நவராத்திரி பண்டிகை நாட்களில் பொதுவாக ஒன்பது நாட்களும் பல விதமான நைவேத்தியங்கள் செய்து அம்பாளை மிகவும் பக்தியுடன் வழிபடுவது வழக்கம். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தினமும் அதிக நேரம் செலவிட்டு பலவிதமான கொழுக்கட்டைகளைச் செய்வது சற்று கடினமான காரியமாக அமையலாம்.
அதனால், இந்த ஆண்டு கொழுக்கட்டைக்கு பதிலாக மிக விரைவாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய 5 வகையான நவராத்திரி பிரசாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
1. அவல் பாயசம்:
வெறும் 10 நிமிடங்களில் இந்த அட்டகாசமான இனிப்பை நீங்கள் மிக எளிதாகச் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்: 1 கப் கெட்டி அவல், 2 கப் காய்ச்சிய பால், 1 கப் வெல்லம், ஏலக்காய் தூள், முந்திரி, நெய்.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து அவலை வாசம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் காய்ச்சிய பாலில் அதை நன்றாக வேகவிட வேண்டும். அவல் வெந்தவுடன் வெல்லக்கரைசல் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூவினால் சுவையான பாயசம் தயார்.
2. ரவா கேசரி:
திடீரென சாமிக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும் என்றால் இது இந்த ரெசிபியை நீங்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.
தேவையான பொருட்கள்: 1 கப் ரவை, 1 கப் சர்க்கரை, 3 கப் தண்ணீர், தாராளமான நெய், முந்திரி, உலர் திராட்சை.
செய்முறை: ரவையை நெய்யில் சிவக்க வறுக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் வறுத்த ரவையைச் சிறிதும் கட்டி இல்லாமல் கவனமாகக் கிளற வேண்டும். வெந்ததும் சர்க்கரை மற்றும் நெய் சேர்த்துச் சுருள வதக்கி முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும்.
3. சர்க்கரைப் பொங்கல்:
பண்டிகை மற்றும் பூஜை என்றாலே முதலில் அனைவரின் நினைவுக்கு வருவது சர்க்கரைப் பொங்கல் தான். இதை நான் கீழே குறிப்பிட்டது படி முயற்சித்துப் பாருங்கள் சுவை வேற லெவலில் இருக்கும்.
தேவையான பொருட்கள்: 1 கப் பச்சரிசி, 2 தேக்கரண்டி பாசிப்பருப்பு, 2 கப் வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் சிறிதளவு.
செய்முறை: அரிசி மற்றும் பருப்பை குக்கரில் குழையக் குழைய நன்றாக வேகவைக்க வேண்டும். வெல்லத்தைத் தனியாகக் காய்ச்சி வடிகட்டி வெந்த சாதத்தில் ஊற்றிக் கிளற வேண்டும். பின்னர் தாராளமாக நெய் மற்றும் முந்திரி சேர்த்து இறக்கலாம்.
4. தேங்காய் லட்டு:
அடுப்பில் பாகு காய்ச்சும் வேலையோ, மாவு பிசையும் வேலையே இல்லாத மிக மிகச் சுலபமான ரெசிபி இது.
தேவையான பொருட்கள்: 2 கப் தேங்காய் துருவல், 1 கப் மில்க் மெய்ட், ஏலக்காய், சிறிதளவு நெய்.
செய்முறை: நெய்யில் தேங்காய் துருவலை அதிலுள்ள ஈரம் முழுமையாகப் போகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் மில்க் மெய்ட் சேர்த்துச் சுருளக் கிளற வேண்டும். ஆறியதும் கைகளில் நெய் தடவிச் சிறு உருண்டைகளாகப் பிடித்தால் அருமையான லட்டு தயார்.
5. பேரிச்சம்பழம் நட்ஸ் லட்டு:
அடுப்பு பக்கமே செல்லாமல், சமைக்கவே தேவையில்லாத அதிக சத்துகள் நிறைந்த உணவு இது.
தேவையான பொருட்கள்: 1 கப் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம், 1 கப் முந்திரி மற்றும் பாதாம், சிறிதளவு உலர் திராட்சை.
செய்முறை: மிக்ஸியில் நட்ஸ் வகைகளை ஒன்றும் பாதியுமாகக் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதோடு பேரிச்சம்பழத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்க வேண்டும். இதை அப்படியே கைகளில் எடுத்துச் சிறிய உருண்டைகளாகப் பிடித்தால் மிகவும் ஆரோக்கியமான இனிப்பு ரெடி.
இந்த ரெசிபி வகைகளை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பான சுவையில் தெய்வத்திற்கு நைவேத்தியம் படைக்கலாம். வேலைக்குச் செல்வோர் கூட அதிக உடல் சோர்வில்லாமல் இந்த சுவையான நவராத்திரி பிரசாதம் வகைகளைத் தயாரித்து இறைவனின் அருளை முழுமையாகப் பெறலாம்.
இந்த ஆண்டு உங்கள் வீட்டுப் நவராத்திரி பண்டிகை மிகவும் இனிமையாகவும் எல்லையில்லா மகிழ்ச்சியாகவும் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த ரெசிபி வகைகளை முயற்சித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.