

கேழ்வரகு, கேப்பை என்று பரவலாக பல்வேறு பெயர்களில் அறியப்படும் ராகி, பல்வேறு சத்துகள் நிறைந்தது. இரும்புச்சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து, அமினோஅமிலங்கள் என சத்துக்கள் நிறைந்தது ராகி. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், இரத்த சோகை குறைப்பாட்டை சரிசெய்யவும், நீரிழிவு நோய்க்கும் மிகவும் சிறந்த ராகியை எப்படி சமைத்தால் அனைவரையும் ரசித்து உண்ணவைக்கலாம் என்று பார்க்கலாமா.
பொதுவாக ராகி தோசைதான் செய்வோம். அதை குழந்தைகளை சாப்பிட வைப்பது அத்தனை சுலபமில்லை. வீட்டில் உள்ள அனைவரையும் விரும்பி சாப்பிட வைக்கும் வகையில் ராகியை எப்படியெல்லாம் சமைக்கலாம்.
ராகி உப்புமா
பெயர்தான் உப்புமா. ஆனால் சுவை நாவில் நடமாடும். சுடச்சுட சாப்பிட்டால் மறுபடி மறுபடி சாப்பிடத் தோன்றும். இதற்குத் தேவையான பொருட்கள் ராகி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், தாளிக்க தேவையான பொருட்கள் அவ்வளவே.
ராகி மாவை தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும். சப்பாத்திக்கு பிசைவது போல் இல்லாமல் தளர்வாகப் பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து தாளித்து, பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்திற்குத் தேவையான சிறிதளவு உப்பு சேர்த்து, வெங்காயம் நன்றாக வதங்கியதும், பிசைந்து வைத்த ராகி மாவைச் சேர்க்கவும்.
கரண்டியால் நன்றாகக் கலந்துவிட்டால், சேர்ந்தாற்போல இருக்கும் மாவு கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனியாக உடைந்துவரும். ஐந்து நிமிடங்கள் மூடிவைத்து, பிறகு திறந்து கிளறிவிடவும். இதேமுறையை மாவு வேகும்வரைத் தொடரவும். அடிக்கடி கிளறிவிட்டு மூடிவைக்க வேண்டும். மாவு வேக வேக உதிர்ந்து வரும். நிறைய நேரம் மூடி வைக்கக் கூடாது. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் சுவையான ராகி உப்புமா தயார். சூடாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
ராகி ரொட்டி
சப்பாத்தி போலவே ராகியிலும் ரொட்டி செய்யலாம். ராகி மாவுடன் வெங்காயம், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, கீறிய தேங்காய்த் துண்டுகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி எல்லாம் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்குப் பிசைவது போல் அல்லாமல் கொஞ்சம் தளர்வாகப் பிசையவேண்டும். வாழை இலை அல்லது சில்வர் ஃபாயிலில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை மெலிதாகத் தட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான ராகி ரொட்டி தயார். தொட்டுக் கொள்ள சட்னி செய்து கொள்ளலாம். சட்னி இல்லாமலேயே சாப்பிட நன்றாக இருக்கும். அரிசி மாவு, கம்பு மாவு, சோள மாவு ஆகியவற்றிலும் இதுபோல் செய்யலாம்.
இனிப்பு ரொட்டி
இதில் வெல்லம் சேர்த்து இனிப்பு ரொட்டியாகச் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி ராகி மாவில் சேர்த்து, ஏலக்காய்த்தூள், கீற்றிய தேங்காய்த் துண்டுகள் சேர்த்து பிசைந்து தட்டி நெய்விட்டு சுட்டு எடுத்தால் இனிப்பு ராகி ரொட்டி தயார்.
இந்த மூன்றும் காலை உணவுக்கு அருமையாக இருக்கும். ஆரோக்கியமானதும் கூட. மாலை நேரச் சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.