

புடலங்காயின் ஆரோக்கிய குணங்களை சுவையுடன் சேர்த்து அனுபவிக்க, எளிய படிநிலைகளில் செய்யக்கூடிய புடலங்காய் சாதம், மொறு மொறு வறுவல், பக்கோடா, காரமான துவையல், குளிர்ச்சியான ராய்த்தா ஆகிய ஐந்து ரெசிபிகள் இங்கு தரப்பட்டுள்ளன. புடலங்காய் சமையல் வீட்டுச் சுவை மாறாமல், குறைந்த பொருட்களிலும் நேரத்திலும் அசத்தலான மெனு தயார் செய்ய உதவும் வழிகாட்டியாக இந்தக் குறிப்புகள் அமைகின்றன.
1. புடலங்காய் சாதம்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1 கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
சமைத்த சாதம் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளிக்கவும்.பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, புடலங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து காய்கள் நன்கு வேகும்வரை வதக்கவும். இதனுடன் சமைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடம் வதக்கி இறக்கவும். சூடாக பரிமாறவும்.
2. புடலங்காய் வறுவல்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1½ டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை தாளிக்கவும். பின்னர் இதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய புடலங்காய் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மூடி வைத்து மெதுவாக வதக்கவும். நடுவில் ஒருமுறை கலக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்; புடலங்காய் தானாகவே தண்ணீர் விடும். நன்றாக வெந்ததும், வாணலியில் எண்ணெய் விட்டு, புடலங்காய் கலவையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கவும். மொறு மொறு புடலங்காய் வறுவல் ரெடி.
3. புடலங்காய் பக்கோடா
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1 (மெல்லிய வட்டமாக நறுக்கி நீரில் கழுவி வடித்தது)
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்தூள் – ½ டீஸ்பூன்
சீரகத்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – 1 (சிறிது நறுக்கியது – விருப்பம்)
கருவேப்பிலை – சிறிது
தண்ணீர் – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு கெட்டியான மாவாக கலக்கவும். புடலங்காய் வட்டங்களை அந்த மாவில் மூழ்கடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். மொறு மொறு புடலங்காய் பக்கோடா ரெடி.
4. புடலங்காய் துவையல்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1 கப் (தோல் நீக்கி நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
தேங்காய்த் துருவல் – ¼ கப்
புளி – சிறிய அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
புடலங்காய் துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வேகவைத்த புடலங்காய், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சுவையான புடலங்காய் துவையல் தயார். இதை சாதத்துடன் அல்லது இடியாப்பத்துடன் பரிமாறலாம்.
5. புடலங்காய் ராய்த்தா
தேவையான பொருட்கள்:
இளசான புடலங்காய் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 8,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்,
கெட்டித் தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புடலங்காய், சின்ன வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் புடலங்காயை சேர்த்து லேசாக வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதனைப் பரிமாறும்போது கெட்டித்தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். அள்ளும் சுவையில் புடலங்காய் ராய்த்தா ரெடி.
இந்த எளிய செய்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உடலுக்கு நன்மையளிக்கும் புடலங்காயைப் பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் 5 வித்தியாசமான உணவுகளை மிகக் குறைந்த நேரத்தில் சுவையாகச் சமைத்து அசத்த முடியும்.