திருமண விருந்துகளிலும், வீட்டு விசேஷங்களில் பலகாரத் தட்டுகளிலும் எப்போதும் தனி இடம் பிடிக்கும் இனிப்பு என்றால் அது பாதுஷாதான். இனிப்புக் கடைகளில் வாங்கும்போது மேலே லேசான மொறுமொறுப்பும், உள்ளே அடுக்கடுக்காக ஜூசியான மென்மையும் இருக்கும். அதைப் பாதியாக உடைக்கும்போதே நெய் வாசனை கமழும்.
ஆனால் வீட்டில் செய்யும்போது பலருக்கும் அது கல்லு போலக் கெட்டியாகிவிடும். சரியான பாதுஷா செய்முறை தெரிந்திருந்தால், சமையல்காரர்கள் செய்யும் அதே பதத்தை வீட்டிலேயே மிக எளிதாகக் கொண்டுவர முடியும்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் - 1/2 கப்
புளிக்காத கெட்டித் தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 1.5 கப்
தண்ணீர் - 3/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 சொட்டுகள்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
நறுக்கிய பிஸ்தா அல்லது பாதாம் - சிறிதளவு
செய்முறை!
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு சலித்துக்கொள்ளவும். இதனுடன் உருக்கிய நெய் மற்றும் தயிர் சேர்த்து விரல்களால் மெதுவாகக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்துப் பிடித்தால் கொழுக்கட்டை மாவு போல பிடிபடும் பதம் வர வேண்டும்.
அடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மாவை ஒன்று சேர்க்க வேண்டும். சப்பாத்தி மாவு போல அழுத்திப் பிசையக் கூடாது. மென்மையாக அழுத்தி ஒன்று சேர்த்தால்தான் உள்ளே அடுக்குகள் அழகாக உருவாகும். இந்த மாவை ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
மாவு ஊறும் நேரத்தில் சர்க்கரைப் பாகு தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் 1.5 கப் சர்க்கரை மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து 1 கம்பிப் பதத்திற்குச் சற்று முந்தைய பிசுபிசுப்புப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பாகு ஆறியதும் கெட்டியாகாமல் இருக்க 4 சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும்.
ஊறிய மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து, உள்ளங்கையில் வைத்து மெதுவாக உருட்டி லேசாகத் தட்டையாக்கவும். கட்டைவிரலால் நடுவில் சிறிய பள்ளம் போட வேண்டும். ஓரங்களில் லேசான வெடிப்புகள் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அவையே பொரிக்கும்போது உள்ளே அடுக்குகளை உருவாக்கும்.
அடுத்ததாக வாணலியில் எண்ணெய் ஊற்றி மிகவும் மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் அதிகம் காய்ந்திருந்தால் மேல் பகுதி மட்டும் சிவந்து உள்ளே வேகாமல் போய்விடும். லேசான சூட்டில் 5 அல்லது 6 உருண்டைகளைப் போடவும். அவை தானாக மிதந்து மேலே வரும் வரை கரண்டி போட வேண்டாம்.
குறைந்த தீயிலேயே 12 முதல் 15 நிமிடங்கள் இருபுறமும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதுவே மேலே மொறுமொறுப்பும் உள்ளே முழுமையான வேக்காடும் தரும் ரகசியம்.
இறுதியாக சூடான பாதுஷாக்களை இளம் சூடான சர்க்கரைப் பாகில் போட்டு, இருபுறமும் தலா 3 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கவும். தட்டில் 30 நிமிடங்கள் ஆறவிட்டு மேலே பிஸ்தா தூவினால் பரிமாற தயாராகிவிடும்.
இந்த பாதுஷா செய்முறை பின்பற்றி அடுத்த விசேஷத்திற்குக் கடைக்குப் போகாமல் வீட்டிலேயே நெய் மணக்கும் இனிப்பைச் செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.