

நம் அன்றாட சமையலில் உணவுகளின் மணம் கூட்ட அவசியம் சேர்க்கப்பட்டு நம்மால் தூக்கி எறியப்படும் கறிவேப்பிலையின் மகத்துவம் தெரியுமா ?
கறிவேப்பிலை (Murraya koenigii) வைட்டமின்கள் (A, B, C, E), கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது பசியைத் தூண்டவும், அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லைகளை நீக்கவும் உதவுகிறது.
முடி உதிர்தலைத் தடுத்து, முடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைச் சீராகப் பராமரித்து நீரிழிவு பாதிப்பை சீராக வைக்கிறது.
முக்கியமாக கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையைப் போக்குகிறது.
இதில் வைட்டமின் A சத்து அதிகம் உள்ளதால் கண் பார்வையை மேம்படுத்த உதவும். உடல் பருமன் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை மென்று சாப்பிடுவது அல்லது அதன் சாறு பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்கின்றனர்.
கறிவேப்பிலையை தினமும் உணவில் தாளிக்கும்போது கறிவேப்பிலையைச் சேர்த்து தூக்கி எறியாமல் அதையும் சாப்பிடலாம். கறிவேப்பிலையைச் சுடுநீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மூலிகைத் தேநீராகப் குடிக்கலாம். குறிப்பாக.தினசரி 8 முதல் 10 புதிய இலைகளைப் பச்சையாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக் கொள்வது சிறந்தது என்கிறது மருத்துவம், கறிவேப்பிலையில் பொடி துவையல் சட்னி போன்றவைகளும் செய்து அடிக்கடி சமையலில் சேர்க்கலாம்.
எல்லாம் சரிதான். இப்போது கிடைக்கும் கறிவேப்பிலை இலைகளில் கருப்புப் புள்ளிகள் இருக்கிறதே இது உடலுக்கு நல்லதா? நாங்கள் வீட்டில் வளர்க்கும் கறிவேப்பிலையிலும் இந்த பாதிப்பு உள்ளதே? என்ன செய்யலாம்?
இதோ உங்கள் சந்தேகம் தெளிவு பெற பதில் இங்கு...
கறிவேப்பிலையில் புள்ளிகள் இருப்பது பொதுவான பிரச்னையாகும். இதற்குப் பூஞ்சைத்தொற்று, பூச்சிகளின் தாக்குதல் அல்லது இலைகளில் ஏற்படும் சேதம் போன்றவை காரணமாக இருக்கலாம். கருப்புப் புள்ளிகள் இருப்பதை மட்டும் வைத்து அவை எதனால் ஏற்பட்டன என்று உறுதியாகக் கூற முடியாது. இலைகளின் தோற்றம், புள்ளிகளின் பரவல் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
கறிவேப்பிலையில் கருப்புப் புள்ளிகள் ஏற்பட 3 முக்கிய காரணங்கள் இவைதான்.
1. பூஞ்சைத் தொற்று
இலைகளில் சிறிய கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றலாம். புள்ளிகள் நாளடைவில் பெரிதாகலாம். நாளானால் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரவும் வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இலைகளில் நீண்ட நேரம் ஈரப்பதம் இருப்பது . இதனால் சில பூஞ்சை நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
என்ன செய்யலாம்? பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றவும். செடிக்கு அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து, இலைகள் விரைவாக உலரும் வகையில் காற்றோட்டத்தை மேம்படுத்தலாம்.
2. பூச்சிகளின் தாக்குதல்
மாவுப்பூச்சிகள், செதில் பூச்சிகள் போன்றவை இலைகளின் சாற்றை உறிஞ்சலாம். சில பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற ஒட்டும் திரவத்தின் மீது கரும்பூஞ்சை வளர்ந்து, இலைகளில் கருப்பு படலம் உருவாகலாம்.
இலைகள் ஒட்டுவது அல்லது சிறிய பூச்சிகள் தென்படுவது இதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
என்ன செய்யலாம்? இலைகளின் அடிப்பகுதியையும் தண்டுகளையும் கவனமாகப் பாருங்கள். பூச்சிகள் இருந்தால் தண்ணீரால் மெதுவாகக் கழுவி அகற்றலாம்.
3. அதிக ஈரப்பதம் அல்லது பராமரிப்புப் பிரச்சினைகள் குறித்து
தொடர்ந்து மழை பெய்வது அல்லது இலைகள் நீண்ட நேரம் ஈரமாக இருப்பது நோய்த் தாக்குதலுக்கு வழிவகுக்கலாம்.
செடிகள் நெருக்கமாக வளரும்போது காற்றோட்டம் குறையலாம்.
சில நேரங்களில் வெயில், உரம் அல்லது தெளிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் சேதமும் கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளை உருவாக்கலாம்.
என்ன செய்யலாம்? செடிக்கு காலையில் தண்ணீர் ஊற்றவும். மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்து நீர் விடவும். இலைகளின் மீது அடிக்கடி தண்ணீர் தெளிப்பதைத் தவிர்க்கவும்.
கருப்புப் புள்ளியா, கரும்பூஞ்சைப் படலமா என்பதை வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய பரிசோதனை மூலம் அறிந்து பிறகு பயன்படுத்தலாம்.
வெள்ளை நிறத்துணி அல்லது டிஷ்யூ பேப்பர், சிறிதளவு தண்ணீர். ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கருப்புப் புள்ளிகள் உள்ள ஒரு இலையைத் தேர்ந்தெடுக்கவும்.
டிஷ்யூ பேப்பரைச் சிறிதளவு தண்ணீரில் நனைத்ஊஉ இலையின் கருப்புப் பகுதியை மெதுவாகத் துடைக்கவும். பேப்பரில் கருப்பு நிறம் படிகிறதா, இல்லையா என்று பாருங்கள்.
கருப்பு நிறம் எளிதாகத் துடைத்து வந்தால் இலையின் மேற்பரப்பில் படிந்த கரும்பூஞ்சையாக இருக்கலாம். பூச்சிகள் உள்ளனவா என்று பாருங்கள்..கருப்புப் புள்ளி துடைத்தாலும் மறையவில்லை என்றால் அது இலைத் திசுவில் ஏற்பட்ட புள்ளியாகவோ, நோய்த் தாக்குதலாகவோ இருக்கலாம்.
ஆனால் இந்த பரிசோதனை மூலம் பூஞ்சை நோயை உறுதிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கருப்புப் புள்ளிகள் உள்ள கறிவேப்பிலையைச் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எழுவது இயல்பு.
கருப்புப் புள்ளிகள் ஏன் ஏற்பட்டன என்பது தெரியாவிட்டால், பாதிக்கப்பட்ட இலைகளை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நன்றாகக் கழுவுவது மட்டும் எல்லா வகையான மாசுகளையும் நீக்கும் என்று கருதவேண்டாம்.
பூஞ்சை வளர்ச்சி, அழுகல் அல்லது துர்நாற்றம் இருந்தால் அந்த கறிவேப்பிலையைத் தூக்கி எறியுங்கள்.
இறுதியாக கறிவேப்பிலை குறித்து இத்தனை சந்தேகங்கள் தேவையில்லை. கறிவேப்பிலையில் மாற்றம் தெரிந்தால் அதை பயன்படுத்துவதை தவிர்த்தால் நமது நலன் கெடாது.