

நமது நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாவிற்கும் மனோதத்துவமான அடிப்படை உண்டு. அதிலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நவராத்திரிக்கு மிகவும் ஆழமான பின்புலம் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாய் உற்றுப் பார்த்தால் நமது மூதாதையரின் மூளை எந்த அளவுக்கு முகிழ்வாய்ச் செயல்பட்டிருக்கிறது என்பதை உணரமுடியும்.
இலக்கியத்தில், ஒன்றிலிருந்து ஒன்பது வரை, ஒவ்வொரு எண்ணுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்!
ஒன்றே உலகத்துக் கடவுள்;
இரண்டோ, பரமாத்மாவும் ஜீவாத்மாவும்;
மூன்று, படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுளர்;
நான்கு பருவங்கள்;
ஐந்து திணைகள், (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை), பஞ்ச பூதங்கள்;
ஆறு சுவைகள்;
ஏழு ராகங்கள்;
எட்டுத் திசைகள், எண் குணங்கள்;
ஒன்பதிற்கோ… நவ ரசங்கள், நவத் துவாரங்கள், நவகண்டங்கள், நவ கிரகங்கள் என்று நீட்டிக்கொண்டே போகலாம்.
ஓரிலக்க எண்ணில் உயர்வானதும் இந்த ஒன்பதுதான்! அடுத்து ஈரிலக்கப் பத்து வந்துவிடும். இவற்றின் காரணமாகத்தான் ஒன்பது இரவுகளும் பத்து நாட்களும் கொண்டாட
ஒன்பதைத் தேர்ந்தார்கள் போலும். ஶ்ரீராமன் அவதரித்தது நவமி திதியில்தான்.
ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஒன்பது இரவுகளை அம்பாளுக்காக ஒதுக்கி, மங்கையர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் சேர்த்துக் கொண்டு, மகிழ்வாக அனைவரும் கொண்டாடும் விழா என்பதும் இதன் தனிச்சிறப்பு.
பெண்மையைப் போற்றும் பெருவிழா முதல் மூன்று ராத்திரிகளும் துர்க்கை அம்மன் வழிபாடு. வீரம் மற்றும் சக்தி வாயிலாக தீயசக்திகளை விரட்டுவது.
நான்கு, ஐந்து, ஆறாம் இரவுகளில் லட்சுமி வழிபாடு. செல்வம், வளம் மற்றும் அமைதி வேண்டி.
ஏழு, எட்டு, ஒன்பதாம் நைட்களில் சரஸ்வதியைத் தொழுதல். கல்வி, ஞானம் மற்றும் கலை வளர்ச்சியைப் பெருக்க விரும்பி.
இதிலும் மனித மன நிலையைக் கருத்தில் கொண்டுள்ளது வியப்பளிப்பதாகும்.
தீய சக்திகள் ஒடுக்கப்பட்டால், நெஞ்சின் நினைவுகள் நல்லவற்றை நோக்கித் திரும்பும். அப்படித் திரும்பும் நல்ல எண்ணங்கள் தொடர வேண்டுமானால்,
பசி, பட்டினி இல்லாத நிலை வேண்டும். செல்வத்தின் மூலம் பசி, பட்டினி விரட்டப்பட்டு வளம் பெருகும். பெருகும் வளத்தால் மனதில் மெல்ல அமைதி குடியேற ஆரம்பிக்கும். அமைதி நிறைந்த மனத்தில்தான் கல்வியும், ஞானமும், கலைகளும் குடிகொள்ளும்.
பசி வயிற்றைக் கிள்ளுகையில், தீயஎண்ணங்கள் மனதில் புகுந்து அழிவுக்கு அச்சாரம் போடும். ’பசி வந்தால் பத்தும் பறந்து போம்!’ என்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டுதானே ஐயா காமராஜர், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பசி அடங்கிய வயிறே படிப்பினை, பல பயிற்சிகளை மேற்கொள்ளத் தயாராகும்.
பொருளாதார நிறைவு அடைந்தால் மட்டுமே மற்றவற்றைப் பற்றி மனது சிந்திக்கும். நமது நாட்டில் பெரும்பாலானோர் தங்கள் வயிற்றையும், தங்களைச் சார்ந்தவர்களின் வயிற்றையும் நிரப்பும் போராட்டத்திலேயே வாழ்க்கையைக் கழித்துவிடுகின்றனர். அது முழுதாக மாறி, கலையும், கல்வியும், ஞானமும் பெருக வேண்டுமென்பதற்காகவே இந்த நவராத்திரி வழிபாடு!
நாம் கொண்டாடும் நவராத்திரி விழாவில் எவையெல்லாம் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன என்று பார்த்தால்,மனித வாழ்வைச் செம்மைப்படுத்தும் அனைத்துமே சிறப்புப் பெறுகின்றன.
பல படிகளில் கொலு
சிற்பக் கலையின் சிறப்பம்சமாக விளங்கும் பொம்மைகள். உலோகத்தில், மண்ணில், காகிதத்தில் என்று பலவித மூலப்பொருட்களில், பலவித வண்ணங்களில்!
5,7,9 என்று பல படி நிலைகளில். அஷ்ட லட்சுமிகள், முருகனின் அறுபடை வீடுகள், இறைவனின் பத்து அவதாரங்கள், ராமர் பட்டாபிஷேகம், பெரிய கோயில்கள், ஐவகைத் திணைகளை விளக்குபவை, உழவு மாடுகள், உழைக்கும் மக்கள், கிராமங்கள், நகரங்கள், அகல் விளக்குகள், மின் லைட்டுகள் என்று நமது பெண்களின் கற்பனை வளமெல்லாம் கொலுவில் எதிரொலிப்பதைக் காணலாம்.
பல கலரில் கோலங்கள்
கோடுகளே கோலங்கள் ஆனாலும், அவற்றை இணைக்கும் அணங்குகளின் கற்பனை, விரலசைவு, மூளைக்கு வேலை ஆகியவற்றால் உடலில் ஏற்படும் உற்சாகம் கொஞ்சமல்ல.
பலவிதமான உணவு வகைகள்
மனிதனின் மூன்று அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் முதல் நிலை வகுக்கும் உணவுக்குப் பிரதான இடம் அளிப்பதோடு மட்டுமின்றி, தினந்தினம் விதம் விதமான ஆடைகளை அணிவதோடு, உறைவிடத் தூய்மையும் இந்தத் தினங்களில் செம்மையாகப் பேணப்படுகிறது.
இவற்றுக்கும் மேலான சிறப்புக்களும் இந்த நவராத்திரிக்கு உண்டு. கோடை முடிந்து, மழையும் குளிரும் தொடங்கும் இப்பருவத்தில் மனித உள்ளங்கள் சற்றே
மிரட்சியடைந்து காணப்படும். மன பயத்தைப் போக்கும் மகத்தான சக்தி கொண்டவை உறவுகளும், உண்மையான நட்புந்தான்!
நவ நவராத்திரி கொண்டாட்டம் ஒன்பது இரவுகளிலும், பலப்பல உறவினரையும், அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுவதால், மனம் தெளிவு பெற்று, அமைதியுறும்.
அமைதியான மனமே ஆண்டவன் வசிக்கும் இடமாகும்! இதயத்தை இறை பக்தி நிறைத்துவிட்டால், நிம்மதிக்குக் குறைவிருக்காது. நிம்மதியைத் தேடித்தானே நீளுலகம் சுற்றி வருகிறது!
அந்த நிம்மதியை அளிப்பதுதான் இந்த நவராத்திரி!
நவராத்திரியைச் சேர்ந்து கொண்டாடி, நிம்மதி அடைவோம்!