

இந்த கட்டுரையில் ஜவ்வரிசி கொண்டு செய்யக்கூடிய புலாவ், மிக்சர், அல்வா, முறுக்கு, பொங்கல் ஆகிய ஐந்து வகை உணவுகள் படிப்படியாக கூறப்பட்டுள்ளன. ஊறவைத்த ஜவ்வரிசியை தக்காளி சாறு, காய்கறி, பால், வெல்லம், நெய், மசாலா, அரிசி மாவு போன்றவற்றுடன் சேர்த்து, காலை, மாலை, பண்டிகை நேரங்களுக்கு ஏற்ற வகையில் சுவைமிகு ஜவ்வரிசி ரெசிபிகள் ஆக மாற்றும் முறைகள் விளக்கப்படுகின்றன.
1. ஜவ்வரிசி புலாவ்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - ஒரு கப்,
தக்காளி - 1,
தேங்காய் துருவல் - அரை கப்,
சீரகம் - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1, பீன்ஸ், கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்றாக, கெட்டியாக அரைக்கவும். அதை வடிகட்டி, அந்த சாறில் ஜவ்வரிசியை 20 நிமிடம் ஊற விடவும். (சாறு கெட்டியாக, ஜவ்வரிசி மூழ்கும் அளவு இருந்தால் போதும்). ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி, தேவையான உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதங்கியதும், ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி, நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்கவும். இதை சூடாக சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும்.
2. ஜவ்வரிசி மிக்சர்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 1 கப்
வேர்க்கடலை – ½ கப்
பச்சை பட்டாணி (வறுத்தது) – ½ கப்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
ஜவ்வரிசியை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, வடித்து, சுத்தமான துணியில் பரப்பி 2 மணி நேரம் காயவைத்துக் கொள்ளவும். பின் சூடான எண்ணெயில் சிறு சிறு அளவாக போட்டு பொரித்தால் புடைப்பாக வரும். தனியாக வேர்க்கடலை, பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் தூவி, நன்றாகக் கலந்து எடுக்கவும். அசத்தல் சுவையில், மாலை நேரத்திற்கு ஏற்ற ஜவ்வரிசி மிக்சர் ரெடி.
3. ஜவ்வரிசி அல்வா
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) – 2 கப்
ஜவ்வரிசி (நன்கு ஊறவைத்தது) – ½ கப்
சர்க்கரை – 1 கப்
பசும் பால் – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
செய்முறை:
ஜவ்வரிசியை 30 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி கொள்ளவும். பூசணிக்காயை பால் சேர்த்து வேகவிடவும். பூசணிக்காய் வெந்ததும் ஜவ்வரிசி சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்துக் தொடர்ந்து கிளறவும். பின்னர் இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை கிளறவும். கம கம ஜவ்வரிசி அல்வா ரெடி.
4. ஜவ்வரிசி முறுக்கு
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப்
ஜவ்வரிசி – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஜீரகம் அல்லது ஓமம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மைய அரைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, மைய அரைத்த ஜவ்வரிசி, உப்பு, வெண்ணெய், ஜீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு மென்மையான பிசைந்த மாவாக தயார் செய்யவும்.
முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். எண்ணெய் ஒழிந்ததும் எடுத்து காகிதத்தில் வைக்கவும். மொறு மொறு ஜவ்வரிசி முறுக்கு தயார்.
5. ஜவ்வரிசி பொங்கல்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 300 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பால் - 200 மில்லி
நெய் - 50 கிராம்
முந்திரி -10
காய்ந்த திராட்சை - 5
ஏலக்காய் - 5
செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ஜவ்வரிசையைப் போடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஏலக்காய் வெல்லம் நன்கு தட்டி அதில் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி கெட்டிப் பதத்திற்கு வந்ததும், பால் மற்றும் நெய் சேர்க்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வதக்கி ஜவ்வரிசியில் போடவும். மணக்கும் ஜவ்வரிசி பொங்கல் தயார்.
பாரம்பரிய தானியங்களை நவீன சுவைகளில் சமைப்பதன் மூலம், உங்கள் சமையலறையின் திறனை மேம்படுத்தி குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் உறுதி செய்ய முடியும்.