ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டில் உள்ள ஒரு சரணாலயத்தில் விலங்குகள் உருவாக்கிய விநோதமான சிம்பன்சி ஃபேஷன் உலக அறிவியலாளர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எந்த நேரடிப் பயனும் இல்லாமல், மற்றவர்களைப் பார்த்து அப்படியே பின்பற்றுவதே டிரெண்ட் எனப்படும். செல்ல நாய்க்கு ஸ்கார்ஃப் அணிவிப்பது அல்லது சமூக வலைதளப் பிரபலங்களைப் பார்த்து மனிதர்கள் உடை அணிவது இதற்கு உதாரணம்.
அதேபோல, காதில் புல்லைச் செருகிக்கொள்ளும் வித்தியாசமான பழக்கத்தை நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 2 தனித்தனி சிம்பன்சி குழுக்களில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
ஜூலி தொடங்கி வைத்த காதுப் புல் பழக்கம்!
இந்த விசித்திரமான நிகழ்வு 2010-களில் ஜாம்பியாவின் சிம்ஃபன்ஷி (Chimfunshi) வனவிலங்கு சரணாலயத்தில் தொடங்கியது. அங்கு வசித்த ஜூலி என்ற பெண் சிம்பன்சி, திடீரென ஒரு நாள் தன் காதுக்குள் மெல்லிய புல்லைச் செருகி வைத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதில் அரிப்பைப் போக்குவது போன்ற எந்த நடைமுறைப் பயனும் இல்லை.
ஆனாலும், அந்தக் குழுவில் இருந்த மற்ற சிம்பன்சிகளும் ஜூலியைப் பார்த்து அதேபோலக் காதில் புல்லைச் செருகத் தொடங்கின. ஆச்சரியம் என்னவென்றால், ஜூலி இறந்த பிறகும் அந்தப் பழக்கம் குழுவுக்குள் தொடர்ந்து நீடித்தது. ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுப் பின்பற்றும் சமூகப் பாரம்பரியமாக இது மாறியது.
10 ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு குழுவில்!
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சரணாலயத்தில் வசிக்கும் முற்றிலும் வேறொரு சிம்பன்சி குழுவிலும் இதே பழக்கம் உருவானது. இந்த 2-ஆவது குழுவிற்கு ஜூலியின் குழுவுடன் எந்த நேரடித் தொடர்பும் இருந்ததில்லை. இன்னும் ஒரு படி மேலே போய், ஜூமா என்ற ஆண் சிம்பன்சியின் தாக்கத்தால் இந்தப் பழக்கம் விரிவடைந்தது. குழுவில் இருந்த 8 சிம்பன்சிகளில் 5 சிம்பன்சிகள் காதில் புல்லைச் செருகின. 6 சிம்பன்சிகள் தங்கள் பின்புறத்தில் புல்லைத் தொங்கவிட்டுக்கொள்ளத் தொடங்கின.
மனிதர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டனவா?
2 குழுக்களும் நேரில் சந்திக்காமல் ஒரே பழக்கம் எப்படி உருவானது என்று ஆராய்ந்தபோது சுவாரசியமான தகவல் கிடைத்தது. 2 குழுக்களையும் பராமரிக்கும் மனித ஊழியர்கள் ஒரே நபர்கள். அந்த ஊழியர்கள் சில சமயம் புல் அல்லது தீக்குச்சியால் தங்கள் காதைச் சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சிம்பன்சிகள் இதைப் பார்த்துப் பின்பற்றியிருக்கலாம் என்றாலும், அது இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
சிம்பன்சிகள் ஏன் இந்தக் குறிப்பிட்ட பழக்கத்தைத் தேர்ந்தெடுத்தன என்பதை விட, குழுவுக்குள் ஒன்றை ஒன்று பார்த்துக் கற்றுக்கொண்டதே மிக முக்கியம் என உட்ரெக்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் எட்வின் வான் லீவன் கூறுகிறார். இதேபோல, ஓர்கா (Orca) திமிங்கலங்கள் இறந்த சால்மன் மீனைத் தலையில் சுமந்து திரியும் பழக்கமும் முன்பு பதிவாகியுள்ளது.
விலங்குகளின் சமூகப் பிணைப்பு!
காட்டில் வாழும் சிம்பன்சிகள் உணவு தேடுவதிலும், சுற்றுப்புறத்தைக் கவனிப்பதிலும், எதிரிகளிடம் இருந்து தப்புவதிலும் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடும். இருப்பினும், உணவு சேகரித்தல் மற்றும் உயிர்வாழ்தல் போன்ற பயனுள்ள செயல்களைக் காட்டுச் சிம்பன்சிகளும் ஒன்றை ஒன்று பார்த்துக் கற்றுக்கொள்கின்றன. சரணாலயங்களில் போதிய ஓய்வு நேரம் கிடைப்பதால் இத்தகைய புதுமைகள் எளிதில் வெளிப்படுகின்றன.
ஒருவரைப் பார்த்து மற்றவர் பின்பற்றுவது, குழுவுக்குள் கவனத்தையும் விருப்பத்தையும் காட்டிச் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் வழியாக இருக்கலாம். எந்தப் பயனும் இல்லாத செயல்களைக் கூடப் பின்பற்றி அடுத்தவருக்குக் கடத்தும் திறன் மனிதப் பண்பாட்டைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்துவதாக இதுவரை கருதப்பட்டது.
ஆனால், சிம்பன்சிகளும் அர்த்தமற்ற செயல்களை பின்பற்றுவது விலங்குகளின் பண்பாட்டுப் பரிணாமம் குறித்த ஆய்விற்குப் புதிய கோணத்தைத் தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமூக அடையாளம் மற்றும் குழுவாக இணைந்து வாழும் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. விலங்குகளின் உலகிலும் தனித்துவமான பண்பாட்டுப் பரிணாமம் செயல்படுகிறது என்பதை இந்த சிம்பன்சி ஃபேஷன் அழகாக நினைவூட்டுகிறது.