கத்திரிக்காய் குழையாமல் மணம் கமகமக்கும் விருந்து ரசவாங்கி செய்வது எப்படி?

செட்டிநாட்டு விருந்து ருசியை வீட்டிலேயே கொண்டு வர எளிய செய்முறை மற்றும் சமையல் ரகசியங்கள்.
கத்திரிக்காய் ரசவாங்கி - Brinjal Rasavangi,
கத்திரிக்காய் ரசவாங்கி - Brinjal Rasavangi,Image credit: Gemini
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ரசவாங்கி என்று சொன்னாலே செட்டிநாடுதான் நினைவுக்கு வரும். இந்த ரசவாங்கி அவர்கள் வீட்டு பாரம்பரிய சமையலில் பிரபலமான ஒரு வகை கூட்டு போன்ற உணவு.

இது வறுத்து அரைத்த மசாலாவின் மணத்துடனும் இருக்கும். செட்டிநாட்டு விருந்தில் தவறாமல் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்த ரசவாங்கியைப் பூசணிக்காய், வாழைக்காய் வைத்தும் சமைக்கலாம். ஆனால், கத்திரிக்காய் ரசவாங்கியின் சுவைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

ரசவாங்கி என்றால் அது சாதாரண கத்திரிக்காய் சாம்பார் அல்ல. குழைந்த பருப்புடன் கத்திரிக்காயும், வறுத்து அரைத்த மசாலாவின் சுவையும் சேர்ந்ததுதான் ரசவாங்கியின் சிறப்பு.

ஆனால், சில சமயங்களில் கத்திரிக்காய் அதிகமாக வெந்து குழைந்து காணாமல் போய்விடும். மசாலாவும் சரியான பதத்தில் அமையாமல் சதி செய்து சுவையைக் கெடுத்துவிடும். அப்படியில்லாமல், கல்யாண வீட்டு ரசவாங்கி போல கமகமவென்று செய்ய சில முக்கியமான ரகசியங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போமா?

1. பிஞ்சுக் கத்திரிக்காயும் நறுக்கும் முறையும்!

ரசவாங்கி செய்வதற்கு விதைகள் அதிகம் இல்லாத, இளசான பிஞ்சுக் கத்திரிக்காய்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

கத்திரிக்காயை மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கினால் வேகும்போதே குழைந்துவிடும். எனவே, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, அவை நிறம் மாறாமல் இருக்க நறுக்கியதும் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2. கருகாமல் வறுத்து அரைக்கும் மசாலாதான் ருசியின் ரகசியம்!

மசாலாவை மிதமான தீயில் வைத்து வறுப்பதுதான் நல்லது. கருகவிடக் கூடாது. அப்போதுதான் ரசவாங்கிக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் தனியா, 5 முதல் 6 காய்ந்த மிளகாய், சிறிதளவு வெந்தயம் சேர்த்து மிதமான தீயில்

வறுக்கவும். கடைசியாக அரை மூடி துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து ஆறவிடவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

3. கத்திரிக்காய் குழையாமல் இருக்க இந்த டிப்ஸ்!

கத்திரிக்காயை நறுக்கியதும் தண்ணீரில் போட்டு வைக்கவும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். கத்திரிக்காய் முக்கால் பதம் வெந்ததும் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

கத்திரிக்காய் ரசவாங்கி - Brinjal Rasavangi,
கத்திரிக்காய் ரசவாங்கி - Brinjal Rasavangi,Image credit: Gemini

4. பருப்பை எப்போது சேர்க்கவேண்டும்?

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து தனியாக நன்றாக வேகவைத்து மசித்து வைக்கவும். கத்திரிக்காய் முக்கால் பதம் வெந்ததும் வேகவைத்த பருப்பையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

ரசவாங்கி சாம்பாரைவிடக் கெட்டியாகவும், கூட்டைவிடச் சற்று தளர்வாகவும் இருக்கவேண்டும்.

5. மணம் கமகமக்க மிதமான தீயில் கொதித்தலும் தாளிப்பும்!

ரசவாங்கியைத் தயாரித்ததும் உடனே இறக்காமல், மசாலாவும் பருப்பும் கத்திரிக்காயும் ஒன்றோடொன்று கலந்து வரும்வரை சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

பிறகு, ஒரு சிறிய வாணலியில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சிறிதளவு வறுத்த எள் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து ரசவாங்கியில் சேர்த்துக் கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!
கத்திரிக்காய் ரசவாங்கி - Brinjal Rasavangi,

பாரம்பரிய விருந்து ரசவாங்கி – செய்முறை

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – ¼ கிலோ

துவரம்பருப்பு – ½ கப்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெல்லம் – சிறிதளவு

நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:

கொத்தமல்லி விதைகள் – 2 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5

மிளகு – ½ டீஸ்பூன்

வெந்தயம் – ¼ டீஸ்பூன்

எள் – 1 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – ¼ கப்

செய்முறை:

1. முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுக்கவும். கடைசியாக எள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

2. ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அளவாகத் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

3. கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.

4. துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து தனியாக நன்றாக வேகவைத்து மசித்து வைக்கவும்.

5. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

6. கத்திரிக்காய் முக்கால் பதம் வெந்ததும் வேகவைத்த பருப்பையும் அரைத்த மசாலாவையும் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

7. மசாலாவின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் மேலே பிரிந்து வரும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சூடான சாதம், நெய், அப்பளம் என ஒரு கிளாசிக் காம்போவாகப் பரிமாறினால், விருந்து சாப்பாட்டுக்கு ஏற்ற அருமையான ரசவாங்கி தயார்!

இதையும் படியுங்கள்:
உப்புமா வேண்டாம் என்பவர்களும் விரும்பும் கம்பு ரவை உப்புமா, கிச்சடி ரெசிபிகள்!
கத்திரிக்காய் ரசவாங்கி - Brinjal Rasavangi,