

உளியின் ஓசையும் உயிர் பெறும் கற்களும் மயிலாடி கல் சிற்பங்களின் மகத்தான வரலாறு ஆகும். கன்னியாகுமரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த மயிலாடி கிராமம். இந்த கிராமத்தில் நீங்கள் உள்ளே நுழைந்தால் எங்கு பார்த்தாலும் உளி சத்தமும் கல் தூசியுமாகத்தான் காணப்படும். கடற்கரை அருகில் இருந்தும் கடல் அலை ஓசையை கேட்க முடியாது உளி சத்தத்தைதான் கேட்க முடியும்.
மயிலாடி சிற்பங்கள்:
இந்த ஊர் மாபெரும் திறந்தவெளி கலைக்கூடம் ஆகும். இங்குள்ள கிருஷ்ணன் சிலை என்ற பாறையில் இருந்துதான் பெரும்பாலான சிற்பங்கள் வடிக்கப் படுகிறது. பழமையான சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற இடமாக இந்த ஊர் விளங்கி வருகிறது. உயிரற்ற பாறையை மக்கள் கையெடுத்து கும்பிடும் கடவுளாக மாற்றும் கல் தச்சர்கள் சுமார் 600 ஆண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலின் பெரும்பாலான கல் சிற்பங்கள் இசை தூண்கள் கோபுர நிலைகள் போன்றவை இங்குள்ள கல் தச்சர்களை கொண்டு செதுக்கப்பட்டதாகும்.
அக்காலத்தில் சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயம் கோவிலுக்காக வடிக்க பல இடங்களில் இருந்தும் கல் தச்சர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மூலம் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இங்கேயே தங்கி கோவில் வேலைகள் முழுவதையும் முடித்துக்கொடுத்தார்கள் அன்றிலிருந்து இன்று வரை பரம்பரை பரம்பரையாக இங்கேயே தங்கி இந்த தொழிலை செய்து வருகிறார்கள்
சுசீந்திரம் தாணுமாலயம் கோவிலின் 134 அடி உயர ராஜகோபுரம் மற்றும் கல்தூண்கள் சிற்பங்கள் இங்கு உள்ள தச்சர்களால் செதுக்கப்பட்டவை ஆகும். இங்குள்ள தெங்கம் பொத்தை மலையில் சிற்பங்கள் செய்ய தேவையான கற்கள் உள்ளது.
எனவே தொழிலாளர்கள் இங்கேயே குடியேறினார்கள் அதன் பின்னர் இங்கே நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்
இங்குள்ள சிற்பிகள் உலகப் புகழ்பெற்ற சிற்பங்களை சிலைகளை செய்து வருகிறார்கள் கிருஷ்ணன் சிலை என்ற பாறை சுவாமி சிலைகள் செய்ய பயன்பட்டு வருகிறது. இந்தப் பாறையில் பழுப்பு சாம்பல் நிறம் வெளிர் சிவப்பு கருப்பு வெள்ளை என பல நிறங்களில் பாறை கற்கள் கிடைக்கிறது.
ஆண் கல்
சுத்தியலால் தட்டும்போது கடினமான ஓசையை எழுப்பும் . இந்தப் பாறையில் வேலை செய்யும்போது தீப்பொறிகள் பறக்கும் இந்தக் கற்களில் தான் சிவன் விஷ்ணு முருகன் விநாயகர் போன்ற சிலைகள் செய்யப்படுகின்றன
பெண் கல்
இந்தக் கல்லை தட்டும்போது மென்மையான இனிமையான ஓசை எழும்பும். இந்த வகையான கற்களில் அம்பாள் துர்க்கை காளி போன்ற சிலைகள் செய்யப்படுகிறது.
கரடுமுரடான கற்களை அழகிய சிற்பங்களாக மாற்றுவது தவத்திற்கு ஒப்பானது. இது பல படிநிலைகளைக் கொண்டது. முதன் முதலில் சிலைகள் செய்யும்போது அந்த கற்களுக்கு சூடன் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன் பிறகு பூஜை செய்து அதன் பின்னர்தான் சிலை வேலை நடைபெறுகிறது. இங்குள்ள சிற்பிகள் இங்கு உள்ள கற்களை ஜடப் பொருளாக பார்க்காமல் தெய்வத்தின் இருப்பிடமாக பார்க்கிறார்கள்.
ஒரு மனித உடலின் அமைப்பு 9 தாளங்களைக் கொண்டது.
சிலையின் உயரம் அகலம் கை கால் நீளம் போன்றவை துல்லியமாக கணக்கிடப்படுகிறது. சிலைகள் செய்து முடித்ததும் சொரசொரப்பாக காணப்படும் அதனை மிருதுவாக தண்ணீர் உப்புத்தாள் அரம் கொண்டு மெருகேற்றுகிறார்கள்.
சிற்ப வேலைகள் முடிந்ததும் கடைசியாக கண் திறக்கும் சடங்குகள் நடைபெறும். நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தங்க ஊசி பிரத்தியேகமாக செய்யப்பட்ட உளி இவற்றால் கருவிழிகளை செதுக்குவார்கள்.
அந்த நொடிதான் கல் தெய்வமாக மாறுவதாக ஐதீகம் இங்கு தெய்வச் சிலையை தவிர அரசியல் தலைவர்கள் கட்டபொம்மன் விவேகானந்தர் வள்ளுவர் போன்ற சிலைகளும் செய்யப்படுகின்றன.
இவை தவிர கோவிலுக்கு தேவையான அம்மி உரல் யாழி உருவங்கள் கல் தூண்கள் போன்றவை மிகுந்த வேலைப்பாட்டுடன் செய்யப்படுகிறது.
இங்கு செய்யப்படும் சுவாமி சிலைகள் அமெரிக்கா ரஷ்யா, ஆஸ்திரேலியா லண்டன் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் சங்கத்தின் வாயிலாக சுவாமி சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தத் தொழில் 1958ல் இருந்து குடிசை தொழிலாகவே இருந்து வருகிறது. 2023 இங்கு தயாரிக்கப்படும் சிலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கருங்குளம் பணகுடி போன்ற இடங்களில் இருந்தும் சிலைகள் செய்ய பாறைகள் கொண்டுவரப்படுகிறது.
இந்த இடத்தில் 600 ஆண்டு காலமாக கல் தச்சர்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான கல் சிலைகள் தயாரிக்க போதுமான அளவு கற்கள் தெங்கம் பொத்தை
மற்றும் கிருஷ்ணன் பாறை போன்ற இடங்களில் இருந்து கிடைத்து வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் தெய்வச் சிலைகள் பெங்களூர் திருவனந்தபுரம் ராஜஸ்தான் டெல்லி போன்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. தற்போது 500க்கும் மேற்பட்ட சிற்பிகள் இருக்கிறார்கள்
கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையும் இங்குள்ள சிற்பிகளின் கை வண்ணத்தால் ஆனது. சுசீந்திரம் தானுமாலையன் கோவிலுக்காக வேலை செய்ய வந்த சிற்பிகள் தங்களது குடும்பங்களுடன் இங்கேயே தங்கி தற்போது பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.