

1. காலிஃப்ளவர் பக்கோடா
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - ஒன்று
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயத்தாள் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சுடுத் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் போட்டு வைத்திருந்து எடுக்கவும்.
காலிஃப்ளவருடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி பிசறி வைக்கவும்.
காலிஃப்ளவர் கலவையை 15 நிமிடம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி ஊற வைத்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
க்ரிஸ்பியான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி. வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி அதன் மேலே தூவ, சுவை மேலும் கூடும்.
2. காலிஃப்ளவர் மசாலா பூரி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
மசாலா பூரணத்துக்கு
தேவையான பொருட்கள் :
துருவிய காலிஃப்ளவர் – 2 கப்
தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி – தலா 2 டேபிள் ஸ்பூன்
துருவிய வெங்காயம் – கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சம்பழம் – ஒன்று
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால் மசாலா பூரணம் தயார்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும். இப்போது சுவையான காலிஃப்ளவர் மசாலா பூரி தயார்.
3. காலிஃப்ளவர் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர், வெங்காயம் – தலா 1
தக்காளி – 2
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு துண்டு
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து, உப்பு போட்ட தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு வைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியற்றை ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, உப்பு, காலி ஃப்ளவரை சேர்த்து, கால் டம்ளர் தண்ணீர் விட்டுக்கிளறி, மூடிவைக்கவும். வெந்ததும் கறிவேப்பிலை சேர்த்து, சுருள கிளறி இறக்கவும். சுவையான காலிஃப்ளவர் பொடிமாஸ் ரெடி.
4. காலிஃப்ளவர் சாலட்
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 2 கப் (சிறிது வேக வைத்தது)
கேரட் – 1 (துருவியது)
வெள்ளரிக்காய் – 1 (நறுக்கியது)
ஸ்வீட் கார்ன்– ½ கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பொடியாக நறுக்கிய கேரட் , வெள்ளரிப் பிஞ்சு, காலிஃப்ளவர் மற்றும் உதிர்த்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே பரிமாறவும். அல்டிமேட் சுவையில் காலிஃப்ளவர் சாலட் தயார்.
ஒரே காய்கறியில் விதவிதமான சுவைகளில் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலிஃப்ளவர் ரெசிபிகளை உங்கள் சமையலறையில் எளிதாக உருவாக்குங்கள்.