

குளிர்காலத்தில் வீட்டு மாடித்தோட்டத்தில் குரோ பேக் மூலம் 60 நாட்களில் இனிப்பான பீட்ரூட் அறுவடை செய்வது எப்படி? விதை நேர்த்தி முதல் உரமிடுதல் வரை முழு வழிகாட்டி.
விவசாயத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பயிருக்கும் ஏற்றவாறு பயிரிடும் காலம் உண்டு. சில பயிர்கள் கோடையில் நல்ல மகசூலைத் தரும். வேறு சில பயிர்கள் குளிர்காலத்தில் நல்ல மகசூலைத் தரும். அவ்வகையில் குளிர்காலத்திற்கு ஏற்ற பயிராக பீட்ரூட் பயிர் இருக்கிறது.
ஆண்டு முழுவதும் பீட்ரூட்டை பயிரிட்டாலும், குளிர்காலத்தில் தான் அதிக மகசூல் கிடைக்கும். விவசாயிகள் மட்டுமின்றி வீட்டுத் தோட்டத்தில் ஆர்வமுள்ளவர்களும் பீட்ரூட்டை குளிர்காலத்தில் மிக எளிதாகப் பயிரிடலாம். குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பீட்ருட் பயிருக்கு ஏற்ற காலம் என்பதால் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது மாடியில் க்ரோ பேக்குகளிலோ வளர்க்கலாம்.
மிகவும் குளிர்ச்சியான சூழல் பீட்ரூட்டை இனிப்பாகவும், அடர் சிவப்பு நிறத்துடனும் மேம்படுத்த உதவும்.
பீட்ரூட் விதையை வளர்க்கும் முறை:
ஊற வைக்கும் நேரம்: ஒரு பீட்ரூட் விதை உருண்டைக்குள் 2 முதல் 4 விதைகள் வரை இருக்கும். இதன் வெளிப்புற ஓடு கடினமான இருக்கும் என்பதால், விதைப்பதற்கு முன்பு சாதாரண தண்ணீரில் விதைகளை சுமார் 8 முதல் 12 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
முளைப்புத் திறன்: பீட்ரூட் விதைகளை பஞ்சகவ்யா அல்லது மீன் அமிலத்தில் ஊற வைத்தால், முளைப்புத் திறன் 90% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விதைப்பு: ஊற வைத்த விதைகளை உடனே நடவு செய்யாமல், 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பிறகு அரை அங்குல ஆழத்தில் 3 முதல் 4 அங்குல இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும்.
தொட்டியின் அளவு:
பீட்ரூட் கிழங்கு மண்ணுக்குள் நன்றாக இறங்க குறைந்தது 10 - 12 அங்குல ஆழமும், அகலமும் கொண்ட தொட்டி தேவை. இல்லையெனில் 12x12 குரோ பேக்கைப் பயன்படுத்தலாம்.
மண் கலவை:
40% செம்மண், 30% தென்னை நார்க்கழிவு அல்லது கோகோபீட் மற்றும் 30% மண்புழு உரம் அல்லது நன்றாக மட்கிய தொழுவுரம் கொண்ட மண் கலவையை தயார் செய்ய வேண்டும். மண் கலவை பொலபொலப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
60 நாள் வளர்ப்பு அட்டவணை:
நாள் 1 – 7:
தொடக்க காலம் முளைப்புப் பருவம் என்பதால், மண்ணில் ஈரப்பதம் குறையாமல் அவ்வப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். 5 முதல் 7 நாட்களில் விதைகள் துளிர் விடத் தொடங்கும்.
நாள் 15 – 20:
ஒரு விதையில் இருந்து 2 அல்லது 3 செடிகள் முளைத்திருக்கும். இதில் ஆரோக்கியமாக வளரும் ஒரு செடியைத் தவிர, மற்ற செடிகளை கத்தரிக்கோலால் வெட்டி விடவும். அப்போது தான் பீட்ரூட் பெரிதாகும்.
நாள் 25 – 35:
மண்புழு உரம் அல்லது கடலைப் புண்ணாக்கு கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். தினசரி 5 முதல் 6 மணி நேரம் செடியின் மீது சூரிய ஒளி படும்படி தொட்டியை வைக்க வேண்டும்.
நாள் 40 – 50:
இந்த காலகட்டத்தில் தான் மண்ணின் மேற்பரப்பில் பீட்ரூட் கிழங்கின் மேற்பகுதி லேசாகத் தெரியத் தொடங்கும். இந்த நேரத்தில் தவறாமல் வேர்ப் பகுதியைச் சுற்றிலும், சிறிதளவு மண்ணை அணைத்து விட வேண்டும்.
நாள் 55 – 65:
பீட்ரூட் கிழங்கு 2 முதல் 3 அங்குல விட்டத்திற்குப் பெரிதான பிறகு, செடியைப் பிடுங்கி அறுவடை செய்யலாம்.
பீட்ரூட் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை:
தழைச்சத்து அதிகமுள்ள உரங்களை அளவாக தெளிக்க வேண்டும். அதிகமாக தெளித்தால் இலைகள் மட்டுமே செழித்து வளரும்; ஆனால் கிழங்கு சிறியதாகி விடும்.
தொட்டியில் உள்ள மண் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஆனால் நீர் தேங்கிடக் கூடாது. நீர் தேங்கினால் மண்ணில் உள்ள கிழங்கு அழுகி விடும்.
பீட்ரூட் அறுவடையின் போது இலைகளைத் தூக்கி எறியாமல், சமைத்து உண்ணலாம். ஏனெனில் இது உடலுக்கு நன்மை சேர்க்கும் சத்து நிறைந்த கீரை