

காலையில் கண் விழித்தவுடன் சமையலறைக்குள் சென்று அவசரமாக சமைப்பது பலருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புபவர்கள் என அனைவருக்குமே காலை நேரம் ஒரு போராட்டமாகத் தான் விடிகிறது. நேரமில்லை என்ற ஒரே காரணத்திற்காக பலரும் காலை உணவை முற்றிலுமாகக் தவிர்த்து விடுகிறார்கள்.
இது உடலின் எனர்ஜியை மொத்தமாக குறைத்து நாள் முழுவதையும் சோர்வாக மாற்றிவிடும். அடுப்பை பற்ற வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல், மிகவும் ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு உடனடி எனர்ஜியைத் தரும் 6 அட்டகாசமான சைவ காலை உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஓவர்நைட் ஓட்ஸ்!
காலையில் சமைக்க நேரமில்லாதவர்களுக்கு இது ஒரு சூப்பரான சாய்ஸ். இரவே ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிது ஓட்ஸ், காய்ச்சிய பால் அல்லது பாதாம் பால் சேர்த்து அதனுடன் தேன் கலந்து ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். காலையில் அதை எடுத்து மேலே கொஞ்சம் நட்ஸ் மற்றும் பழங்களை நறுக்கிப் போட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இது நீண்ட நேரத்திற்கு பசி தாங்கும் சக்தியை கொடுக்கும்.
2. பீனட் பட்டர் மற்றும் வாழைப்பழம் சாண்ட்விச்!
புரதச்சத்து நிறைந்த காலை உணவு வேண்டும் என்பவர்கள் இந்த பிரெட் சாண்ட்விச்சை தேர்வு செய்யலாம். இரண்டு கோதுமை பிரெட் துண்டுகளில் பீனட் பட்டரை தாராளமாகத் தடவி, அதன் நடுவில் வாழைப்பழங்களை வட்டமாக நறுக்கி வைத்து அப்படியே சாப்பிடலாம். இது உடலுக்கு உடனடி எனர்ஜியைக் கொடுப்பதோடு மூளைக்கும் நல்ல சுறுசுறுப்பைத் தரும்.
3. தயிர் அவல்!
நம்ம ஊர் பாரம்பரிய உணவான அவலை சமைக்கத் தேவையே இல்லை. ஒரு கைப்பிடி அவலை தண்ணீரில் லேசாக கழுவி விட்டு, அதில் கெட்டியான தயிர் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் மாதுளை முத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வயிற்றுக்கு மிகவும் இதமாக இருக்கும்.
4. பழங்கள் மற்றும் நட்ஸ் பௌல்!
மிகவும் எளிமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு இது. உங்கள் வீட்டில் இருக்கும் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்களை நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் உலர் திராட்சைகளை கலந்து சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் ஒரே நேரத்தில கொடுத்துவிடும்.
5. சியா விதை புட்டிங்!
சியா விதைகள் இப்போது பலருடைய ஃபேவரைட் ஆக மாறிவிட்டது. முதல் நாள் இரவே சியா விதைகளை பாலில் ஊற வைத்து பிரிட்ஜில் வையுங்கள். அது காலையில் ஜெல் போல கெட்டியாக மாறியிருக்கும். அதனுடன் சிறிது வெனிலா எக்ஸ்ட்ராக்ட் மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது ஒரு பிரீமியம் டெசர்ட் சாப்பிடுவது போன்ற உணர்வைக் கொடுக்கும்.
6. எனர்ஜி ஸ்மூத்தி!
சாப்பிடக்கூட நேரமில்லை செம அவசரம் என்பவர்களுக்கு இந்த ஸ்மூத்தி தான் பெஸ்ட். மிக்ஸி ஜாரில் ஒரு வாழைப்பழம், சிறிது பால், இரண்டு பேரீச்சம்பழம் மற்றும் சிறிது ஓட்ஸ் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிளாஸில் ஊற்றி குடித்துவிட்டு கிளம்பலாம். இது ஒரு முழுமையான உணவுக்கு இணையான எனர்ஜியைத் தரக்கூடியது.
இந்த ஆறு உணவுகளும் செய்வதற்கு மிக மிக எளிமையானவை மற்றும் ஆரோக்கியமானவை. இதில் எந்தவிதமான சமையல் வேலைகளும் இல்லை என்பதால் உங்கள் நேரமும் பெருமளவு மிச்சமாகும். நாளை காலையில் இருந்தே இதில் உள்ள ஏதாவது ஒரு உணவை முயற்சி செய்து உங்களின் நாளை மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தொடங்குங்கள்.