தேவையான பொருட்கள்.
தின் அவல் - ஒரு கப்
கேரட் நறுக்கியது - கால் கப்
பீன்ஸ் நறுக்கியது - கால் கப்
பச்சை பட்டாணி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - இரண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
தண்ணீர் - அரைக் கப்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லி இலை, கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தயாராக வைத்துள்ள நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
அவலை தண்ணீரில் அலசி எடுக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் அவலை சேர்த்து நன்கு கலந்து உப்பு, தேங்காய் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும். பின்னர் ஒரு தட்டில் ஆறவிடவும். ஆறிய பின் எடுத்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மிகவும் சுவையான சத்தான மிருதுவான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை தயார். மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
அவல் - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை.
அவலை ஒரு மிக்ஸி ஜாரில் கரகரப்பாக புடிக்கவும் ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு அரிசி மாவு, தயிர், உப்பு, சிறிது புளித்த தோசை மாவு, தேவையான தண்ணீர் விட்டு பதமாக இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
இட்லி தட்டில் ஊற்றி இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சத்தான வெள்ளை அவல் இட்லி ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
வெள்ளை அவல் - 1 1/2 கப்
வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
முந்திரி - பத்து
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு
செய்முறை
அவலை தண்ணீரில் கழுவி சிறிது நீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி சேர்த்து வறுக்கவும் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து அதே வாணலியில் வெந்த பயத்தம் பருப்பு, தேவையான உப்பு சேர்த்து கிளறிய பிறகு ஊற வைத்து அவைலை சேர்த்து நன்றாக கிளறி கலந்து விடவும். அவல் நன்றாக ஊறி பஞ்சு போல் இருக்கும். கெட்டியாக இருந்தால் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
குழைவாக ஆனவுடன் வறுத்து வைத்திருக்கும் தாளிப்பை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான அவல் பொங்கல் பத்து நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். காலை டிபனாக உடனே செய்து சாப்பிட மிக ருசியாக இருக்கும். சாம்பார், சட்னி உடன் சேர்த்து ருசித்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்.
இட்லி அரிசி - ஒரு கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
அவல் - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை.
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் கழுவி கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். பாதி அரைத்ததும் அவலை கழுவி தயிர் சேர்த்து நன்கு வெண்ணைப் போல் அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்து 5 மணி நேரம் கழித்து பொங்கியவுடன் தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக எண்ணெய் விட்டு இருபுறம் வெந்து எடுக்கவும். சுவையான சத்தான அவல் தோசை ரெடி. சாம்பார் சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
அவலில் சத்தான சுலபமாக காலை, மாலை டிபனாக செய்து சாப்பிட ருசியோ இருக்கும். குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்தலாம். சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி செய்து கொடுங்கள்.