

மரவள்ளி கிழங்கு முறுக்கு
தேவை:
அரிசி மாவு – 2 கப்
உதிர்த்த மரவள்ளிக் கிழங்கு – 1 கப்
வெள்ளை எள், கடலை பருப்பு – தலா 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
முதலில் மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, மசித்த கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, வெண்ணெய் மற்றும் பருப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான மாவாக பிசையவும். முறுக்கு அச்சில் விருப்பமான துளை வடிவம் வைக்கவும். சூடான எண்ணெயில் சுழற்றி பொரிக்கவும்.
இரு பக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுத்து வடிகட்ட, மொறு மொறு மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தயார்.
மரவள்ளி கிழங்கு உருண்டை.
தேவை:
மரவள்ளி கிழங்கு - அரை கிலோ
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 2
தேங்காய்த் துருவல் - கால் கப்
செய்முறை:
மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். துருவிய கிழங்கை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
வேகவைத்த கிழங்குடன் தேங்காய் துருவல், துருவிய வெல்லம், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறவும். இந்த கலவையை உருண்டையாக உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்தால், சுவையான, சத்தான மரவள்ளிக் கிழங்கு உருண்டை ரெடி.
மரவள்ளி பால்கறி
தேவை:
மரவள்ளிக்கிழங்கு - 1, தேங்காய்ப்பால் (கெட்டியான, முதல் பால்) - ஒரு கப், இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 4,
பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1,
,இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். முதல் தேங்காய்ப்பாலை தனியாக வைக்கவும். இரண்டாம் பாலில் மரவள்ளிக்கிழங்கை வேகவிடவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய் கீறிப்போட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும், பாலில் வேகவைத்த மரவள்ளியை இதில் போட்டு கிளறவும். கடைசியாக, முதல் தேங்காய்ப்பாலை சேர்த்துக் கலந்து (கொதிக்க விடாமல்), மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான மரவள்ளிக் கிழங்கு பால்கறி தயார். இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு சைட்-டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம்.
மரவள்ளி மசாலா சப்பாத்தி
தேவை:
கோதுமை மாவு - 2 கப்
மரவள்ளிக்கிழங்கு துருவல் - 2 கப்
தக்காளி, வெங்காயம் - தலா 3
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமை மாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு உப்பு, பெருங்காயம், இஞ்சி, மிளகாய்த் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின் எள், மரவள்ளிக்கிழங்கு துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் தனியாக இறக்கி வைத்துக் கொள்ளவும்.
கடைசியாக பிசைந்து வைத்த மாவைச் சப்பாத்தியாகத் தேய்த்து, நடுவில் 2 டீஸ்பூன் மரவள்ளிக் கலவையை வைத்து மூடி, சப்பாத்தியாகத் தேய்க்க வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் வேகவைத்து எடுத்தால், அருமையான மரவள்ளிக்கிழங்கு மசாலா சப்பாத்தி தயார்.