

பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டலுக்கு சென்றால் முதலில் கேட்பது பூரியைத்தான். அவர்கள் அந்த சர்வர் கொண்டுவரும் அந்த பூரியின் பந்து போன்ற அழகும் அதனுடன் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலாவும் அவர்களின் கண்ணை ஈர்க்கும். அதனால்தான் அவர்கள் அது கேட்கிறார்கள். நம் ஒவ்வொரு தடவையும் நாம் பூரி செய்யும்போது இப்படி வரவில்லையே என்று யோசித்துக் கவலைப்படுகின்றோம்.
உங்க வீட்டு பூரி ஏன் உப்பாமல் போகிறது தெரியுமா?
மாவின் பதம், பூரியின் தடிமன், எண்ணெயின் சூடு உள்ளிட்ட சின்னச் சின்ன ரகசியங்களைப் பின்பற்றினால் வீட்டிலேயே பந்து போல உப்பிய பூரி செய்யலாம்!
காலை டிபனுக்கு பூரி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே தனி சந்தோஷம்தான்! சூடான எண்ணெயில் போட்டதும், மெதுவாக உப்பி, அப்படியே ஒரு சின்ன பந்து போல மாறும் பூரியைப் பார்க்கவே அழகாக இருக்கும்.
ஆனால், வீட்டில் பூரி செய்யும்போது மட்டும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிவிடும். மாவை சரியாகத்தான் பிசைந்திருப்போம். எண்ணெயையும் காய வைத்திருப்போம். ஆனாலும் பூரி மட்டும் உப்பாமல் தட்டையாகவே வந்துவிடும்!
“ஹோட்டலில் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக பூரி உப்புது?” என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்குப் பின்னால் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. சில சின்னச் சின்ன விஷயங்களைச் சரியாகச் செய்தாலே போதும்.
1. பூரியின் முதல் ரகசியம்… நீங்கள் பிசையும் மாவில்தான்!
பூரி மாவை சப்பாத்தி மாவுபோல ரொம்பவும் மென்மையாகப் பிசையக்கூடாது. கொஞ்சம் இறுக்கமான பதத்தில் பிசைவதுதான் சரி. இரண்டு கப் கோதுமை மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பிசையுங்கள். மாவு கையில் ஒட்டாமல், அதே நேரத்தில் மிகவும் கெட்டியாக இல்லாமல் இருக்கவேண்டும். மாவை பிசைந்ததும் 10 முதல் 15 நிமிடங்கள் மூடி வைத்தால் போதும். பூரிக்கான மாவை நீண்ட நேரம் ஊறவைத்து வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
2. உருட்டும் பக்குவம்.
இதுதான் பலரும் செய்யும் சின்னத் தவறு.
சப்பாத்தியைப்போல பூரியை மெல்லியதாகத் தேய்த்து விட்டால், அது அழகாக உப்பாமல் மொறுமொறுவென்று மாறிவிடும். பூரியை சப்பாத்தியைவிட சற்றுத் தடிமனாகவும், எல்லா இடங்களிலும் ஒரே சீராகவும் உருட்டவேண்டும். நடுவில் மெல்லியதாகவும், ஓரங்களில் தடிமனாகவும் இருந்தால் பூரி சரியாக உப்பாது.
3. உலர் மாவு அதிகம் பயன்படுத்த வேண்டாம்!
பூரியை உருட்டும்போது அதிகமாக உலர் மாவைத் தூவி உருட்டினால், அந்த மாவு எண்ணெயில் உதிர்ந்து எண்ணெயையும் பாதிக்கும்.
அதற்குப் பதிலாக, பூரி உருண்டையை லேசாக எண்ணெய் தடவி உருட்டலாம். இதனால் பூரியும் நன்றாக இருக்கும்.
4. எண்ணெய் சூடு… இதுதான் பூரியின் ‘மேஜிக்’!
