

இன்றைய அவசரமான ஓட்டத்தில் காலை உணவாக பிரெட் டோஸ்ட், ஆம்லெட், சாண்ட்விச் போன்றவற்றை எடுத்து கொள்கிறோம். சில பேர் அவசர அவசரமாக ஒரு கைகளில் இந்த சாண்ட்விச்சை சாப்பிட்டு கொண்டு ஆபீஸிற்கு கிளம்புவதை நாம் பார்த்திருப்போம்.. குழந்தைகளுக்கு கூட ஸ்கூல் பஸ்ஸோ அல்லது ஆட்டோவோ வந்துவிட்டால் தாய்மார்கள் இதை ஒரு டப்பாவில் போட்டு கொடுத்து விடுவார்கள்.
குழந்தைகளும் சீட்டில் உட்கார்ந்தபடியே ஸ்கூலுக்கு போவதற்கு முன்னாலேயே சாப்பிட்டு முடித்து விடுவார்கள். விமானத்தில் பயணம் செய்யும் போது கூட காலை உணவாகவோ இல்லது மாலை உணவாகவோ இதைத்தான் கொடுப்பார்கள். மாலை நேரத்து சிற்றுண்டியாகவும் இதை நிறைய பேர் உண்கிறார்கள்.
இரண்டு பிரெட் துண்டுகளுக்கு இடையில் வெள்ளரி, வெங்காயம், குடை மிளகாய் போன்ற காய்கறிகளின் துண்டுகளோடு சீஸ் அல்லது பட்டரை வைத்து உண்பார்கள் இல்லை என்றால் மாமிச உணவை வைத்து உண்பார்கள்.
எங்கேயாவது அவசரமாக செல்ல வேண்டி வரும் போது கூட பேக்கரியில் இந்த சாண்ட்விச்சை வாங்கி சாப்பிடுகிறோம். இப்படி இன்றைய நம் வாழ்க்கை முறையிலேயே ஒன்றி இருக்கும் இந்த உணவிற்கு சாண்ட்விச் என்ற பெயர் ஏன் வந்தது.
Bread. With salad அல்லது bread with chicken, meat என்றுதானே சொல்லவேண்டும்?? இந்த பெயருக்கும் இந்த உணவிற்கும் என்ன சம்பந்தம்?? இதற்கான விடையை பார்க்கலாமா...
சாண்ட்விச் வரலாறு:
இந்த உணவிற்கு பெயரை தந்தது எதுவென்றால் இங்கிலாந்தில் உள்ள ஊர் தாங்க. ஆச்சரியமா இருக்கா..? இங்கிலாந்தில் உள்ள சாண்ட்விச் நகரப் பிரபு ஜான் மாண்டேகு தான், இந்த உணவிற்கு சாண்ட்விச் என்ற பெயர் வரக் காரணமாக இருந்தார்.
சூதாட்டத்தின்போது உருவான ஒரு உணவு தான் சாண்ட்விச் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த மாண்டேகு சூதாட்டத்தின்போது விளையாட்டை விட்டு செல்ல மனமில்லாமல் இடத்தை விட்டு எழுந்து செல்லாமல் உட்கார்ந்த இடத்திலியே மிக ஈஸியாக சாப்பிடும் அளவிற்கு உருவாக்கப்பட்ட உணவுதான் தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ள இந்த சாண்ட்விச்.
இந்த சாண்ட்விச் இப்போது உலகளவில் பிரபலமாக இருக்கும் ஒரு உணவாகும். பல்வேறு நாடுகளில் விதவிதமான சாண்ட்விச் வகைகள் இருக்கின்றன. சாண்ட்விச்சின் சுவையை போலவே, இது உருவான கதையும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.
18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜான் மாண்டேகு என்பவர் அரசு அதிகாரியாக இருந்தார். இவரின் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டம் சாண்ட்விச் ஏர்ல் (Earl of Sandwich). இவர் 4வது சாண்ட்விச் ஏர்ல் ஆவார். இவரை, ஜான் மாண்டேகு சாண்ட்விச் ஏர்ல் என்று மக்கள் அழைத்தார்கள்.
