வீட்டு சன்னா மசாலாவில் மிஸ் ஆவது என்ன? ஹோட்டல் சுவைக்கு பின்னால் இருக்கும் பேஸ்ட்!

ஹோட்டல் ஸ்டைல் மசாலா பேஸ்ட் செய்முறை, குருமா-சால்னா பயன்பாடு மற்றும் சேமிக்கும் முறை.
சன்னா மசாலா
சன்னா மசாலாGemini image
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா சாப்பிட யாருக்குத் தான் ஆசையில்லை. ஆனால் ஏதோ ஒன்றை நாம் வீடுகளில் சன்னா மசாலா தயாரிக்கும்போது மிஸ் செய்கிறோமா? அது என்ன மற்றும் அதன் செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.

பல ஹோட்டல்களில் கிடைக்கும் சாம்பார், குருமா, சால்னா, கறி வகைகளுக்கு ஒரு தனித்துவமான மணமும் சுவையும் இருக்கும். அந்தச் சுவைக்குப் பின்னால் வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்கள் சேர்த்து அரைக்கப்படும் பிரத்யேக மசாலா பேஸ்ட்டுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பது தெரியுமா?

அதுதான் சன்னா மசாலாவை இன்னும் சுவையாக மாற்ற ஹோட்டல் ஸ்டைல் மசாலா பேஸ்ட். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா பேஸ்ட்டை சிரமம் பார்க்காமல் ஒருமுறை அரைத்து வைத்தால் பல வகை உணவுகளுக்குப் பயன்படும்.

நாமும் வீட்டிலேயே இந்த மசாலா பேஸ்ட்டைத் தயாரிக்க முடியுமா? நிச்சயம் இதை தயாரித்து வைத்துக் கொண்டால் பல உணவுகளை எளிதாகவும் சுவையாகவும் செய்யலாம்.

ஹோட்டல் ஸ்டைல் மசாலா பேஸ்ட் செய்முறை.

தேவையான பொருட்கள்;

பெரிய வெங்காயம் -4

தக்காளி- 3

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 20 பல்

காய்ந்த மிளகாய்- 10

மல்லி விதை( தனியா) - 3 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 2 டீஸ்பூன்

சீரகம் -1 டீஸ்பூன்

மிளகு- 1 டீஸ்பூன்

பட்டை-2 துண்டு

கிராம்பு -5

ஏலக்காய் -3

தேங்காய்த் துருவல் -அரை கப்

கறிவேப்பிலை -2 கொத்து

எண்ணெய்-தேவையான அளவு

உப்பு- தேவைக்கேற்ப

தயாரிக்கும் முறை;

தந்துள்ள மசாலாப் பொருட்களை சரியான பதத்தில் வறுப்பதுதான் முதல் ஸ்டெப். கனமான கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை மிதமான தீயில் வைத்து பரவலாக கிளறி வாசம் வரும் வரை வறுக்கவும். கருகவிடக்கூடாது.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி நறுக்கிய அல்லது நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

சன்னா மசாலா
சன்னா மசாலாGemini image

இப்போது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கி கடைசியில் தேங்காய்த் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும்.

இப்போது வறுத்த மசாலாப் பொருட்களையும் வதக்கிய கலவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

இதோ சுவையான சன்னா ஹோட்டல் ஸ்டைல் மசாலா பேஸ்ட் தயார்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் பரோட்டா சால்னா சுவை வீட்டிலேயே! இந்த 4 ரகசியங்கள் தெரிஞ்சா போதும்!
சன்னா மசாலா

இந்த ஒரு பேஸ்ட்டால் சுவை கூடும் உணவுகள் என்ன என்று பார்ப்போம்.

காளான் மசாலா - காளானை இந்தப் பேஸ்ட்டில் சேர்த்து கிரேவி செய்தால் கூடுதல் மணமாக இருக்கும்.

வெஜிடபிள் குருமா - காய்கறிகளுடன் சேர்த்து ஹோட்டல் ஸ்டைல் குருமா செய்யலாம்.

சால்னா - தண்ணீர், மசாலா பேஸ்ட், தேவையான மசாலாத் தூள்கள் சேர்த்து சுவையான சால்னா தயாரிக்கலாம்.

இவற்றுக்கு ஏற்ற காரத்துக்கு காய்ந்த மிளகாய்களை கூட்டியும் குறைத்தும் பேஸ்ட் தயாரிப்பது முக்கியம்.

இந்த மசாலாவை நீண்ட நாட்கள் சேமிப்பது சரியல்ல. காரணம் இதில் உள்ள தேங்காய்த் துருவல். இதைஅறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்க வேண்டாம். 2–3 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் எனில் குளிர்சாதனப் பெட்டியில் காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். அதற்கு மேல் வைத்திருக்க வேண்டுமென்றால் கைப்படாமல் சிறு சிறு அளவுகளாகப் பிரித்து ஃப்ரீசரில் வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா வீட்டிலேயே செய்யணுமா? இந்த 4 ரகசியங்கள் தெரிஞ்சா போதும்!
சன்னா மசாலா

மேலும் எடுக்கும் ஒவ்வொரு முறையும் சுத்தமான, உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த மசாலா பேஸ்ட்டில் தேங்காய் இருப்பதால் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே ஒரே நேரத்தில் அதிக அளவில் தயாரித்து வைப்பதைவிடத் தேவைக்கேற்ப அவ்வப்போது தயாரிப்பது நல்லது. இனி ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா வீடுகளிலும் கமகமக்கும்.

வீட்டு சமையலில் ஹோட்டல் சுவையைக் கொண்டு வரும் மசாலா பேஸ்ட் செய்முறையையும், அதைக் குருமா, சால்னா, காளான் கிரேவிகளில் பயன்படுத்தும் வழியையும், தேங்காய் கெடாமல் பாதுகாக்கும் முறையையும் வாசகர் பெறுவார்.