை இடுப்பில் கட்டி குளிப்பதற்கும் பயன்படுகிறது. களைப்பாக இருக்கும் போது ஏற்படும் வியர்வையை துடைப்பதற்கு இந்த துண்டு பயன்படுகிறது.
பெண்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும் போது வீட்டில் உள்ள துண்டை எடுத்து சுடுமாடு கட்டி அந்த துண்டை தலையில் வைத்து அதன் மேல் குடத்தை வைத்து கொண்டு வருவார்கள் அதற்கும் பயன்படுகிறது. காடுகளில் விறகு வெட்ட செல்லும் ஆண்களும், பெண்களும் சுடுமாடு கட்டி அந்த துண்டை தலையில் வைத்து விறகு கட்டை சுமந்து வருவதற்கும் இது பயன்படுகிறது.
இப்படி துண்டு பல வழிகளில் நமக்கு பயன்படுகிறது. ஆனால் இந்தத் துண்டு தோளில் போடும் கலாச்சாரம் கிராமங்களில் மட்டுமே இன்னும் ஒரு சிலரிடம் இருந்து கொண்டிருக்கிறது. அதிகப் பேரிடம் இந்த துண்டு போடும் கலாச்சாரம் காணப்படுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
பேண்ட், சட்டை எங்கிருந்து வந்தது?
அந்தக் காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயரிடம் நாம் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தபோது ஆங்கிலேயர்கள் பேண்ட், சட்டை அணிந்து இருந்தார்கள். இது அவர்களின் நாட்டினுடைய கலாச்சாரமாகும். ஏனென்றால் அவர்களின் நாடு மிகுந்த பனிப்பொழிவையும், குளிர்ச்சியையும் கொண்ட நாடாகும். ஆதலால் அவர்கள் குளிர்ச்சியில் இருந்து தங்கள் உடம்பை பாதுகாத்துக் கொள்வதற்காக முழுக்கை சட்டையும், முழுக்கால் பேண்டும் அணிந்து, அதோடு ஷுவையும் அணிந்திருந்தார்கள். இது அவர்களின் நாட்டினுடைய ஆடை கலாச்சாரமாகும். நாம் இப்போது அவர்களினுடைய ஆடை கலாச்சாரத்திற்கு மாறிவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வேட்டி, சட்டை அணிபவர்களை வேறு விதமாக பார்ப்பவர்களும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வேட்டி, சட்டை அணிபவர்கள் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. வேட்டி, சட்டை விற்பனை என்பது 'அத்தி பூத்தாற்போல' பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில் மட்டுமே விற்பனையாகிறது. ஆனால் பேண்ட், சட்டை வருடம் முழுதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
மாடர்ன் டிரஸ்க்கு மாறி விட்டோம்:
பெண்கள் உடுத்தும் ஆடைகளில் எத்தனையோ விதமான ரகங்கள் வந்து விட்டன. லெக்கின்ஸ், டாப், சுடிதார், ஜீன்ஸ் என்று பலவிதமான ஆடைகள் நம் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டன.
ஜீன்ஸ் என்று சொல்லக்கூடிய முரட்டு ஆடையை நாம் அணிவதன் மூலம் நம்முடைய உடல் சூடு அதிகரிக்கிறது. அதனை பிடிப்பாக போடும்போது நம் உடலில் இருக்கக்கூடிய நரம்புகள் அழுத்தம் ஏற்பட்டு கால் வலி ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் தடை படுகிறது.
உடலை மறைப்பதற்காகத்தான் நாம் அன்றையக் காலகட்டத்தில் ஆடையை உடுத்திக் கொண்டிருந்தோம். உடலை மறைக்கும் ஆடையைக் கூட கிழித்து விட்டு இன்று ஃபேஷன் என்று பெருமை கொள்கிறோம். சிறு குழந்தைகளுக்கு கூட பட்டுப்பாவாடை, பட்டுச்சட்டை என்பது யாரும் இப்போது உடுத்துவதே இல்லை. எல்லோரும் மாடர்ன் டிரஸ் போட்டு குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நாம் அன்று உடுத்தியிருந்த ஆடையைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
நெசவு செய்யப்பட்ட ஆடைகள்:
நல்ல பருத்தி நூலில் நெய்யப்பட்ட வேட்டி, சட்டை, துண்டு, சேலை ஆகியவை நிறைய இருக்கின்றன. அவற்றை நாம் உடுத்துவதால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மையாகும். இதன் மூலம் நெசவுத்தொழில் செய்யக்கூடிய மக்களும் நன்மை அடைவார்கள். இப்படிப்பட்ட ஆடைகளை மட்டுமே உடுத்துவது சாலச்சிறந்ததாகும்.