பூரி உப்பாமல் போவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று எண்ணெய் போதுமான அளவு சூடாக இல்லாததுதான். எண்ணெய் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். ஒரு சின்ன மாவுத் துண்டைப் போட்டு பார்த்தால், அது உடனே மேலே வந்து மிதக்க வேண்டும். அப்போதுதான் பூரியைப் போட சரியான சூடு என்று தெரிந்துகொள்ளலாம்.
எண்ணெய் குறைவான சூட்டில் இருந்தால் பூரி எண்ணெயை அதிகமாகக் குடித்துவிடும். ரொம்ப அதிகமாகச் சூடாக இருந்தால் வெளியில் சீக்கிரம் நிறம் மாறி, உள்ளே சரியாக வேகாமல் போகலாம்.
5. எண்ணெயில் போட்டதும் செய்யவேண்டிய சின்ன டிரிக்
பூரியை எண்ணெயில் மெதுவாகப் போடுங்கள். அது மேலே வரத்தொடங்கியதும், கரண்டியால் அதன் மேல் சூடான எண்ணெயை மெதுவாக ஊற்றுங்கள்.. அல்லது மெதுவாக பூரியை எண்ணெய்க்குள் அழுத்தி விடுங்கள்.
அவ்வளவுதான்… சில நொடிகளில் பூரி அழகாக உப்ப ஆரம்பிக்கும்!
ஒருபுறம் நன்றாக உப்பியதும் திருப்பிப் போட்டு மறுபுறமும் சில விநாடிகள் வேகவிடுங்கள். அதிக நேரம் எண்ணெயில் வைத்திருக்க வேண்டாம்.
6. ஒரே நேரத்தில் நிறைய பூரி போடாதீங்க!
பூரி பொரிக்கும்போது அவசரப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பூரிகளை எண்ணெயில் போட வேண்டாம். ஒவ்வொரு பூரிக்கும் எண்ணெயில் பொரிந்து வேகும் அளவு இடம் இருக்கவேண்டும். அப்போதுதான் எண்ணெயின் சூடு சரியாகப் பரவி பூரி நன்றாக உப்பும். மேலும், மாவை உருட்டியவுடன் நீண்ட நேரம் வைத்திருக்காமல் உடனடியாகப் பொரிப்பதும் நல்லது. பூரி பந்து போல உப்ப இந்த மூன்று விஷயம் போதும்!
பூரி பந்து போல உப்ப இந்த மூன்று விஷயம் போதும்!
இனி பூரி செய்யும்போது இந்த மூன்று விஷயங்களை மட்டும் மறக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்:
மாவு — கொஞ்சம் இறுக்கமான பதம்.
பூரி — சப்பாத்தியைவிட சற்றுத் தடிமன்.
எண்ணெய் — சரியான சூட்டில் இருக்கவேண்டும்.
இந்த மூன்றும் சரியாக அமைந்துவிட்டால், எண்ணெயில் போன பூரி “ புஸ்!” என்று பந்து போல உப்பி வருவதை பார்த்து நீங்களே அசந்துபோய்விடுவீங்க!
அதுவும் சூடான பூரியுடன் உருளைக்கிழங்கு மசாலா, சுண்டல் அல்லது குருமா இருந்தால், வீட்டில் சாப்பிடும் டிபனே ஹோட்டல் ஸ்டைல் விருந்தாக மாறிடும்!
இதோ, ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால் செய்முறை உங்களுக்காக!
உருளைக்கிழங்கு மசால்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, கடுகு – ½ டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து உருளைக் கிழங்கைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், பூரிக்கு ஏற்ற சுவையான மசால் தயார்!
இந்த எளிய சமையல் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், எண்ணெய் குடிக்காமல் பந்து போல உப்பிய பூரிகளையும், உணவகச் சுவையில் உருளைக்கிழங்கு மசாலாவையும் நிமிடங்களில் செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்க முடியும்.