இவருக்கு சூதாட்டம் ஆடுவதில் அதிக ஈடுபாடு இருந்தது. சூதாட்டத்தில் ஆர்வமுடைய ஜான் மாண்டேகு மேஜையில் உட்கார்ந்து சீட்டு விளையாடுவதிலியே தீவிரமாக இருப்பார். பசிக்கும்போது சாப்பிடக்கூட வெளியே செல்ல மாட்டார். சீட்டு விளையாடும் டேபிளிலேயே பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் நினைத்தார்.
ஆனால், அப்படிச் சாப்பிடும்போதுகூட வழக்கமாக வெளிநாடுகளில் பயன் படுத்தப்படும் முள்கரண்டி, கத்தியைப் பயன்படுத்தாமல் சாப்பிடக் கூடிய உணவாக இருந்தால்தானே, சீட்டு விளையாட வசதியாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார். அப்போது அவர் சாப்பிட ஆரம்பித்தது தான் இந்த சாண்ட்விச்.
இப்படி இந்த உணவை சாப்பிடும்போது சீட்டு கட்டுகளின் மேல் உணவு ஒட்டாமல் இருக்கும், அதே நேரம் வயிறும் நிறையும் என அவர் இது போன்று உணடார் எனவும் கூறப்படுகிறது.
வறுக்கப்பட்ட மாட்டிறைச்சியை இரண்டு ரொட்டித் துண்டுகளிடையே வைத்து தருமாறு அவர் பணியாளர்களிடம் கூறியிருக்கிறார். அவர் உட்கார்ந்த இடத்திலேயே அதை சாப்பிட்டு கொண்டே விளையாடினார். நாளடைவில் சேர்ந்து விளையாடுபவர் களும் அவர் ஆர்டர் செய்த அதே உணவை ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் சாண்ட்விச் சாப்பிட்டாரே அதே உணவு வேண்டும் என்று கூறினார்கள். அதன் காரணமாக நாளடைவில் அவரின் பெயருக்கு பின் இருக்கும் சாண்ட்விச் என்கிற பெயரே அந்த உணவிற்கு வந்து விட்டது.
அவர் சாப்பிடுவதற்கு முன் சாண்ட்விச் என்கிற இந்த உணவு இல்லவே இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருந்தது. ஆனால் அப்போது ‘ரொட்டியும் இறைச்சியும்', ‘ரொட்டியும் சாலடும்' என்றுதான் அழைக்கப்பட்டது.
இந்த சாண்ட்விச் பிரபலம் ஆனதற்கு முக்கிய காரணமே, அவருடன் சீட்டு விளையாடிய மற்றவர்களும், “சாண்ட்விச் பிரபு ஆர்டர் செய்ததையே எனக்கும் கொடுங்கள்” என்று கேட்டதுதான். ஜான் மாண்டேகுவுக்குப் பிறகு சாண்ட்விச் என்ற பெயர் அந்த உணவுக்குக் கிடைத்ததோடு மட்டுமில்லாமல் பிரபலமும் அடைந்தது.
19 ஆம் நூற்றாண்டில் உணவகங்களில் இந்த உணவிற்கு பெரும் வரவேற்பு இருந்துள்ளது. காலப்போக்கில் மக்கள் இந்த சாண்ட்விச் உணவை பல்வேறு வகைகள் மற்றும் சுவைகளோடும் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
நவம்பர் 3 ஆம் தேதி உலக சாண்ட்விச் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜான் மான்டேகுவின் பிறந்தநாளைக் கௌரவிக்கும் வகையில், நவம்பர் 3 ஆம் தேதி உலக சாண்ட்விச் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு இந்த உணவை கண்டு பிடித்த பெருமை ஜான் மான்டேகுவிற்கு தான் போய்ச் சேரும். அவர் மறைந்தாலும் அவருடைய பெயரை கொண்ட இந்த சாண்ட்விச் என்றுமே மறையாது.