

நிறைய பேருக்கு பீட்ரூட் பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட்டில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் (வைட்டமின் பி9) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது புதிய இரத்த அணுக்களை உருவாகி, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கி, இயற்கையான பளபளப்பைத் தருகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சீரான ஊட்டச்சத்துக்காக பீட்ரூட்டை வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் வைத்து சூப், பொரியல், கூட்டு என ஒரே மாதிரியான ரெசிபிகளை மட்டுமே செய்து இருப்பீங்க. ஆனா பீட்ரூட் வைத்து பிரியாணி செஞ்சிருக்கீங்களா. ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க.
நீங்களே ஷாக் ஆயிடுவீங்க. அந்தளவுக்கு இந்த ரெசிபி டேஸ்ட் சூப்பரா இருக்கும். அசைவம் சாப்பிடாதவங்க இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அப்புறம் அடிக்கடி செஞ்சி சாப்பிடுவீங்க. வாங்க. இன்று சூப்பரான பீட்ரூட் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பீட்ரூட் - 1 பெரியது
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
ப.மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன் + ஒரு பின்ச்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தயிர் - அரை கப்
புதினா - ஒரு கைப்பிடி + ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி + ஒரு கைப்பிடி
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
நெய் - விருப்பத்திற்கு ஏற்ப
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
செய்முறை
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் நீக்கி சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக சிவக்க வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி முக்கால் பாகம் வதங்கியதும் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, ப.மிளகாய், தயிர், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தும் மசிந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் பீட்ரூட்டை சேர்க்கவும்.
அடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் நன்றாக சுண்டி வரும் போது புதினா, கொத்தமல்லி, நெய், கரம் மசாலா தூள் சேர்த்து தட்டுபோட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் தம் போட்டு எடுத்தால் சூப்பரான பீட்ரூட் பிரியாணி ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள காராபூந்தி ரெய்தா சூப்பராக இருக்கும்.