பொங்கலா? தீபாவளியா? தமிழர்களின் பண்பாட்டு வேர்களைத்தேடும் சுவாரஸ்ய வரலாறு!

மண்ணின் அறுவடைத் திருவிழா எப்படி தமிழகத்தின் பெரும் பண்டிகையாக மாறியது?
தீபாவளி வரலாறு - Tamil culture history
தீபாவளி வரலாறு - Tamil culture history
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

தமிழகத்தில் மக்கள் பெருமளவில் கொண்டாடும் இரு பெரும் பண்டிகைகள் பொங்கலும் தீபாவளியும்தான். எனினும், இவ்விரு பண்டிகைகளுக்கும் இடையில் பண்பாட்டு ரீதியான வேறுபாடும், மக்கள் அதைக் கொண்டாடும் பின்புலமும் முற்றிலும் மாறுபட்டவை.

பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை கிராமங்களில்தான் ஆழமாகவும், அதிக அளவிலும் இருக்கும். அங்கிருந்துதான் நகர்ப்புறங்களுக்குப் பரவும். ஆனால், நாகரிகமயமான நகர்ப்புறங்களில் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை ‘மண்ணில் வேரூன்றி’ வாழ முடிவதில்லை. ‘தொட்டிச் செடி’ வாழ்வாகவோ, ‘மொட்டை மாடித் தோட்ட’மாகவோதான் எஞ்சியிருக்க முடிகிறது.

பொங்கல், அறுவடைக்காலப் பண்டிகை; உழவையும் இயற்கையையும் அடிப்படையாகக் கொண்டு, நமது மண்ணோடும் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் நேரடியாகப் பிணைந்து உருவான மண்ணின் பண்டிகை. அதனால்தான் கிராமப்புறங்களில் ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, புத்தாடை அணிந்து, பொங்கலை மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி வரலாறு:

மாறாக, தீபாவளி என்பது மண்ணின் வாழ்வியல் சார்ந்த பண்டிகை அல்ல; அது புராணக்கதைகளின் அடிப்படையில் அமைந்த தொன்மப் பண்டிகை. இதன் காரணமாகவே, தீபாவளிக் கொண்டாட்டம் என்பது பிரதானமாக நகர்ப்புற நுகர்வோர் கலாச்சாரத்தைச் சார்ந்து, அங்கு விமரிசையாகக் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் இதற்கான பண்பாட்டுப் பிணைப்பு குறைவு என்பதால், அங்கு தீபாவளிக் கொண்டாட்டம் சுமாரான அளவிலேயே அமைகிறது.

இந்த அடிப்படையைப் புரிந்துகொண்ட பின், ‘வரலாற்று ரீதியாகத் தீபாவளி எப்போது தமிழகத்திற்கு வந்தது?’ என்ற கேள்வியை அணுகுவது அவசியமாகிறது.

தீபாவளி வரலாறு - Tamil culture history
தீபாவளி வரலாறு - Tamil culture historyImage credit: Pixabay

சங்க காலத்தில் தீபாவளி இருந்ததா?

சங்க இலக்கியங்கள் (கி.மு. 300 – கி.பி. 300) மற்றும் அதற்குப் பிந்தைய சங்கம் மருவிய கால நூல்களை ஆராய்ந்தால், ‘தீபாவளி’ என்ற பெயரிலோ அல்லது ‘நரகாசுர வதம்’ சார்ந்த கதைகளின் பின்னணியிலோ எந்தவொரு கொண்டாட்டமும் தமிழர்களிடம் இருக்கவில்லை.

தமிழர்களின் பாரம்பரிய ‘விளக்குத் திருவிழா’ என்பது கார்த்திகை மாத முழுநிலவு நாளில் கொண்டாடப்பட்ட ‘கார்த்திகை தீபத் திருவிழா’ மட்டுமே.

“பெருவிழா விளக்கம்” (அகநானூறு 141)

“அகலிருள் அகன்ற பகல்செய் விளக்கம்” (நற்றிணை 202)

சங்க இலக்கியங்களில் சுட்டப்படும் இந்த விளக்கீடு, கார்த்திகை விளக்கீட்டையே குறிக்கிறது. சங்க காலத்தில் நிலம், மழை, அறுவடை, இயற்கை வழிபாடு மற்றும் போர் வெற்றிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதே அன்றி, புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகள் தமிழர்களின் அன்றாட வாழ்வியலில் இடம்பெறவில்லை.

தமிழகத்திற்குள் தீபாவளி எப்போது நுழைந்தது?

வரலாறு மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின்படி, தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் பரவலாக வளர்ச்சி பெற்றது கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஆகும்.

கி.பி. 1370 - 1500 (விஜயநகரப் பேரரசின் வருகை): குமார கம்பணனின் படையெடுப்பைத் தொடர்ந்து விஜயநகரப் பேரரசின் அதிகாரம் தமிழகத்தில் விரிவடைந்தது. கன்னட மற்றும் தெலுங்குப் பகுதிகளைச் சேர்ந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், வணிகர்களும் தமிழகத்தில் குடியேறியபோது, தீபாவளி மரபு தமிழகத்தில் மேலும் பரவியது.

