பிளாஸ்டிக் பாட்டிலின் அடியில் இந்த எண் இருக்கா? ஆபத்தை தவிர்க்க உடனே செக் பண்ணுங்க!

நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் ஒளிந்துள்ள நச்சுக்கள் மற்றும் பாதுகாப்பான எண்கள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்.
பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling Code
பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling CodeImage credit: Gemini
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் பாட்டில் முதல் சமையலறை பாத்திரங்கள் வரை அனைத்தும் பிளாஸ்டிக் மயமாகிவிட்டன. ஆனால், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் அடியில் ஒரு சிறிய முக்கோணக் குறியீடும், அதற்குள் 1 முதல் 7 வரையிலான ஒரு எண்ணும் இருப்பதை எப்போதாவது கவனித்ததுண்டா? அது வெறும் வடிவமைப்பு அல்ல; நம் உடல்நலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய மிக முக்கியமான அறிவியல் குறியீடாகும்.

​இந்த முக்கோணக் குறியீடு 'ரெசின் அடையாளக் குறியீடு' (Resin Identification Code) என்று அழைக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு 'பிளாஸ்டிக் தொழில் சொசைட்டி' (SPI) என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, பிளாஸ்டிக் எந்த வகையான இரசாயனப் பொருட்களால் உருவாக்கப் பட்டது, அதை எவ்வாறு மறுசுழற்சி செய்வது மற்றும் மீண்டும் பயன்படுத்துவது என்பதை உணர்த்தவே உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து பிளாஸ்டிக்குகளும் ஒரே மாதிரியான வேதிப் பொருட்களால் செய்யப்படுவதில்லை. எனவே அவற்றின் பயன்பாடும், பாதுகாப்பும் மாறுபடுகின்றன.

பிளாஸ்டிக் பயன்பாடு:

​இப்போது 1 முதல் 7 வரையிலான எண்களின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளைப் பார்ப்போம்.

எண் 1 (PET / PETE - பாலிஎதிலீன் டெரிப்தலேட்):

நாம் வாங்கும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களில் இந்த எண் இருக்கும். இது இலகுவானது மற்றும் வெளிப்படையானது. ஆனால், இதனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தின் காரணமாக இதில் உள்ள ஆண்டிமனி போன்ற நுண் நச்சுக்கள் நீரில் கலக்கத் தொடங்கும்.

​எண் 2 (HDPE - உயர் அடர்த்தி பாலிஎதிலீன்):

பால் பாக்கெட்டுகள், ஷாம்பு, டிடர்ஜென்ட் பாட்டில்கள் மற்றும் எண்ணெய் பாட்டில்களில் இது இருக்கும். இது மிகவும் உறுதியானது, அடர்த்தியானது மற்றும் வேதிப்பொருட்களுடன் எளிதில் வினைபுரியாதது. எனவே, உணவு மற்றும் குடிநீருக்கு இது பாதுகாப்பான பிளாஸ்டிக் வகையாகக் கருதப்படுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling Code
பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling CodeImage credit: Gemini

எண் 3 (PVC - பாலிவினைல் குளோரைடு):

குழாய்கள், செயற்கைத் தோல்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்களில் இது பயன்படும். இதில் 'ப்தாலேட்ஸ்' (Phthalates) எனப்படும் அபாயகரமான நச்சுப்பொருட்கள் உள்ளன. இது உணவுடன் தொடர்புகொள்ளும்போது புற்றுநோய் மற்றும் ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சமையலறைப் பயன்பாட்டிற்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

எண் 4 (LDPE - குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன்):

நெகிழிப் பைகள் (கேரி பேக்குகள்), கவர்கள் மற்றும் சுருட்டக்கூடிய பிளாஸ்டிக் தாள்களில் இது இருக்கும். இது குறைந்த ஆபத்து கொண்டதாகக் கருதப்பட்டாலும், வெப்பநிலையைத் தாங்கும் சக்தி இதற்கு இல்லை.

