நம் வீட்டுச் சமையலில் பசு நெய் பயன்படுத்துவதா அல்லது எருமை நெய் பயன்படுத்துவதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. எந்தப் பாலில் அதிக நெய் கிடைக்கும், எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். எருமைப் பாலில் கொழுப்புச் சத்து சுமார் 7% முதல் 8% வரை இருப்பதால், அது பசும்பாலை விட அதிக நெய்யைத் தருகிறது. பசும்பாலில் கொழுப்பு சுமார் 4% மட்டுமே உள்ளது.
ஆனால், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இதில் எதுவுமே அனைவருக்கும் பொதுவான சிறந்த தேர்வு என்று சொல்ல முடியாது. உங்கள் உடலின் ஆற்றல் தேவை, செரிமானத் திறன் மற்றும் ஒட்டுமொத்த உணவு முறையைப் பொறுத்தே சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நெய் அளவு மற்றும் தோற்றத்தில் உள்ள வித்தியாசம்!
பசும்பாலை விட எருமைப் பாலில் கொழுப்பு ஏறத்தாழ இருமடங்கு அதிகம். ஒப்பீட்டு ஆய்வுகளின்படி, 100 கிலோ எருமைப் பாலில் இருந்து சுமார் 6 கிலோ நெய் கிடைக்கும். ஆனால், அதே 100 கிலோ பசும்பாலில் இருந்து சுமார் 3.1 கிலோ நெய் மட்டுமே கிடைக்கும்.
இவற்றின் நிறத்திலும் பெரிய வித்தியாசம் உண்டு. பசும்பாலில் உள்ள பீட்டா-கரோட்டின் காரணமாக அதன் நெய் மஞ்சள் அல்லது பொன்னிறமாக இருக்கும். ஆனால், எருமைகள் பீட்டா-கரோட்டினை வைட்டமின் A சத்தாக மாற்றிவிடுவதால், எருமை நெய் வெள்ளை அல்லது வெளிர் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
எருமை நெய் அறை வெப்பநிலையில் மிகவும் அடர்த்தியாகவும், கெட்டியாகவும், கனமான வெண்ணெய் மணத்துடனும் இருக்கும். மாறாக, பசும்பாலில் இருந்து எடுக்கப்படும் நெய் லேசானதாகவும், மென்மையாகவும், எளிதில் உருகக்கூடியதாகவும், மெல்லிய மணத்துடனும் இருக்கும்.
ஆரோக்கிய ஒப்பீடு!
நெய்யாக மாறிய பிறகு இரண்டுமே சுமார் 99% முதல் 99.5% வரை தூய பால்கொழுப்பாகவே இருக்கும். ஒரு ஸ்பூன் அளவில் இரண்டும் ஏறத்தாழ ஒரே அளவு கலோரிகளையே தருகின்றன; இவற்றில் பெரும்பகுதி நிறைவுற்ற கொழுப்பாகும்.
எருமைப் பாலில் கலோரிகள், புரதம் மற்றும் கால்சியம் அதிகம். எனவே, வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கடினமான உடல் உழைப்பு செய்பவர்கள் போன்ற அதிக ஆற்றல் அல்லது எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். அதேநேரம், பசு நெய், பசும்பால் லேசானவை என்பதால், அன்றாட உணவுகளுக்கும் எளிதான செரிமானத்திற்கும் பலர் இதையே விரும்புகின்றனர். இருப்பினும், செரிமானத் திறன் நபருக்கு நபர் மாறுபடும்.
கவனிக்க வேண்டிய அளவு!
பசும்பால் நெய்யில் குறுகிய மற்றும் நடுத்தரச் சங்கிலி கொழுப்பு அமிலங்களும், CLA சத்தும் அதிகம் இருப்பதாகவும், எருமை நெய்யில் நீண்ட சங்கிலி நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் இருப்பதாகவும் பொதுவான கருத்து நிலவுகிறது. எதுவாக இருந்தாலும், நெய்யில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் என்பதால் அளவோடு சாப்பிடுவது அனைவருக்கும் அவசியம்.
குறிப்பாக, அதிக LDL கொலஸ்ட்ரால் அல்லது இதயப் பிரச்சினை உள்ளவர்கள் தகுந்த மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி உணவில் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது.
உங்கள் குடும்பத்தினரின் வயது, உடல் உழைப்பு, ஆரோக்கியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சரியான நெய்யை அளவோடு பயன்படுத்துவதே ஆரோக்கியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.