சாலையோரக் கடை கோபி மஞ்சூரியன் சுவை வீட்டிலேயே: மொறுமொறுப்பு குறையாமல் இருக்க 4 ரகசியங்கள்!

கடைகளில் கிடைக்கும் அதே சுவையையும் மொறுமொறுப்பையும் பெற இந்த 4 விஷயங்கள் தெரிஞ்சா போதும்.
கோபி மஞ்சூரியன்
கோபி மஞ்சூரியன்Gemini image
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

சில்லென்று பெய்யுற இந்த மழையில் தீபாவளி பர்சேஸுக்கு வெளியே போன ரோட்டோரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கோபி மஞ்சூரியனைப் பார்த்ததும் வண்டி தானா பிரேக் போடும் வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே காலிஃப்ளவர் மென்மையாகவும், காரசாரமான சாஸ் கலந்த அந்தச் சுவைக்கு ஈடு இணை கிடையாது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த கோபி மஞ்சூரியனை இனி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம். கடைகளில் கிடைக்கும் அதே சுவையையும் மொறுமொறுப்பையும் பெற சில சின்னச் சின்ன ரகசியங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.

கோபி மஞ்சூரியன் மொறுமொறுப்பாக வர 4 ரகசியங்கள்!

1. காலிஃப்ளவரை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்!

 காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்து வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் போட்டு வைக்க வேண்டும். பிறகு நன்றாகக் கழுவி கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் மட்டும் போட்டு எடுத்து வடிகட்ட வேண்டும். அதிக நேரம் வேகவிட்டால் காலிஃப்ளவர் மென்மையாகி வறுக்கும்போது மொறுமொறுப்பு கிடைக்காது. தண்ணீர் முழுவதுமாக வடிந்த பிறகுதான் மாவில் சேர்க்க வேண்டும்.

 2. மாவுக் கலவையில் கவனம் தேவை!

காலிஃப்ளவர் பூக்களுடன் மைதா, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றைச் சரியான அளவில் சேர்க்க வேண்டும். சோள மாவு மொறுமொறுப்பைத் தரும். அரிசி மாவு வெளிப்புறத்தில் நல்ல மொறுமொறுப்பான தன்மையைக் கொடுக்கும். மாவு மிகவும் தண்ணீராக இல்லாமல் காலிஃப்ளவர் பூக்களில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும் அளவுக்குக் கெட்டியாக இருக்க வேண்டும்.

 3. பொரிக்கும் எண்ணெயின் சூடு முக்கியம்!

காலிஃப்ளவரை பொரிக்குமபோது எண்ணெய் நன்றாகச் சூடாக இருக்க வேண்டும். அதேசமயம் அதிகத் தீயில் பொரித்தால் வெளியே மட்டும் சிவந்து உள்ளே வேகாமல் போய்விடும். மிதமான தீயில் சிறிய அளவுகளாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எண்ணெயில் போடக்கூடாது.

 4. சாஸில் கடைசியாகத்தான் கலக்க வேண்டும்!

 பொரித்த காலிஃப்ளவரை முன்கூட்டியே சாஸில் போட்டு வைத்தால் அதன் மொறுமொறுப்பு குறைந்துவிடும். வெங்காயம், குடைமிளகாய், பூண்டு, சாஸ் வகைகளைத் தனியாக வதக்கி வைத்துக்கொண்டு, பரிமாறுவதற்கு முன்புதான் பொரித்த காலிஃப்ளவரைச் சேர்த்துக் கிளற வேண்டும். இதுதான் கடை கோபி மஞ்சூரியனின் மொறுமொறுப்பான சுவைக்கான முக்கிய ரகசியம்!

வீட்டிலேயே கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1 பெரியது

மைதா – 3 டேபிள்ஸ்பூன்

சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

 சாஸ் தயாரிக்க:

 பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1

குடைமிளகாய் – 1

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயத்தாள் – சிறிதளவு

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!
கோபி மஞ்சூரியன்

செய்முறை:

முதலில் காலிஃப்ளவரைச் சிறிய பூக்களாகப் பிரித்து உப்பு, மஞ்சள்தூள் கலந்த வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைக்கவும். பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி, கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் மட்டும் போட்டு எடுத்து நன்றாக வடிகட்டவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் காலிஃப்ளவர் பூக்களைப் போட்டு எல்லாப் பக்கங்களிலும் மாவு படும்படி கலக்கவும். 

கோபி மஞ்சூரியன்
கோபி மஞ்சூரியன்Gemini image

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவர் பூக்களைச் சிறிது சிறிதாகப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் பரோட்டா போல வீட்டிலேயே லேயர் லேயராக வருவதற்கு இந்த ரகசியங்கள் போதும்!
கோபி மஞ்சூரியன்

இப்போது மற்றொரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து அதிகம் வதங்காமல் லேசாக வதக்கவும்.

இதனுடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளித்து சாஸ் நன்றாகக் கலக்கும்படி செய்யவும்.

கடைசியாக பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரைச் சேர்த்து அதிக நேரம் வதக்காமல் சாஸ் எல்லாப் பக்கங்களிலும் படும்படி வேகமாகக் கிளறவும். மேலே நறுக்கிய வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

அவ்வளவுதான்! சாலையோரக் கடைகளில் கிடைக்கும் அதே காரசாரமான சுவையில், வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் கோபி மஞ்சூரியன் தயார்.

முக்கியமாக கோபி மஞ்சூரியனைச் செய்தவுடன் சூடாகப் பரிமாறினால்தான் அதன் மொறுமொறுப்பான சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும்!

கடைகளில் விற்கும் அதே மொறுமொறுப்பும் காரசாரமான சுவையும் கொண்ட கோபி மஞ்சூரியனை வீட்டிலேயே சுத்தமாகத் தயாரித்து அசத்தும் கலை.