​எண் 5 (PP - பாலிப்ரோப்பிலீன்):

உணவுப் பெட்டிகள் (Lunch Boxes), சூடான பானங்கள் ஊற்றும் கோப்பைகள் மற்றும் மருந்து பாட்டில்களில் இது இருக்கும். இது வெப்பத்தை மிகச் சிறப்பாகத் தாங்கும் தன்மை கொண்டது. மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கப்படும் பாத்திரங்களிலும் இந்த எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இது மனித உடல்நலத்திற்கு மிகவும் பாதுகாப்பான பிளாஸ்டிக் ஆகும்.

இதையும் படியுங்கள்:
குழந்தையின் நகத்தில் இந்த அறிகுறிகளா? பெற்றோர் கவனிக்க வேண்டிய 9 விஷயங்கள்!
பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling Code

​எண் 6 (PS - பாலிஸ்டைரீன்):

டிஸ்போசபிள் தட்டுகள், டீ கப்புகள் மற்றும் ஸ்டைரோஃபோம் பேக்கிங் பொருட்களில் இது இருக்கும். இதில் சூடான உணவுகளையோ டீ, காபியையோ ஊற்றும்போது 'ஸ்டைரீன்' என்னும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உணவில் கசிய வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
வாட்டர் பாட்டில்ல ஏன் இத்தனை கோடு இருக்கு தெரியுமா.. ஷாக்கிங் உண்மை இதோ!
பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling Code

எண் 7 (Other - பிற பிளாஸ்டிக்குகள்):

மேற்கண்ட ஆறு வகைகளிலும் சேராத பாலிகார்பனேட் போன்ற பிளாஸ்டிக்குகள் இதில் வரும். இதில் உடலுக்குத் தீங்கிழைக்கும் பிபிஏ (BPA - Bisphenol A) இருக்கலாம் என்பதால் இதையும் தவிர்ப்பது நல்லது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதன் வேதியியல் கட்டமைப்பும் மனித ஆரோக்கியத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வது அவசியமாகும். பிளாஸ்டிக் பாட்டில்களை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதிலுள்ள பாலிமர் சங்கிலிகள் சிதைவடைந்து மோனோமர்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளாக மாறி குடிநீரில் கலந்து விடுகின்றன.

இத்தகைய வேதிப் பொருட்கள் நமது எண்டோகிரைன் எனப்படும் நாளமில்லா சுரப்பி மண்டலத்தை நேரடியாகப் பாதித்து , உடல் ஹார்மோன் சமநிலையைக் குலைக்கக்கூடும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சூரிய ஒளியில் வெளிப்படும் வகையிலோ அல்லது வாகனங்களின் உள்ளே அதிக வெப்பம் தாக்கும் இடங்களிலோ நீண்ட நேரம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது நச்சுக்களின் கசிவு வேகம் பலமடங்கு அதிகரிக்கிறது. மறுசுழற்சி குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் வெறும் குறியீடுகள் அல்ல. அவை ஒவ்வொரு வகை பிளாஸ்டிக்கும் எந்த வெப்பநிலையைத் தாங்கும், எத்தகைய சூழலில் சேமிக்கப்பட வேண்டும் என்ற முக்கிய அறிவியல் எச்சரிக்கைகளாகும்.

எனவே அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லும் தண்ணீர் பாட்டில்களாக இருந்தாலும் சரி, இல்லங்களில் பயன்படுத்தப்படும் உணவு சேமிப்புப் பெட்டிகளாக இருந்தாலும் சரி அவற்றின் அடியில் உள்ள எண்களைத் துல்லியமாகச் சரிபார்த்து வாங்குவதே நமது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உகந்த பாதுகாப்பான வழியாகும்.

​சுருக்கமாகக் கூறின், பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் அதன் அடியில் உள்ள முக்கோண எண்ணைக் கவனமாகப் பார்க்க வேண்டும். எண் 2, 4 மற்றும் 5 ஆகிய எண்கள் மட்டுமே ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை;

குறிப்பாக எண் 2 மற்றும் 5 மிகச் சிறந்தவை. எண் 1, 3, 6 மற்றும் 7 ஆகியவற்றைத் தவிர்ப்பது அல்லது எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மிக அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
மாதுளையோடு பாலா? உடலுக்குள் நடக்கும் விபரீதம் என்ன? - நியூட்ரிஷியன் எச்சரிக்கை!
பிளாஸ்டிக் பயன்பாடு - Plastic Recycling Code
logo
Kalki Online
kalkionline.com