

பொதுவாக வீட்டில் கிழங்குகளில் வறுவல் செய்வது என்பது தினசரி வாடிக்கை இல்லை. ஏதாவது பருப்பு சாதம், லெமன் சாதம் செய்யும் நாட்களில் அதற்குக் காம்போவாக உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல் செய்வது வழக்கம். அந்த வறுவல் மொறுமொறுப்பாக இருந்தால் சாப்பாட்டின் ருசியே தனிதான்! வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஆனால், சில நேரங்களில் நாம் என்னதான் கவனமாகச் சமைத்தாலும் வறுவல் மொறுமொறுப்பாக வராமல், எண்ணெயில் ஊறி கட்லெட் போல மெத்தென்று இருக்கும்.
மேலும், உருளைக்கிழங்கு, வாழைக்காய் ஆகியவை வெட்டிய சிறிது நேரத்திலேயே கருப்பாக மாறிவிடும்.
இதற்கெல்லாம் சில சின்னச் சின்ன சமையல் ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் இனி உங்கள் வீட்டு வறுவலும் ஹோட்டல் கடை வறுவல் போல மொறுமொறுப்பாக இருக்கும்! அந்த ரகசியங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வறுவல் மொறுமொறுப்பாக வர வெட்டியவுடன் செய்ய வேண்டிய வேலை!
வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவற்றை வறுவல் செய்வதற்கு மிகவும் தடிமனாக வெட்டாமல் ஒரே அளவில் மெல்லிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
வெட்டிய பின் காய்கறிகளை முதலில் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு, பத்து நிமிடம் கழித்து நன்றாக அலச வேண்டும்.
பிறகு ஒரு சுத்தமான துணியில் பரப்பி, அவற்றில் இருக்கும் ஈரப்பதத்தை முழுவதுமாகத் துடைத்து எடுக்க வேண்டும். இதுதான் மொறுமொறுப்பான வறுவலுக்கான முதல் ரகசியம்!
காய்கறிகளில் தண்ணீர் இருந்தால் எண்ணெயில் போடும்போது, அந்தத் தண்ணீர் முழுவதும் நீங்கும் வரை எண்ணெயில் இருக்க வேண்டியிருக்கும். இதனால் அவை மொறுமொறுப்பாக வறுபடாமல், கிழங்கு பொரியாமல் வெந்துவிடும்.
வறுவல் செய்யும்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், வெட்டிய கிழங்கு துண்டுகளை முழுவதுமாகக் கொட்டாமல் தேவையான அளவு மட்டும் சிறிது சிறிதாகப் போட்டு வறுக்க வேண்டும்.
வாழைக்காய் வெட்டியவுடன் கருப்பாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வாழைக்காயை உரித்ததும், வெட்டியதும் காற்றில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதன் நிறம் மாறி கருப்பாகிவிடும்.
இதைத் தவிர்க்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு மஞ்சள்தூள் அல்லது சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து, வாழைக்காயை வெட்டியவுடன் அதில் போட்டு வைக்க வேண்டும். இதனால் நிறம் மாறுவது குறையும்.
அதேபோல, உருளைக்கிழங்கையும் வெட்டியவுடன் உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு வைப்பதால் கருமை ஏற்படுவது குறையும்.
சேனைக்கிழங்கை வெட்டும்போது கைகளில் அரிப்பு ஏற்படாமல் இருக்க கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ளலாம்.
1. மொறுமொறுப்பான வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயைத் தோல் சீவி மெல்லியத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய துண்டுகளை மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு அலசி, பிறகு ஒரு துணியில் பரப்பி ஈரமில்லாமல் துடைத்து எடுத்து துணியில் பரப்பி ஆற விடவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைப் போட்டு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி மாவு, சோள மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வந்ததும் எடுத்துவிடவும்.
2. உருளைக்கிழங்கு மொறுமொறுப்பு வறுவல்
தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு – 3 No
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் – அரை டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கைத் தோல் சீவி ஒரே அளவிலான மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு துணியில் பரப்பி நன்றாக உலர்த்தவும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் பொரிக்கவும். அவ்வப்போது திருப்பிவிட்டு பொன்னிறமாகும் வரை பொரிய விடவும்.
வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே நன்றாக வெந்தும் வந்ததும் எடுத்துவிடலாம்.
3. சேனைக்கிழங்கு வறுவல்
சேனைக்கிழங்கைத் தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கைகளில் அரிப்பு ஏற்படாமல் இருக்க எண்ணெய் தடவிக்கொள்வது நல்லது.
வெட்டிய சேனைக்கிழங்கை மஞ்சள், சிறிதளவு உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு அரை வேக்காடு வேகவைக்கவும். பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடவும்.
இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், அரிசி மாவு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சேனைக்கிழங்கைப் போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்தெடுக்கவும்.
வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த வறுவல் ரசம் சாதத்துக்குச் சூப்பரான காம்பினேஷன்!
இந்தச் சின்ன ரகசியங்களையும் மறந்துவிடாதீர்கள்!
1. காய்கறிகளை வெட்டியதும் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைப்பது நிறம் மாறுவதைக் குறைக்கும்.
2. வறுப்பதற்கு முன்பு காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை நன்றாக நீக்க வேண்டும்.
3. அரிசி மாவு சேர்ப்பது வறுவலுக்கு மொறுமொறுப்பான தன்மையைக் கொடுக்கும்.
4. எண்ணெய் சரியான சூட்டில் இருக்க வேண்டும். மிகவும் குறைவான சூட்டில் வறுத்தால் எண்ணெய் அதிகமாக உறிஞ்சிவிடும்.
5. கடாயில் காய்கறிகளை அளவுக்கு அதிகமாகப் போடக்கூடாது.
6. வறுவலைப் பொரித்ததும் மூடி வைக்காமல், எண்ணெய் வடிந்த பிறகு அகலமான பாத்திரத்தில் பரப்பி வைக்க வேண்டும்.
இந்த ரகசியங்களை தெரிந்து கொண்டு நீங்கள் கடைப்பிடித்தால் இனி உங்கள் வீட்டிலும் வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு என்று எந்த வறுவல் செய்தாலும் உங்கள் வீட்டு வறுவலும் ஹோட்டல் வறுவலை போல கிறிஸ்பியாக மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும்!
பருப்பு சாதம், லெமன் சாதம் அல்லது ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளக் கூடிய வறுவல் இனி எண்ணெயில் ஊறி மெத்தென்று ஆகாமல், வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் நிறம் மாறாமலும் வரும் தெளிவான செய்முறைகளையும் டிப்ஸ்களையும் வாசகர் பெறுவார்.