

காலை உணவு என்றாலே இட்லி, தோசை என்று போரடித்துப் போனவர்களுக்கு ஒரு அட்டகாசமான ஒரு உணவு தான் பேன்கேக் (Pancake). அதிலும் நல்ல பஞ்சு போல பேன்கேக் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? வழக்கமாக பேன்கேக் மிருதுவாக வர முட்டை சேர்ப்பார்கள்.
ஆனால் முட்டை சாப்பிடாதவர்கள் அல்லது முட்டை சேர்க்க விரும்பாதவர்களுக்கு இனி கவலையே வேண்டாம். வீட்டில் யாருமே சாப்பிடாமல் ஒதுக்கப்படும் நன்கு கனிந்த வாழைப்பழங்கள் இருந்தால் போதும், அதை வைத்து பேன் கேக் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழம் - 2
கோதுமை மாவு / மைதா மாவு - 1 கப்
நாட்டுச்சர்க்கரை / சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் - 3/4 கப்
உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை!
பேன்கேக் பஞ்சு போல வருவதற்கு மாவு கலக்கும் முறைதான் மிக முக்கியம். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கனிந்த வாழைப்பழங்களை எடுத்து, ஒரு கரண்டி அல்லது மத்து வைத்து கட்டிகள் இல்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம் எந்த அளவுக்குக் கனிந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு பேன்கேக் இயற்கையான இனிப்புடனும் மிருதுவாகவும் வரும்.
மசித்த வாழைப்பழத்துடன் பால், உருக்கிய வெண்ணெய், நாட்டுச்சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது இதனுடன் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சலித்துச் சேர்க்கவும். மாவை ரொம்பவும் அழுத்திப் பிசையாமல், எல்லாம் ஒன்றாகச் சேரும்படி மெதுவாகக் கலந்து விட வேண்டும். மாவு இட்லி மாவை விடச் சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு நான்-ஸ்டிக் தவாவை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். தவா காய்ந்ததும் லேசாக வெண்ணெய் தடவி, ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றுங்கள். தோசை போல மெல்லியதாகத் தேய்க்கக் கூடாது; மாவு தானாகவே லேசாகப் பரவிக் கொள்ளும். அடுப்பு கண்டிப்பாக மிதமான தீயிலேயே இருக்க வேண்டும்.
சுமார் ஒரு நிமிடம் கழித்து, பேன்கேக்கின் மேல் பகுதியில் சிறுசிறு குமிழிகள் வரத் தொடங்கும். இதுதான் சரியான பக்குவம். இப்போது மெதுவாகத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் பொன்னிறமாகச் சிவக்கும் வரை வேகவைத்து எடுத்தால், ஆவி பறக்கும் சுவையான பேன்கேக் தயார்!
சுடச்சுட வெந்து வந்திருக்கும் இந்த ஃப்ளஃபி பனானா பேன்கேக் மீது சிறிதளவு தேன் அல்லது மேப்பிள் சிரப் ஊற்றி, விருப்பமான நட்ஸ் தூவிப் பரிமாறிப் பாருங்கள். வாழைப்பழத்தின் வாசனையும், வெண்ணெயின் சுவையும் சேர்ந்து ஒவ்வொரு வாய்க்கும் அமிர்தமாக இருக்கும்.