கி.பி. 1558 - 1750 (நாயக்க மன்னர்களின் ஆட்சி): மதுரை, தஞ்சாவூர், செஞ்சி நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தீபாவளி அரச பண்டிகையாக ஆதரவு பெற்றது.

இதையும் படியுங்கள்:
தீபாவளி: கொண்டாட்டத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் வியப்பூட்டும் உண்மைகள்!
தீபாவளி வரலாறு - Tamil culture history

கி.பி. 1676 - 1855 (தஞ்சாவூர் மராத்தியர் காலம்): தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்கள் காலத்தில் வடஇந்தியத் தீபாவளி மரபுகள் (லட்சுமி பூஜை, பலகாரங்கள் தயாரிப்பு) தஞ்சைப் பகுதியில் பரவின.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் இதையே உறுதிப் படுத்துகின்றன. இத்தாலியப் பயணி நிகோலோ டி கொண்டி (Niccolò de' Conti) தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பதிவு செய்துள்ளார்; போர்த்துகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் (Domingo Paes) விஜயநகரத்தின் தசரா / நவராத்திரி விழாக்களை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

ஆன்மிக மற்றும் தொன்மவியல் பின்னணி

தீபாவளி தமிழகத்திற்குள் நுழைந்தபோது, அது புராணக் கதைகளுடனும் ஆன்மிகக் கருத்துக்களுடனும் இணைந்து வந்தது.

நரகாசுர வதம் மற்றும் கங்கா ஸ்நானம்: தமிழகத்தில் தீபாவளிக்குச் சொல்லப்படும் முதன்மையான கதை நரகாசுர வதமாகும். பிரக்ஜோதிஷபுரத்து அசுரன் நரகாசுரனைத் திருமாலின் அவதாரமான கிருஷ்ணனும் சத்யபாமாவும் இணைந்து வதம் செய்த நாளாக இது கருதப்படுகிறது. நரகாசுரனின் ரத்தக் கறையையும், போர் அசுத்தத்தையும் நீக்கக் கிருஷ்ணன் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்ததாகக் கூறப்படும் கதையின் அடிப்படையில், ‘கங்கா ஸ்நானம்’ என்ற சடங்கு தமிழகத்தில் உருப்பெற்றது.

இதையும் படியுங்கள்:
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி: நாம் தொலைத்த அந்த பொன்னான தருணங்கள்!
தீபாவளி வரலாறு - Tamil culture history

சமண மதத் தாக்கம்: சமண சமயத்தில் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர் நிர்வாணம் (முக்தி) அடைந்த நாளாகத் தீபாவளி கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சமண மதம் செழித்திருந்தபோது, மகாவீரரின் முக்தி நாளை ஒளியேற்றிக் கொண்டாடும் வழக்கம் நிலவியது. இதுவும் காலப்போக்கில் தீபாவளி மரபோடு இணைந்து கொண்டது.

சமூக மற்றும் வணிகப் பார்வையில் உருமாற்றம்

விஜயநகர மற்றும் நாயக்கர் காலம்: தீபாவளி என்பது அரச குடும்பங்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் மேல்தட்டு மக்களுக்கான பண்டிகையாக மட்டுமே இருந்தது.

ஆங்கிலேயர் காலம்: சிவகாசியில் பட்டாசுத் தொழில் வளர்ந்ததைத் தொடர்ந்து, தீபாவளி என்பது பட்டாசுகளுடன் கூடிய விழாவாக மாறத்தொடங்கியது.

20-ஆம் நூற்றாண்டு: ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்கள், ஊடகங்களின் சிறப்பு மலர்கள், தீபாவளி போனஸ் மற்றும் நுகர்வோர் சந்தையின் வளர்ச்சியால் ஒட்டுமொத்த மக்களின் பொதுவான வர்த்தக விழாவாக மாறியது.

முடிவுரை

பொங்கல், தமிழக மண்ணில் முளைத்த பண்டிகை. தமிழர்களின் உழவு மற்றும் மண்ணோடும், விவசாயிகள் வாழ்வோடும் பிணைந்த அறுவடைப் பண்டிகை. ஆனால், தீபாவளி வட இந்தியாவிலிருந்து இங்கு குடியேறிய பண்டிகை.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்குள் நுழைந்து, காலப்போக்கில் தமிழர்கள் தழுவிக்கொண்ட புராணப் பண்டிகை. என்றாலும் பொங்கலுக்கு இணையாக அதுவும் தமிழர்களின் பெரும் பண்டிகையாக வளர்ந்து நிலைகொண்டுவிட்டது. வணிகத் தளங்களில் பொங்கலைப் பின்னுக்குத் தள்ளி தீபாவளிதான் முதலிடம் வகிப்பதாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தீபாவளி 2026: கங்கா ஸ்நானம் முதல் லட்சுமி குபேர பூஜை வரை - உகந்த நல்ல நேரம் என்ன?
தீபாவளி வரலாறு - Tamil culture history