
அதிகாலை ஐந்து மணி மொபைலின் அலாரம் அனுப்பும் ரீங்கார ஒலி, அன்றைய நாளுக்கான ஆரம்ப அலார்ட் நிறைய பெண்களுக்கு. இமைகள் விலகும்போதே மனசு சார்ட் போட ஆரம்பித்துவிடும். காலை டிபன் என்ன பண்ண வேணும், மதியத்துக்கான மெனு என்னன்னு. அப்போ இரவு டின்னர்? அது மதியம் மீதமிருக்கும் டிஷ்ஷைப் பொருத்து மாலைதான் முடிவாகும். இது மாற்றப்படாத தினசரி ரொட்டீன். அன்றைய மற்ற வேலைகள் இந்த ஏரியாவுக்குள் வேண்டாமே.
சரி... இப்போ என்னதான் சொல்ல வர்றேன்னு சலிச்சுக்கத் தோணுதா? அதே.. அதே.. நீங்க. நம்ம ஏரியாவுக்குள்ள வந்துட்டீங்க.
தினசரி காலையில் இட்லி அல்லது தோசை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது நிறைய சமையலறைகளில்.
ஏன்னா, கஷ்டப்படாம, உப்பு, காரம் பார்க்காம ஈஸியாப் பண்ணிடலாம்ன்னு சொல்றீங்க. உங்க கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிலேயே, கொஞ்சம் கிரியேட்டிவிட்டியை சேர்க்கலாமே… முதல் நாள் இரவே பொடியாக நறுக்கிய வெங்காயத்தை, (பெல்லாரியா? சின்ன வெங்காயமா? உங்கள் விருப்பம் மேடம்) வதக்கி, டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து விடுங்க. காலையில் எழுந்தவுடன் மறக்காம வெளியில எடுத்து வச்சுடுங்க.
தோசையோ, இட்லியோ வார்க்கும்போது, மேலே பரவலாகத் தூவுங்கள். தூவானமாய் பொழியும். வேறென்ன உங்களுக்கு பாராட்டுதான். இப்படியே காரட், பீன்ஸ், கோஸ் கீரை, பேபி கார்ன் என ஆறு நாளும் வெரைட்டியில் ஜமாய்ங்க. ஏழாம் நாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள். பிரேக் பாஸ்ட் ஸ்பெஷலாக இருக்கட்டுமே. அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கை கீரை என கீரையிலும் வெரைட்டியை விரவலாம்.
மதியம் குழப்பி கும்மியடிப்பது குழம்புதான். அதுக்கும் இருக்கு ஐடியா. செவ்வாய், வெள்ளி சாம்பார்தான் நிறைய இல்லங்களில். மீதமுள்ள நான்கு நாட்களில் என்ன குழம்பு வைக்கலாம்?. புளிக்குழம்பு, பூண்டுக் குழம்பு, மோர்க்குழம்பு வைக்கலாம். வாரத்தில் ஒரு நாள் உங்கள் கை மணக்கும் பேவரைட் குழம்பு மெனுவில் இருக்கட்டுமே. ஞாயிறுக்கிழமைக்கு இருக்கவே இருக்கு பிரியாணி, ஃப்ரைடு ரைஸ். காய்கறிகள் போட்டு கூட்டாஞ்சாதமும் பொங்கி சூடாக பரிமாறலாமே.
இடையிடையே, இஷ்டம்போல் புளியோதரை, லெமன் ரைஸ், தேங்காய் சாதம், தக்காளி சாதம், மாங்காய் சாதம், உளுந்தம் பருப்பு சாதம் என கலந்த சாதம் பண்ணி கலக்கலாம்.
சந்தோசமா சமைச்சு ஜமாய்ச்சு குடும்பத்தினரின் லைக்ஸை அள்ளுங்க…