உப்புமா வேண்டாம் என்பவர்களும் விரும்பும் கம்பு ரவை உப்புமா, கிச்சடி ரெசிபிகள்!

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு வித்தியாசமான காலை மற்றும் மாலை டிபன் செய்வது எப்படி?
கம்பு ரவை
கம்பு ரவைGemini image
ஆ.நர்மதா

ஆ.நர்மதா, வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். விருதுநகர் அருகே பாளையம்பட்டி கிராமத்திலிருந்து எழுதி வருகிறார். பள்ளிப் பருவம் முதலே தமிழார்வம் கொண்ட இவர், சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு தேடும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படைத்து வருகிறார்.

Updated on: 

வீட்டில் “காலையில் என்ன டிபன் செய்வது? மாலையில் என்ன செய்வது?” என்று தினமும் யோசிப்பதே ஒரு பெரிய வேலையாகிவிட்டது. வீட்டில் இருப்பதை வைத்து ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒருபுறம்..“உப்புமா செய்யலாமே!” என்று சொன்னால், வீட்டில் சில முகங்கள் உடனே மாறுவது மறுபுறம்!

“உப்புமாவா? வேண்டாம்!” என்று சொல்லும் குடும்பத்தினருக்காகவே இந்த கம்பு ரவை உப்புமா. வழக்கமான ரவை உப்புமாவைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு, கம்பு ரவைக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். காய்கறிகள், பச்சை மிளகாய், நறுமணத் தழைகள், கடைசியில் ஒரு ஸ்பூன் நெய். இவை சேர்ந்துவிட்டால், உப்புமாவுக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிடும்!

1. கம்பு ரவை உப்புமா

தேவையான பொருட்கள்:

கம்பு அரிசி – 2 கப்

பச்சரிசி அல்லது சாப்பாட்டு அரிசி – 1 கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் – 2

நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 4

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை – ஒரு கைப்பிடி

பொடியாக நறுக்கிய தக்காளி – 2

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

கம்பு ரவை
கம்பு ரவைGemini image

செய்முறை:

கம்பு அரிசியைச் சுத்தம் செய்து, கழுவி உலர்த்தி எடுக்கவும்.

அதேபோல் அரிசியையும் கழுவி உலர்த்தி எடுக்கவும்.

ஒரு வாணலியில் கம்பு அரிசி மற்றும் அரிசியைச் சேர்த்து, சிறு தீயில் மணம் வரும் வரை வறுத்து எடுத்து ஆறவிடவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

கம்பு மற்றும் அரிசி கலவையை 2:1 என்ற அளவில் கலந்து ரவையாக்கி வைத்துக் கொள்ளலாம்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பருப்பு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் 1:1.5 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டியில்லாமல் நன்கு கிளறவும்.

பின்னர் குக்கரை மூடி, மிதமான தீயில் மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து, நெய் ஊற்றி நன்கு கிளறி சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

2. கம்பு ரவை கிச்சடி

தேவையான பொருட்கள்:

கம்பு ரவை – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

கேரட் – 1

பச்சைப் பட்டாணி – ¼ கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 சிறிய துண்டு

கடுகு – ½ ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்

கடலைப்பருப்பு – ½ ஸ்பூன்

சீரகம் – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் தேவையான அளவு

நெய் 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டுப் பருப்பு உசிலி… பாட்டி முறையில் கட்டி தட்டாமல் உதிர உதிரச் செய்வது எப்படி?
கம்பு ரவை

செய்முறை:

கம்பு ரவையை கடாயில் எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் 3–4 நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

தக்காளி, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து 2–3 நிமிடங்கள் வதக்கவும்.

இப்போது 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!
கம்பு ரவை

தண்ணீர் கொதித்ததும் வறுத்த கம்பு ரவையை மெதுவாகச் சேர்த்துக்கொண்டே கிளறவும். கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறவும்.

மூடி வைத்து மிதமான தீயில் 8–10 நிமிடங்கள் வேகவிடவும். கம்பு ரவை நன்றாக வெந்து, தண்ணீர் உறிஞ்சியதும் அடுப்பை அணைக்கவும்.

5 நிமிடங்கள் மூடி வைத்த பிறகு திறந்து கிளறவும். சுவையான கம்பு ரவை கிச்சடி தயார்.

இறுதியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் கிச்சடிக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.

வழக்கமான ரவை உப்புமாவுக்குப் சலித்துப் போனவர்களையும், உப்புமா என்றாலே முகம் சுளிக்கும் குடும்பத்தினரையும் கவரும் வகையில், கம்பு ரவையைக் கொண்டு சுவையான உப்புமா மற்றும் கிச்சடியை எளிதாகத் தயாரித்துப் பரிமாற முடியும்.