

இன்றைக்கு பார்த்தீர்களேயானால், நாட்டில் அதிக எடை மற்றும் உடல் பருமன் காரணமாக சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற வியாதிகள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன. இந்த நோய்களால் ஏற்படும் அபாயமானது மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது.
வயது வந்தோரில் கிட்டத்தட்ட 40% பேர் அதிக எடையுடன் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உடல் செயல்பாட்டின் மூலமாக பல நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்றிருந்த போதிலும், அதிகபட்ச இளைஞர்கள் எந்தவொரு உடல் செயல்பாட்டிலும் ஈடுபடுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ஜிம், அரோபிக் பயிற்சி போன்றவற்றையே தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி தேர்ந்தெடுத்த போதிலும் தினமும் அதை கடைபிடிக்கிறார்களா? சரியான நேரத்திற்கு தினமும் செல்கிறார்களா என்று கேட்டால் இல்லை? முதலில் ஒரு வாரத்திற்கு ஒழுங்காக செல்லும் இவர்கள் நாட்கள் செல்ல செல்ல மெது மெதுவாக செல்வதையே நிறுத்தி விடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் இவர்களுக்கு செல்வதற்கான தடை ஏற்படுகிறது. இதனால் இவர்களுடைய உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டு அபாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
இளைஞர்களே, நீங்கள் தினமும் ஜிம்மிற்கோ அல்லது வேறு ஒரு பயிற்சிக் கூடத்திற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை. மாறாக அன்றாடம் வீட்டிலேயே ஒரு சில சின்ன சின்ன செயல்பாடுகளை செய்தாலே போதுமானது. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
தினமும் ஒரு முறையாவது மாடிப்படி ஏறி இறங்க லிஃப்டை உபயோகிக்காமல் தானாகவே ஏறி இறங்கவேண்டும்.
தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ குறைந்தபட்ச நடைபயிற்சி செய்யவேண்டும்.
அருகிலுள்ள கடைகளுக்கு வண்டியில் செல்லாமல் நடந்து செல்லவேண்டும்.
தினமும் ஒரு முறையாவது எப்போது சமயம் கிடைக்குமோ அப்போது வீட்டில் கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும்.
இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு டிவி பார்க்கும் வழக்கமிருந்தால் கூடியவரை தரையில் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
உங்களுடைய அறை, அலமாரி, துணிமணி ஆகியவற்றை நீங்களே சொந்தமாக முடிந்த போதேல்லாம் சுத்தம் செய்ய பழகி கொள்ள வேண்டும்.
வீட்டில் மனைவிக்கோ அல்லது தாய்க்கோ சமையலறையில் காய்கறிகள் வெட்டுவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளில் முடிந்தபோது உதவி புரியவேண்டும். வாரத்திற்கு ஒரு நாளாவது சைக்கிளில் செல்லவேண்டும்.
இப்படி சின்ன சின்ன செயல்பாட்டுகளை செய்தாலே போதும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதுபோல் இந்த சின்ன சின்ன செயல்பாட்டை செய்ய செய்ய உங்களுக்கு ஏற்படும் பலனும் அதிகமாகும். இதை விட்டுவிட்டு தேவையில்லாமல் மாதந்தோறும் ஆயிரகணக்கில் சப்கிரிக்ஷன் செய்து பின்னர் போக முடியாமல் பணதாதை விரயம் செய்யாதீர்கள். எல்லாவற்றிற்கும் தீர்வு உங்களிடமே இருக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்களின் செயல்களில்தான் இருக்கிறது.