

கொள்ளு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது குதிரைதான். காரணம் கொள்ளு குதிரைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பயறு வகை. அதே நேரத்தில், மனிதர்களும் பல நூற்றாண்டுகளாகக் கொள்ளுவை உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
கொள்ளுவின் ஆங்கிலப் பெயர் Horse gram. இதன் தாவரவியல் பெயர் Macrotyloma uniflorum.
குதிரைகளுக்குக் கொள்ளுவைக் கொடுக்கும் பாரம்பரியம் இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளது.
புரதச்சத்து: கொள்ளுவில் தாவரப் புரதம் உள்ளது. இது உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் உதவுகிறது. மேலும் கொள்ளுவில் மாவுச்சத்தும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை ஆற்றல் வழங்க உதவுகின்றன என்பதுடன் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால், சில பகுதிகளில் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கொள்ளு என்றாலே பெரும்பாலும் ரசம் தான் செய்வார்கள் வீடுகளில். ஆனால், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பல்வேறு தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த கொள்ளுப் பயறில் சுவையான பல உணவுகளைச் செய்யலாம். குறிப்பாக கொள்ளுவை நன்கு ஊறவைத்து, முழுமையாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.
வித்தியாசமான முறையில் கொள்ளுவை உணவில் சேர்க்க இந்த 5 ரெசிபிகள் உங்களுக்காக இங்கு.
1. கொள்ளு சுண்டல்
தேவை:
கொள்ளு – 1 கப்
பெரிய வெங்காயம் - 1
கடுகு – ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – 2 டேஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கொள்ளை நன்கு கழுவி சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவும். அப்போது தான் வேகும். குக்கரில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 5–7 விசில் வரும் வரை அல்லது நன்கு மென்மையாகும் வரை வேகவைத்து எக்ஸ்ட்ரா நீரை வடிக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து. நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தேவையான உப்புடன் வேகவைத்த கொள்ளுவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை மாலை நேர சிற்றுண்டியாக பிள்ளைகளுக்குத் தரலாம்.
2. கொள்ளு அடை
தேவை
கொள்ளு – ½ கப்
இட்லி அரிசி – 1 கப்
காய்ந்த மிளகாய் – 4
வெங்காயம்- 2
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பெருங்காயம் ஸ- சிறிது
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொள்ளு, அரிசி இரண்டையும் தனித்தனியாக 4–6 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லில் மாவை அடைபோல் தடிமனாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும். இதை காலை அல்லது இரவு டிபனுக்கு தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். பச்சரிசி சேர்த்தும் இதை செய்யலாம்.
3. கொள்ளு துவையல்
தேவை
கொள்ளுப் பயறு – ½ கப்
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கொள்ளை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய், பூண்டு வதக்கவும்.
வேகவைத்த கொள்ளு, புளி, தேங்காய், உப்பு சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.
இந்த துவையல் சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளும் டூ இன் ஒன் துவையல் ஆகும்.
4. கொள்ளு கட்லெட்
தேவை
வேகவைத்த கொள்ளுப் பயறு மற்றும் கடலை வகைகள் – 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
நறுக்கிய வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ¼ டீஸ்பூன்
பிரெட் தூள் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வேகவைத்த கொள்ளுப் பயறை நன்றாக மசிக்கவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மசாலாத்தூள்கள், உப்பு சேர்த்துக் கலக்கவும். சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டவும்.
பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு கூட சாஸ் வைத்துத் தந்தால் செம டேஸ்ட்.
5. கொள்ளு மசாலா கிரேவி
தேவை
கொள்ளுப் பயறு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
சீரகம், கடுகு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கொள்ளுப் பயறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் நன்கு வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வேகவைத்த கொள்ளுடன் தேவையான தண்ணீர் சேர்த்து 10–15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தண்ணீர் சுண்டி கெட்டித்தன்மை வரும் போது இறக்கி மூடி வைக்கவும்.
இந்த கிரேவி சாதம், சப்பாத்தி, தோசை, இடியாப்பம் என அனைத்திற்கும் ஜோடி ஆகும். இனி கொள்ளு குதிரைக்கு மட்டுமல்ல.. நமக்கும் ஆற்றல் தரும் நல்ல உணவாகும்.
வாசகர்கள் பாரம்பரியமான கொள்ளை வழக்கமான ரசத்தைத் தாண்டி, பல்துறை மற்றும் நவீன முறைகளில் சமைக்கக் கற்றுக்கொள்கிறார்கள்; இதன் மூலம் மறக்கப்பட்ட இந்த தானியத்தை சுவையான ககொள்ளு ரெசிபிஸ் ஆக மாற்றுகிறார்கள்.